Monday Jan 27, 2025

அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோவில், ஸ்ரீ வைகுண்டம்

முகவரி

அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோவில், ஸ்ரீ வைகுண்டம் – 628 601, தூத்துக்குடி (மாவட்டம்). தொலைபேசி : +91 4630 256 476,

இறைவன்

இறைவன்: வைகுண்டநாதர் இறைவி: வைகுண்டவல்லி, பூதேவி

அறிமுகம்

வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது.இந்தியாவின் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 30 கிமீ தூரத்திலுள்ளது.9 நிலைகளும் 110 அடி உயரமும் கொண்டுள்ளது இக்கோவிலின் ராஜகோபுரம். மூலவர் வைகுண்டநாதர்; கோவிலுக்குள் இவர் சந்திர விமானத்தின் கீழ், ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் வைகுண்டநாச்சியார்.

புராண முக்கியத்துவம்

சோமுகன் என்னும் அசுரன், பிரம்மாவிடமிருந்து வேத சாஸ்திரங்களைத் திருடிச்சென்றான். இதனால் படைப்புத்தொழில் நின்று போனது. வருந்திய பிரம்மா, மகாவிஷ்ணுவை வேண்டி பூலோகத்தில் தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த சுவாமி, அசுரனை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். பிரம்மாவின் வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளி, “வைகுண்டநாதர்’ என்ற திருநாமம் பெற்றார். பால்பாண்டி தென்னகத்தில் குறிப்பாக மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் பால்பாண்டி என்ற பெயரை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டும் வழக்கம் உள்ளது. இது இத்தலத்து பெருமாளின் பெயராகும். பல்லாண்டுகளுக்கு முன், இக்கோயில் வழிபாடின்றி மறைந்து போனது. சுவாமி சிலையும் ஆற்றங்கரையில் ஓரிடத்தில் புதைந்திருந்தது. இவ்வேளையில் இங்கு மேய்ச்சலுக்கு வந்த அரண்மனை பசு, தொடர்ச்சியாக இங்கிருந்த புற்றில் பால் சுரந்தது. இதையறிந்து வந்த பாண்டிய மன்னன், அவ்விடத்தில் சுவாமி சிலை இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பினான். அன்றிலிருந்து தினமும் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து பூஜித்தான். இதனடிப்படையில் தற்போதும் தினமும் காலையில் இவருக்கு பால் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது. பாண்டியன் பால் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தமையால் இந்த சுவாமிக்கும் “பால்பாண்டி’ என்ற பெயர் ஏற்பட்டது.

நம்பிக்கைகள்

பக்தர்கள் பிறவாநிலை (மோட்சம்) கிடைக்க, இந்த இரு உலகங்களிலும் இடம் கேட்டு சுவாமியை வணங்குகின்றனர், ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்

நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி 1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம் 2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்) 3. செவ்வாய் : திருக்கோளுர் 4. புதன் : திருப்புளியங்குடி 5. குரு : ஆழ்வார்திருநகரி 6. சுக்ரன் : தென்திருப்பேரை 7. சனி : பெருங்குளம் 8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி (தொலைவில்லிமங்கலம்) 9. கேது : 2 . இரட்டைத் திருப்பதி இங்கு பெருமாள் சந்திர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோசங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும். பொதுவாக பெருமாள் ஆதிசேஷனில் சயனித்தபடி இருப்பார். ஆனால் இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனிசிறப்பாகும். வைகுண்டமும் உண்டு… கயிலாயமும் உண்டு: காவிஷ்ணுவின் இருப்பிடம் வைகுண்டம். சிவபெருமானுக்குரியது கயிலாயம். பக்தர்கள் பிறவாநிலை (மோட்சம்) கிடைக்க, இந்த இரு உலகங்களிலும் இடம் கேட்டு சுவாமியை வணங்குகின்றனர். இத்தலத்தில் சுவாமியே, வைகுண்டநாதராக அருளுவதால், இங்கு வேண்டிக்கொள்பவர்களுக்கு வைகுண்டத்தில் இடம் கிடைப்பதாக நம்பிக்கை. தவிர, இந்த ஊரிலேயே கயிலாசநாதர் (நவகைலாய தலம்) கோயிலும் உள்ளது. இந்தக் கோயிலில் வேண்டிக்கொள்பவர்களுக்கு கயிலாயத்தில் இடம் கிடைக்கும். இவ்வாறு, ஒரே ஊரில் வைகுண்டம், கயிலாயம் என இரண்டையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம். மணித்துளி தரிசனம் வைகுண்ட ஏகாதசியன்று உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு செல்வர். இவ்வேளையில் சன்னதியை அடைத்துவிடுவர். பின் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடை திறந்து, சுவாமிக்கு தீபாராதனை காட்டி உடனே அடைத்து விடுவர். ஒருசில மணித்துளிகளுக்குள் இந்த வைபவம் நடந்து முடிந்து விடும். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால் பிறப்பில்லா நிலை கிடைப்பதாக நம்பிக்கை.

திருவிழாக்கள்

கருடசேவைத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, தை தெப்பத்திருவிழா

காலம்

1000 to 2000

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஸ்ரீ வைகுண்டம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஸ்ரீ வைகுண்டம்

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top