அலிவலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
அலிவலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில்,
அலிவலம், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610106.
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி
அறிமுகம்:
இவ்வூர் திருவாரூருக்கு நான்கு கிமீ கிழக்கில் உள்ள சுந்தரவிளாகம் சென்று அதன் கிழக்கில் ஒரு கிமீ தூரம் சென்றால் உள்ளது இரண்டு சிவன்கோயில்களும் பிற கிராம தேவதைகளின் கோயில்களும் உள்ளன. முதலாவது கோயில் பூமிநாதர் இரண்டாவது இந்த காசி விஸ்வநாதர். இக்கோயில் சிறிய கோயில் தான் ஆனால் தாத்பர்யமானது. இக்கோயில் பரம்பரையாக ஒரு சிவாச்சாரியார் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயில் இறைவன் காசி விஸ்வநாதர் இறைவி காசி விசாலாட்சி. முன்னொரு காலத்தில் காசி நகரத்தை சேர்ந்த ஒரு கன்னிகையை இவ்வூரை சார்ந்த ஒரு அந்தணர் திருமணம் செய்து கொண்டு வருகிறார். அப்பெண்ணோ நித்தம் காசி விஸ்வநாதரை தரிசிக்காமல் உணவு உண்பதில்லை. இப்படி ஒரு நிலையில் நெடுந்தொலைவில் உள்ள இவ்வூர் வந்து சேர்ந்த அப்பெண்ணோ இறை தரிசனம் செய்யாமலும், உணவு கொள்ளவும் இயலாமலும் உண்ணா நோன்பு இருக்கின்றாள். இவ்வூரிலோ வேறு காசி விஸ்வநாதர் மூர்த்தி இல்லாமல் போகவே, கணவன் வீட்டார் என்ன செய்வதென்று புரியாமலும் உண்ணா நிலையை தடுக்கவும் இயலாமலும் தவிக்கின்றனர். அப்பெண் தனது மனோ சக்தியால் தான் பிறந்தகத்திற்கு தெரியப்படுத்துகிறார்.
அவர்கள் அத்தல இறைவனை ஒரு மூர்த்தத்தில் ஆவாகனம் செய்து இங்கே பிரதிஷ்டை செய்கின்றனர். அவருடன் உடனுறையாக காசி விசாலாட்சியும் வந்து சேர்கிறார். இதன் பின்னரே பல மாத உண்ணா நோன்பை கைவிட்டு காசிநாதனை தரிசனம் செய்து உணவு உட்கொள்கிறார். இந்த பரம்பரையில் வந்தவரே இன்றைய குருக்கள் பரம்பரை ஆகும். பல தலைமுறை கடந்து இன்னும் அந்த ஈடுபாடு குறையாமல் பூஜைகள் நடக்கின்றன. அக்குடும்பத்தினரே சமீப காலத்தில் குடமுழுக்கும் செய்துள்ளன. அதனால் காசிக்கு நிகரான மூர்த்தி என்பதால் இங்கு வந்து செல்வோர் காசிக்கு சென்ற பெருமையை அடையலாம். மேலும் குழந்தை வரம் வேண்டி செல்வோர், இத்தல அம்பிகையை தொழ உடனடியாக பலன் கிடைக்கும். மலையான் மகளை தொழுவார் வெறுங்கையுடன் திரும்ப மாட்டார்கள் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை கிழக்கு நோக்கிய சிறிய கோயில் இறைவன் கிழக்கு நோக்கியும் அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். எளிமையான கோயில் என்றாலும் நல்லதொரு ஈர்ப்புடன் உள்ளனர் விஸ்வநாதரும் விசாலாட்சியும். இறைவன் எதிரில் அழகிய நந்தி உள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன் லிங்கோத்பவர் துர்க்கை உள்ளார். வடகிழக்கில் திருமஞ்சன கிணறு ஒன்றும் பைரவ மூர்த்தங்கள் உள்ளன. அக்னி மூலையில் திருமடைப்பள்ளி ஒன்றும் உள்ளது. திரு.கண்ணப்பா குருக்கள் வீடு கோயில் வாயிலிலேயே உள்ளது. அதனால் தரிசனம் எளிது.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அலிவலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி