அருள்மிகு ஹிங்குலாஜ் மாதா சக்திப்பீடத் திருக்கோயில், பாகிஸ்தான்
முகவரி
அருள்மிகு ஹிங்குலாஜ் மாதா சக்திபீடத் திருக்கோயில், லாஸ்பெலா மாவட்டம், பலூசிஸ்தான் பாகிஸ்தான்
இறைவன்
சக்தி: கோடரீ பைரவர்: பீமலோசனர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: பிரம்மராந்திரம் (தலையின் ஒரு பகுதி)
அறிமுகம்
சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கும் புகழ்பெற்ற ஹிங்குலாஜ் (ஹிங்ராஜ்) மாதாவின் ஆலயம், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கராச்சி நகரிலிருந்து கிட்டத்தட்ட 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு ஹிங்குலாஜ் மாதா கோவிலை முஸ்லீம்கள் நானி கி மந்திர் அல்லது பீபி நானி என்கிறார்கள்.[1] சிந்தி மொழியில் ஹிங்குலி என்றால், முன் வகிட்டுக் குங்குமப் பொட்டு அல்லது செந்தூரம் என்று பொருள். அன்னையின் வகிட்டுக் குங்குமம் வைக்கும் உச்சந்தலை (பிரம்மராந்திரம்) இப்பகுதியில் விழுந்து சக்தி பீடம் ஆனதால்தான் இப்புனித இடத்துக்கு ஹிங்குலாஜ் என்று பெயர் வந்ததாம். இந்த மகாசக்தி பீடேஸ்வரியின் திருநாமம் கோடரீ. இங்கே காவல் தெய்வமாக விளங்கும் இறைவன் (பைரவர்), பீமலோசனர்.
புராண முக்கியத்துவம்
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன் சக்கரத்தைப் பயன்படுத்தியபோது அன்னையின் வகிட்டுக் குங்குமம் வைக்கும் உச்சந்தலை (பிரம்மராந்திரம்)இங்கு விழுந்ததாகக் கூறப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
அழகாகத் தோற்றமளிக்கும் ஹிங்கோல் நதிக்கரையிலுள்ள ஒரு மலைக்குகையில் ஹிங்லாஜ் பீடம் உள்ளது. இப்பீடத்தின் கருவறையை அடைய, உயரம் குறைவாகத் தென்படும் குகைவாயில் வழியாக ஊர்ந்துதான் செல்ல வேண்டும். அன்னைக்காக ஹோமம் நடத்தப்படும்போது, ஹோமத்தின் பூர்ணாஹூதியின் போது எழும் உயர்ந்த ஜுவாலையில், கோடாரீ அன்னையின் திருவுருவம் ஒரு நொடி நேரத்தில் சிலருக்குத் தென்படும் என்பார்கள். ஆனால், ஹிங்லாஜ் பீடத்துக் குகைக் கருவறையில், வருடம் முழுவதும் இடைவிடாமல் எரியும் தீ ஜுவாலையில், அன்னையின் திருவுருவத்தைக் காணலாம் என்கிறார்கள். அந்த குகையில் இரண்டு சுயம்பு வடிவங்கள் உள்ளன. இந்த சுயம்புவே ஹிங்குலாஜ் மாதாவின் வடிவமாகும். சுயம்பு வடிவத்தில் செந்தூரம் பூசப்பட்டிருக்கும்.
திருவிழாக்கள்
ஹிங்குலாஜ் மாதாவை பூஜிக்க செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் மிகவும் உகந்தவையாகக் கருதப்படுகின்றன. நவராத்திரி இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கராச்சி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கராச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
பலூசிஸ்தான்