Monday Jan 27, 2025

அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில், நகரத்தார்

முகவரி

அருள்மிகு தேசிகநாதசுவாமி திருக்கோயில், நகர சூரக்குடி, சிவகங்கை மாவட்டம்.

இறைவன்

இறைவன்: தேசிகநாதர் இறைவி: அவுடை நாயகி

அறிமுகம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து 8 கிமீ தூரத்தில் உள்ளது சூரக்குடி. சூரியன் வழிபட்ட தலம் என்பதாலும், சூரியச்செடிகள் நிறைந்த வனமாக இப்பகுதி இருந்ததாலும் முன்பு ‘சூரியக்குடி’ என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் ‘சூரியக்குடி’ என்ற பெயர் மருவி ‘சூரக்குடி’ என்று அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் ‘தேசிகநாதபுரம்’ என்றும் இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. இங்கு பழமையான தேசிகநாதர் என்று அழைக்கப்படும் சிவபெருமான் கோயில் உள்ளது. மூலவராக தேசிகநாதர் உள்ளார். இங்கு ஆவுடையநாயகியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சரஸ்வதி, ஆனந்த பைரவர், யோக தட்சிணாமூர்த்தி, முனீஸ்வரர் மற்றும் அறுபத்துமூவர் சிலைகள் உள்ளன. இங்கு நடராஜர் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். யோக தட்சிணாமூர்த்தி தலையில் கிரீடத்துடன் காட்சியளிக்கிறார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடன் தான் காட்சி தருவார். ஆனால் இங்குள்ள ஆனந்த பைரவர் கையில் கதாயுதத்துடன் காட்சி அளிப்பது கோயிலின் சிறப்பாகும். இங்கு பைரவர் தீர்த்தம் உள்ளது. கோயில் வளாகத்தில் நவக்கிரக மண்டபம் உள்ளது.

புராண முக்கியத்துவம்

புராண காலத்தில் பார்வதியின் தந்தை தட்சன், ஒரு யாகம் நடத்தினான். அந்த யாகத்தில் கலந்து கொள்ள தனது மருமகன் சிவபெருமானை யட்சன் அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பி அந்த யாகத்தை நிறுத்தும்படி தெரிவித்தார். இதன்பேரில் அங்கு சென்ற வீரபத்திரர், யாகத்தை நிறுத்தியதுடன், அதில் கலந்து கொண்ட சூரியன் உள்ளிட்டோரை தண்டித்தார். சிவபெருமானின் கோபத்திற்குள்ளான சூரியன், சூரக்குடிக்கு வந்து சாபவிமோசனம் தர வேண்டி சிவபெருமானை நினைத்து தவமிருந்தார். இதனால் மனமிரங்கிய சிவபெருமானும், சூரியனுக்கு சாப விமோசனம் தந்தார். இந்த நிகழ்வுக்கு பின்னர், இங்கு சிவபெருமானுக்கு கோயில் எழுப்பப்பட்டது என்பது புராணம். இங்குள்ள ஆனந்தபைரவரே கோயிலின் பிரதான மூர்த்தியாவார். பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பின்பே, சிவபெருமான் மற்றும் அம்பாளை வணங்குகின்றனர். இங்கு சிவபெருமான் மற்றும் அம்பாளுக்கு செய்யப்படும் கற்பூர ஆரத்தியை பக்தர்கள் தொட்டு வணங்க அனுமதி கிடையாது. பைரவருக்கு ஆரத்தி எடுத்த கற்பூரத்தட்டையே பக்தர்களுக்கு காட்டுகிறார்கள். பைரவருக்கு முக்கியத்துவம் தரும் வகையில், இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தேய்பிறை அஷ்டமியில் இங்கு சிறப்பு ஹோமம் நடக்கிறது. ஹோமம் முடிந்ததும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன. அதன்பின்னர் பைரவர் பிரகார உலா செல்கிறார்.

நம்பிக்கைகள்

ஐஸ்வர்யம் பெருக, மன அமைதி பெற பக்தர்கள் மூலவர் மற்றும் ஆனந்தபைரவரை வேண்டி வணங்குகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமி மற்றும் பைரவருக்கு வஸ்திரம் அணிவித்து, சிறப்பு வழிபாடு செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

சிவன் கோயில்களில் நடக்கும் விழாக்களில், சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோரே பஞ்சமூர்த்திகளாக வீதியுலா செல்வர். ஆனால் இங்கு நடக்கும் ஆனி உத்திர விழாவில் சண்டிகேஸ்வரருக்கு பதிலாக பைரவர் வீதியுலா செல்வது விசேஷமாகும். தினமும் காலையில் முதலில் சூரியனுக்கு பூஜை செய்யப்பட்டு, அதன் பிறகே மூலவர், உற்சவர் மற்றும் அம்பாளுக்கு பூஜை நடக்கிறது. சூரியன் இந்த தலத்தில் தவமிருந்தார் என்பதால், அவருக்கு சிறப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மதுரை மீனாட்சிக்கு அமைந்தது போல, இங்கு அம்மன் நான்கு , திருக்கரங்களுடன், மூன்று கண்களுடனும் காட்சி தந்து அருள் பாழிக்கிறாள். தெட்சினாமூர்த்தியின் முதுகுப் பகுதியும், ஆல மரத்தின் தண்டுப் பகுதியும் தனித்தனியே தோன்றும் வண்ணம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

ஆனி உத்திர விழா, கார்த்திகை மாதத்தில் சம்பகசஷ்டி, மார்கழி தேய்பிறை அஷ்டமியில் பைரவர் ஜென்மாஷ்டமி, ஆருத்ரா தரிசனம், அறுபத்துமூவர் குருபூஜை ஆகியவை இக்கோயிலின் விசேஷ தினங்கள். சம்பகசஷ்டியின்போது 6 நாட்களுக்கு ஹோமம் நடக்கிறது.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

நகரத்தார்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சூரக்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

காரைக்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top