Monday Jan 27, 2025

அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் – விசாக நட்சத்திரம்

முகவரி

அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவில், பண்பொழி-627807 செங்கோட்டை தாலுகா, நெல்லை மாவட்டம். Phone: +91 04633-237131, 237343, 94435 08082, 94430 87005

இறைவன்

இறைவன்: முத்துக்குமாரசுவாமி

அறிமுகம்

திருமலை முருகன் கோயில் நெல்லை மாவட்டம் தென்காசி நகரிலிருந்து நேர்வடக்காக சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பண்பொழி கிராமத்தில் உள்ளது. இங்குள்ள மூலவர் பெயர் முத்துக்குமாரசுவாமி ஆகும். திருமலை 500 அடி உயரமுடையது மலைமீது ஏறிச்செல்ல 626 படிக்கட்டுகள் உள்ளன. மலைமீது திருமலைக்காளி அருள்பாலிக்கிறாள். இதை திரிகூடமலை என்றும் சொல்வர். இரண்டு மலைகள் இந்த மலையினைத் தொட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. பாதையின் நடுவில் நடுவட்ட விநாயகர் சன்னதி உள்ளது. பின்னர் இடும்பன் சன்னதியை வணங்க வேண்டும். மலை உச்சியில் ஒரு உச்சிப்பிள்ளையார் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் 16 கல் படிகள் உள்ளன. 16 செல்வங்களும் 16 படிக்கட்டுக்களாக இருப்பதாக கூறுகிறார்கள். மலை உச்சியிலுள்ள கோயிலின் தீர்த்தத்தை அஷ்டபத்ம குளம் என்று அழைத்தனர். தற்போது பூஞ்சுனை என்று இந்த குளத்தை அழைக்கிறார்கள். இங்கு இலக்கியங்களில் கண்ட குவளை என்னும் மலர் இதில் பூத்தது. அதை கரையில் இருந்த சப்த கன்னிமார் எழுவரும் முருகனை பூஜித்தனர். சப்தகன்னியர் சிலை சிவாலயங்களில் மட்டுமே இருக்கும். ஆனால், இங்கு முருகன் தலமாக இருந்தாலும் இங்குள்ள தீர்த்தக்கரையிலும் சப்த கன்னியர் இருப்பது வேறு முருகன் கோவில்களில் இல்லாத சிறப்பாகும். ‘விசாகம்’ என்றால் மேலான ஜோதி ‘வி’ என்றால் உயர்வானது, ‘சாகம்’ என்றால் ஜோதி எனப்படும். ஆகவே, விசாகம் என்றால் மேலான ஜோதி என்று பொருள். இந்த நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக் கிரணங்களை உடையது என்றும், இந்த மூன்றும் இந்த மலை மீது படுவதால், விசாக நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட, தங்கள் தோஷங்கள் அனைத்தும் நீங்கி, புனர் வாழ்வு கிட்டுமென்றும், செல்வங்கள் பெருகும் என்றும் திடமாக நம்புகின்றனர். ஆகவே, விசாக நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு சமயம் கிட்டும் பொழுதெல்லாம் இந்த தலம் வந்து முருகனை வணங்கினால் நலம் பல பெற்று வாழலாம் என்கின்றனர். விசாக நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: நடக்காததையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் படைத் தவர்கள். தொழில் செய்வதில் திறமை யானவர்கள். கலைகளில் நாட்டம் உள்ளவராயிருப்பர். அடிக்கடி தன்னைத் தானே புகழ்பவர்கள். தான தர்மங்களில் ஈடுபாடுடன் செயல் படுவர்.

புராண முக்கியத்துவம்

ஒரு காலத்தில் திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. இங்கு பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளியமரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் கனவில் எழுந்தருளி, “”பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீர் அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பாரும். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும்,” என்றார். அதன்படியே அரசருக்கு தகவல் தெரிவித்த பூவன்பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார். பூவன் பட்டரின் கனவில் வந்த சிலையை கடப்பாரை வைத்து தோண்டி எடுக்க முயன்றபோது சிலையில் மூக்கு பகுதியில்ல் கடப்பாரை பட்டு சிறு துளி உடைந்து விட்டது. அந்த சேதம் கூட பார்ப்பதற்கு அழகாக இருந்தது. இதனால் இதை வழிபட வந்த கிராம மக்கள் இதைப் பார்த்து முருகன் என்பதற்குப் பதிலாக ’மூக்கன்’ என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்கள். இந்த கோவிலுக்கு மண்டபம் எழுப்ப, கற்களை கீழே இருந்து வாழைமட்டையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி, சிவகாமி பரதேசி என்ற அம்மையார் மலை உச்சிக்கு கொண்டு போய் சேர்த்தார் என்பது சிறப்பான அம்சம். அதைப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் உள்ளது. பண்பொழி அருகில் உள்ள அச்சன்புதூர் என்ற சிற்றூரில் சிவகாமி அம்மையார் என்பவர் வசித்து வந்தார். இவரது கணவர் பெயர் கங்கைமுத்து தேவர் ஆகும். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் பல ஆண்டுகளாக இல்லை. எனவே, இந்த தலத்திற்கு வந்து முருகப்பெருமானிடம் மனம் உருகி, குழந்தை வரம் வேண்டினார். இங்கு கல் மண்டபம் கட்டுவதாகவும் வேண்டிக் கொண்டார். அதன்படியே, கற்களை இருவரும் வாழை மட்டையில் இழுத்து கொண்டு வந்து மண்டபத்தை பூர்த்தி செய்தனர். ஆனாலும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. இருப்பினும் இங்கு முருகப்பெருமானுக்கு அவர் தொண்டு செய்து கொண்டிருந்தார். அது சமயம், அங்கு வந்து தங்கிய ஒரு மகானிடம் தன் குறைகளைகூறினார். அவர் பெயர் வரதர் மஸ்தான் ஆகும். அவர் சிறிது நேரம் யோசித்து, நீ, இந்த முருகனையே உன் மகனாக ஏற்றுக்கொள்” என்றாராம். அதன் படியே, புளியரை என்ற கிராமத்தில் இருந்த அவரது சொத்துக்களை முருகப் பெருமானுக்கு எழுதி வைத்து விட்டார். அவர் காலமான பின்பு, சிவகாமி அம்மையார் துறவறம் பூண்டு, சிவகாமி பரதேசி அம்மையார் ஆனார். அந்த நேரத்தில், முருகப் பெருமானுக்கு எழுதி வைத்த சொத்துக்களை சிலர் ஆக்கிரமிக்க, அம்மையார் திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வெற்றி பெற்று, முருகப் பெருமானுக்கு திரும்ப கிடைக்க வழி செய்தார். இதற்கு ஆதாரமாக கல்வெட்டுக்களை நீதிமன்றத்தில் காட்டினார். இப்பொழுதும் இந்த கல்வெட்டின் நகல் படிவம் இங்கு உள்ளது. யானை மூலம் எடுத்து சென்ற உத்திரங்கள், கல்தூண்கள் மேலும் இத்திருக்கோவிலின் திருப் பணி நடைபெறும் பொழுது, பெரிய பெரிய உத்திரங்களும், கல்தூண் களும் யானைகள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டதாம். அந்த காலக் கட்டத்தில் பெரிய அளவு கயிறுகள் கிடைக்காத்தால், பனை நார்களை கயிறாக இணைத்து உத்திரங் களையும், கல்தூண்களையும் மலைக்கு ஏற்றிச் சென்றனர். சில சமயங்களில் இந்த கட்டு அவிழ்ந்து மலையிலிருந்து வேகத்துடன் கீழ் நோக்கி உருண்டு வருமாம். அது சமயம், இந்த மலையில் வசித்த துறவியான சிவகாமி அம்மையார் தன் தலையைக் கொடுத்து அந்த தூண்களைத் தடுத்து நிறுத்தினாராம். யானைகள் மறுபடியும் வரும் வரை அந்த இடத்திலேயே தூண்கள் இருக்கும். அந்த துறவி முருகப்பெருமான் தனக்கு இந்த அற்புத சக்தியை தந்து அருளியதாகக் கூறினாராம். இந்த அம்மையாருக்கும் மலையில் ஒரு சன்னதி உள்ளது.

நம்பிக்கைகள்

இதுதான் மூலவர் சன்னதி முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரங்களாக விசாகம், கார்த்திகை, உத்திரம் உள்ளது. ஆகவே, விசாக நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு சமயம் கிட்டும்பொழுதெல்லாம் இந்த தலம் வந்து முருகனை வணங்கினால் நலம் பல பெற்று வாழலாம் என்பது ஐதீகம். குழந்தை பிறந்து தொடர்ந்து இறந்துக்கொண்டே இருந்தால் மூக்கு குத்தி, மூக்கன் என பெயரிடுவதாக வேண்டிக்கொண்டால் அந்தக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பது நீண்டகால நம்பிக்கை. இரண்டு குழந்தைகள் தவறி, மூன்றாவது பிறக்கும் குழந்தைக்கு இந்தச் சடங்கை செய்வது மரபாக இருந்து வந்துள்ளது. பந்தளத்தை ஆண்ட மன்னர் தான் கேரளத்தின் எல்லையில் உள்ள இந்த கோவிலை எழுப்பினார். மலை மீது ஏற 623 படிக்கட்டுக்கள் அமைந்துள்ளது. அந்த படிக்கட்டுக் கள் ஸ்கந்த கோஷ்டப்பித்ருக்கள் வசிக்கும் தேவ படிக்கட்டுக்கள் என்கின்றனர். எனவே, இந்த தலம் வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய நமது சந்ததிகளுக்கு நல்ல சிறப்பான வாழ்வு அமையும், நல்ல வாரிசுகள் உருவாகும்.

சிறப்பு அம்சங்கள்

மலை உச்சியிலுள்ள கோயிலின் தீர்த்தத்தை அஷ்டபத்ம குளம் என்று அழைக்கின்றர். இந்தக் குளத்திற்கு தற்போது பூஞ்சுனை என பெயரிட்டுள்ளனர். இலக்கியங்களில் நாம் படித்த குவளை என்னும் மலர், தினமும் ஒரு மலர் தான் இந்தக் குளத்தில் பூத்ததாம். அதை கரையில் இருந்த சப்த கன்னிமார் எழுவரும் எடுத்து முருகனை பூஜித்தனர். சப்தகன்னியர் சிலை சிவாலயங்களில் மட்டுமே இருக்கும். ஆனால், இது முருகன் தலமாக இருந்தாலும் இங்குள்ள தீர்த்தக்கரையிலும் சப்த கன்னியர் இருப்பது சிறப்பு.

திருவிழாக்கள்

இங்கு சித்திரை முதல் நாள் படித் திருவிழா மிகவும் கோலாகலமாக ஜோதி பிரகாசமாக இருக்கும். வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கார்த்திகையில் தெப்ப உத்சவம், தைப்பூசம், தமிழ், ஆங்கில புத்தாண்டு சிறப்பான திருவிழாக்கள்.

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

செங்கோட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

செங்கோட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top