Thursday Nov 21, 2024

அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில் – பூரட்டாதி நட்சத்திரம்

முகவரி

அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில், ரங்கநாதபுரம் போஸ்ட்-613 104, திருக்காட்டுப்பள்ளி வழி, திருவையாறு தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம். Phone: +91 94439 70397, 97150 37810

இறைவன்

இறைவன் – திருவானேஷ்வர் இறைவி – காமாட்சி அம்மன்

அறிமுகம்

காலபைரவர் பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்தார். இவற்றை ஏழு யானைகளின் மீது ஏற்றி பவனி வந்தார். இவ்வாறு, காலச்சக்கரத்தை படைத்தருளிய தலம் இது என தல புராணம் கூறுகிறது. மூலவர்விமானம் கஜ கடாட்ச சக்தி விமானம் எனப்படுகிறது. ஐராவத யானையும், தேவர்களின் தலைவன் இந்திரனும் பூரட்டாதி நாளில் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். எனவெ பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் அடிக்கடி சென்று வழிபட வேண்டிய தலம். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: மற்றவர்களின் மனதில் இருப்பதை அறிவதில் கெட்டிக்காரர்கள். திடமான மனமும், உடல் வலிமையும் பெற்றிருப்பர். சுக சவுகர்யங்களோடு வாழ்க்கை நடத்த விரும்புவர். மனைவியை மிகவும் நேசிப்பார்கள். பெரிய மனிதர்களிடம் நட்பு பாராட்டுவர். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவர். தொழிலில் அக்கறையோடு ஈடுபடுவர்.

புராண முக்கியத்துவம்

கால பைரவர் பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்து, அதை ஏழு யானைகள் மீது வைத்து, காலச்கரத்தை படைத்து அருளிய தலம் இது என புராணங்கள் கூறுகிறது. 27 நட்சத்திரங்களில் 25வது நட்சத்திரமாக திகழ்வது பூரட்டாதி. 25ன் கூட்டு எண் ஏழு என்பது கஜ(யானை) கடாட்ச எண். கஜ கடாட்ச க்திகள் கொண்ட விமானத்தை கொண்டதே இத்தலம். இப்படிப்பட்ட விமானம் கொண்ட தலத்தில், முனிவர்களும், மகான்களும், ஆச்சாரியார்களும் எப்போதும் தவம் செய்வதாக ஐதீகம். எனவே ஐராவத யானையும், தேவர்களின் தலைவன் இந்திரனும் பூரட்டாதி நாளில் இங்கு வந்து வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. கல்விக்குரிய ஸ்தலம் இது. மகாபாரதத்தில் கிருஷ்ணரே வியக்கும் வகையில் நல்லறிவு கொண்டவனாக பாண்டவர்களில் கடைசி தம்பியான சகாதேவன் விளங்கினான். இவன் ஜோதிட அறிவு கொண்டவன். பாரத யுத்தம் துவங்கும் முன்பு, துரியோதனன் இவனை நாடி வந்து, எந்த நாளில் போரைத் துவங்கினால் வெற்றி கிடைக்குமென இவனிடமே கேட்டான். தன்னை எதிர்த்து போரிட, தன்னிடமே ஆலோசனை கேட்க வந்த துரியோதனனை ஏமாற்ற சகாதேவன் விரும்பவில்லை. அமாவாசை அன்று போர் துவங்கினால் வெற்றி உனக்கே என அவன் நாள் குறித்துக் கொடுத்தான். அவனது கணிப்பு தப்பியதில்லை. ஆனால், கிருஷ்ணர் தான் தன் மாயத்தால் அமாவாசையை முந்தச் செய்து, துரியோதனனைத் தோற்கடித்தார். இவ்வாறு எதிரியை வெறுக்காத குணமும், உண்மையாகவும் நடந்து கொள்ளவும், சகாதேவன் போல் சாஸ்திர ஞானம் பெறவும் இங்கு வழிபடலாம்.

நம்பிக்கைகள்

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். ஏழு ஸ்வரங்களுடன் இசையில் சிறந்து விளங்க இத்தலத்து இறைவனை வழிபட சிறந்த பலனைத்தரும். ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்பது மதிகாரனாகிய சந்திரனுக்கும், ஐந்தாம் இடம் வித்யாகாரனாகிய புதனுக்கும் உரியது. சந்திரன் மதியை ஆள்பவர், புதன் அறிவை ஆள்பவர். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நல்ல மனம், சிறந்த புத்திகூர்மை கிடைத்து திகழ பூரட்டாதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. ஏழைகளுக்கு ஏழு வகையான வண்ண ஆடைகளை இங்கு வந்து தானம் செய்தால், ஏழேழு ஜென்ம பாவங்கள், தங்களது சந்ததியினரைத் தொடராமல் விலகும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

காஞ்சிப்பெரியவர் இத்தலத்தில் ஒரு வாரம் தங்கி தியானம் செய்துள்ளார். கோச்செங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோயில்களில் இது முதலாவது கோயிலாகும்

திருவிழாக்கள்

மாதம் தோறும் பூரட்டாதி நட்சத்திர நாளில் சிறப்பு அபிஷேகம்

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பூதலூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top