Sunday Jan 26, 2025

அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில் – அவிட்டம் நட்சத்திரம்

முகவரி

அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில், கீழக்கொருக்கை-61 401, பட்டீஸ்வரம் அருகில், கும்பகோணம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். Phone: +91 98658 04862, 94436 78579,+91-435-240 2660

இறைவன்

இறைவன் – பிரம்மஞான புரீஸ்வரர் இறைவி – புஷ்பவல்லி

அறிமுகம்

பிரம்மஞானபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் தாலுகாவில் பட்டீஸ்வரம் அருகே கீழக்கொருக்கை கிராமத்தில் அமைந்துள்ளது. பிரம்மனிடம் இருந்த வேதத்திரட்டுக்களை மது, கைடப அசுரர்கள் கடலுக்கடியில் ஒளித்து வைத்தனர். இதை மகாவிஷ்ணு மீட்டுக் கொடுத்தார். இருந்தாலும் பிரம்மனால் முன்பு போல் இயல்பாக படைப்புத் தொழிலை செய்ய முடியவில்லை. எனவே, அவர் விஷ்ணுவின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து, சந்திர புஷ்கரிணியில் நீராடி, அடிப்பிரதட்சணம் செய்து சிவனை வழிபட்டு வந்தார். ஒரு ஆவணி அவிட்ட நட்சத்திர நாளில், சிவன் பிரம்மனுக்கு ஞானம் கொடுத்தார். இதனால் பிரம்மா மீண்டும் சிறப்பாக படைப்புத்தொழில் புரிந்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்ம ஞான புரீஸ்வரர் ஆனார். எனவே தான் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ, தங்ளது பிறந்த நட்சத்திர நாளிலோ, ஆவணி அவிட்டத்தன்றோ இங்கு வந்து அடிப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தால் தலையெழுத்தே மாறிவிடும் என்பது ஐதீகம். அவிட்டம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: செல்வவளமும் மக்கள் செல்வாக்கும் இவர்களுக்கு இருக்கும். கம்பீரமான தோற்றம் கொண்டிருப்பர். மனோதிடம் பெற்றிருப்பர். கோபம் இவர்களின் இயல்பாக இருந்தாலும் தேவையான விஷயங்களில் நிதானத்தையும் கடைபிடிப்பர். மனைவியின் பேச்சுக்கு மதிப்பளிப்பர். கோயில் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், மனைவியுடன் அதிகார நந்தி, இரட்டை பைரவர், சூரியன், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர் சன்னதி உள்ளது. இக்கோயிலுக்கு அருகில் பட்டீஸ்வரம் துர்க்கை, தாராசுரம் கோயில்கள் உள்ளன.

புராண முக்கியத்துவம்

கோரக்க சித்தர் சிவாலய யாத்திரை சென்ற போது, இத்தலத்திற்கு வந்தார். ஒரு மடத்தில் அவர் தங்கினார். அங்கு ஏற்கனவே பல பக்தர்கள் தங்கியிருந்தனர். அசதியில் நன்றாக உறங்கி விட்டார். நள்ளிரவில் திடீரென விழிப்பு தட்டவே, கோரக்கருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் அருகில் ஒரு பெண் படுத்திருப்பதையும், அவளது சேலைத் தலைப்பு தன் மேல் கிடப்பதையும்கண்டுமிகவும் வருந்தினார். இதற்கு பிராயச்சித்தமாக தன் இரு கைகளையும் வெட்டி விட்டார். பின் அந்த மடத்திலேயே சில காலம் தங்கி, அங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, வெட்டுப்பட்ட கைகளால் தாளம் போட்டு, ஞானபுரீஸ்வரரையும், புஷ்பவல்லியையும் வணங்கி வந்தார். கோரக்கரின் பக்தியில் மகிழ்ந்தார் சிவன். சிவனின் அருளால் சித்தருக்கு மீண்டும் கை கிடைத்தது. கோரக்கரின் கை வெட்டுப்பட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு கோரக்கை எனவும், தனது குறுகிய கைகளால் பூஜை செய்ததால் குறுக்கை எனவும் வழங்கப்பட்டு தற்போது கொருக்கை என மாறி விட்டது.

நம்பிக்கைகள்

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். குழந்தைகளின் கல்வியறிவு, வியாபார விருத்தி, மன உளைச்சல் நீங்க, தோஷங்கள் நிவர்த்தயாக இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.கைரேகை போல, காலுக்கும் ரேகை உண்டு. இந்த கால்ரேகை இத்தலத்தில் படும்படி அவிட்டம் நட்சத்திர நாளில் அடிப்பிரதட்சணம் செய்வது சிறப்பு.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனுக்கும் அம்மனுக்கும் எதிரில் உள்ள இரண்டு நந்தியும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது சிறப்பு.

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி.

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top