அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
முகவரி
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிமாவட்டம் – 631 501.
இறைவன்
இறைவன்: வரதராஜன்,பேரருளாளன், இறைவி: மகா தேவி
அறிமுகம்
கிருதயுகத்தில், அந்நாளில் சத்தியவிரதம் என்றழைக்கப்பட்ட காஞ்சியில் திருவனந்த தீர்த்த கரையில் பிரம்மதேவர் அஸ்வமேத யாகம் நடத்தி மகாவிஷ்ணுவை தரிசனம் தரும்படி வேண்டவும், அப்போது அந்த வேள்வியிலிருந்து விஷ்ணு பகவான் கோடி சூரிய பிரகாசத்துடன் தோன்றி பிரம்மதேவனுக்கு காட்சிதந்தருளினாராம். அதுசமயம் பிரம்மனும் அங்கிருந்த மற்ற தேவர்களும் பெருமான் அதே இடத்தில் நித்யவாசம் செய்தருள வேண்டவே அதற்கிசைந்தாராம் பெருமான். அந்நேரம் அங்கேயிருந்த இந்திரனின் யானையாகிய ஐராவதம் பெருமானை தாங்கி நிற்க விருப்பம் தெரிவிக்க அதற்கும் இசைந்தாராம் கடவுள். யானை, மலை வடிவம் கொண்டு பெருமானை தாங்கி நிற்கிறதாம். கிரத யுகத்தில் பிரம்மா வழிபட்டு காட்சிகண்டது போல் த்ரேதாயுகத்தில் கஜேந்திரனெனும் யானையும், துவாபரயுகத்தில் தேவர்கள் குருவான பிரகஸ்பதியும், கலியுகத்தில் அனந்தன் எனும் சர்பராஜனும் பெருமாளை வழிபட்டு பேர் பெற்றதாக இத்தலத்து வரலாறு. கச்சி என்பது இவ்வூரின் பெயர். அத்தகிரி என்பது திருக்கோயிலின் பெயர். ஹஸ்தி ஸ்ரீஅத்தி ஸ்ரீயானை, இறைவனை கிரி ஸ்ரீமலைவடிவில் தாங்கிய இடம் ஆகவே அத்திகிரி. நிலமகளின் இடையணி (காஞ்சி) போல்வதாம் இந்நகர். ஆகவே காஞ்சிபுரம். ஸ்ரீபிரம்மன், அஞ்சிதம் ஸ்ரீபூஜித்தல், பிரம்மா பூஜித்த இடம். ஆகவே காஞ்சி என்பதும் கருத்து. மற்றும் காஞ்சி (ஆற்றுப்பூவரசு) செடிகள் அதிகமாக இருந்த காரணத்தினாலும் “காஞ்சி”எனப்பட்டதாம்.
புராண முக்கியத்துவம்
வைணவத்தில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக புகழ் பெற்றது காஞ்சி திரு வரதராஜ பெருமாள் கோயில் (அத்திகிரி). காஞ்சி ஒருசமய பொதுவிடமாகும். வைணவ மாபெரும் கோயிலாகிய வரதராஜ பெருமாள் கோயிலும் மற்றும் 13 திவ்ய தேசங்களும் இவ்வூரில் உள்ளன. சைவ பெருங்கோயிலாகிய திருஏகம்பமும் மற்றும் பாடல் பெற்ற நான்கு திருத்தலங்களும் இங்குள்ளன. ஜினகாஞ்சி (ஜைனகாஞ்சி) எனும் பகுதிதற்போது திருப்பருத்தி குன்றம் என்பது. இங்கு சிறப்பு வாய்ந்த ஜைனர் கோயில் உள்ளது.
நம்பிக்கைகள்
பொய்கையாழ்வாரும், வேதாந்ததேசிகரும் அவதரித்த ஊர். ஸ்ரீராமானுஜர் இளமையில் அத்திகிரிவரதனின் பேரருளை பெற்ற இடம். திருமழிசையாழ்வார் பெருமாளை சொன்ன வண்ணம் செய்வித்த இடம் இதுவே. வரதராஜபெருமாளுக்கு தொண்டாற்றி பரமபதம் அடைந்த திருக்கச்சி நம்பிகள் வாழ்ந்த ஊர் இதுவே. காஞ்சியின் பெருமையை காளிதாசர் “நகரேஷ {காஞ்சி” என்றும், ஆழ்வார் “கல்லுயர்ந்த நெடுமதில் சூழ்காஞ்சி” என்றும், அப்பர் சுவாமிகள் “கற்றோர் பரவும் காஞ்சி”, கல்வியில் கறையிலாத காஞ்சி” என்றும், ஸ்ரீதேசிகர் “காசி முதலான நகரமெல்லாம் கச்சிக்கு ஒவ்வா” என்றும் பாடி பரவியுள்ளனர். முக்தி தரும் ஸ்தலங்கள் ஏழனுள் தென்னாட்டில் அமைந்த ஒரே இடம் “திருக்கச்சி”. மற்றவை அயோத்தி, வடமதுரை, அரித்வார், உஜ்ஜையினி, காசி, துவாரகா. கோயில்கள் மலிந்தது காஞ்சி. விழாக்கள் இல்லாத நாளே இரா. ஆகவே இவ்வூர் “விழவறாகாஞ்சி” என புகழப்பட்டது. இத்திருக்கோயிலின் மேற்குகோபுரம் 7 அடுக்குகளும் கிழக்குகோபுரம் 9 அடுக்குகளும் கெண்டது. ஐந்து பிராகாரங்களுடைய இத்திருக்கோயில் மிகப்பெரியது. மூலவரை தரிசிக்க 24 தத்துவங்களுக்கு அடையாளமாக அமையப்பெற்ற 24 படிகள் ஏறிதான் அத்திகிரி மீது மூலவரை தரிசிக்க வேண்டும். பிரம்மாவுக்கும் மற்றதேவர்களுக்கும் கேட்டவரங்களை அளித்ததால் “வரதராஜன்” எனப்பட்டாராம். மூலத்தானத்தை சுற்றி வருகையில் முதல் சுற்றில் கூரையில் இரண்டு தங்க பல்லிகள் உள்ளன. இவைகளை கைகளால் ஸ்பரிசித்து கும்பிடுவோரின் நோய்நொடிகள், பாபங்கள் தீர்ந்தொழியுமாம். அத்திமரத்தாலான அத்திவரதன் சிலை இக்கோயில் குளத்தில் மூழ்கடிக்கப்பட்டிருக்கும். அதனை 40 வருடங்களுக்கொருமுறை வெளியில் எடுத்து 10 நாட்கள் மக்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டு பூஜாதிகள் நடத்தப்படும். இத்திருக்கோயிலில் தன்வந்தரி சந்நிதி தரிசிக்கத்தக்கது.
சிறப்பு அம்சங்கள்
காஞ்சியில் 108 சிவத்தலங்களும், 18 வைணவ கோயில்களும் உள்ளன. கடவுளர்கள் இல்லம் என புகழப்படுவது காஞ்சி. காஞ்சியில் புகழ்மிக்க ஏகாம்பரநாதர் கோயிலும், அன்னை காமாட்சியம்மன் கோயிலும், கந்தவேலின் கந்தகோட்டமும் சோமாஸ்கந்த வடிவில் அமையப்பெற்றுள்ளது. அர்த்த சாத்திரம் எழுதிய சாணக்யர், திருக்குறளுக்கு விரிவுரை எழுதிய பரிமேலழகர், ஸ்கந்தபுராணம் தமிழில் நமக்களித்த கச்சியப்ப சிவாச்சாரியார் ஆகிய பேரறிஞர்கள் தோன்றிய பூமி காஞ்சிபுரம். சங்கீதமும் மூர்த்திகளுள் ஒருவரான சியாமாசாஸ்திரி பிறந்த இடம் இதுவே. நாயன்மார்களில் திருக்குறிப்புத் தொண்டநாயனார், சாக்கியநாயனார், ஐயடிகள் காடவர் கோன்நாயனார் ஆகியோர் வாழ்ந்த பதி இதுவே. வைணவ ஆழ்வார்களில் முதலாமவராகிய பொய்கையாழ்வாரின் ஜன்மத்தலம் இதுதான். வேதாந்த தேசிகர் இங்கு தான் வாழ்ந்தார். இன்னும் பலப்பல வித்தகர்களை இவ்வுலகுக் களித்து முற்காலத்தில் பரதகண்டத்தில் சிறந்து விளங்கிய பல்கலைக்கழகம் அமையப்பெற்றிருந்த புராதன பட்டிணம் காஞ்சிபுரம். இங்குகல்வி பயின்ற தர்மபாலரும், தின்னாகரும் தான் ஹர்ஷர் காலத்தில் வடஇந்தியாவில் புகழுடன் விளங்கிய நாளந்தா பல்கலைக்கழகத்தில் முறையே தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்தனர். பௌத்த சமயதத்துவ நூல்களை எழுதிய போதிதர்மர் என்பவர் இவ்வூரினரே.
திருவிழாக்கள்
உற்சவங்கள் : இங்கு மாதாமாதம் உற்சவமே. குறிப்பாக வைகாசி மாதத்தில் நடைபெறும் வரதராஜபெருமாளின் கருடசேவை உலக பிரசித்தம்.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை