Tuesday Nov 12, 2024

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை

முகவரி

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, கும்பகோணம் – 612302, தஞ்சாவூர் மாவட்டம்.

இறைவன்

இறைவன்: சுந்தரேசுவரர் இறைவி: மீனாட்சி

அறிமுகம்

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளதால் இக்கோயிலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர். முருகப்பெருமான் இக்கோயிலில் ‘தகப்பன்சுவாமி’ எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால், இக்கோயில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

மும்மூர்த்திகளில் ஒருவரான படைப்பு கடவுள் பிரம்மாவிற்கு ஒரு சமயம் தான் என்ற கர்வம் தலைக்கேறியது. அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே முதல்வன் என எண்ணிக்கொண்டார். அதனால் கர்வம் தலைக்கேற ஆணவம் கொண்டார். அதனை அடக்க மனம் கொண்டார் முருகப்பெருமான். கைலாயத்தில் சிவனை தரிசிக்க பிரம்மன் வர நேர்ந்தது. அப்போது ஆணவம் தலைக்கேறிய பிரம்மன் முருகனை பாலன்தானே என அலட்சியமாக நினைத்தார். முருகன் பிரம்மனை அழைத்து பிரணவத்தின் பொருளையும், அதன் தத்துவத்தையும் கூறுமாறு கேட்டார். பிரம்மனால் பதிலளிக்க முடியவில்லை. அதனால் வெகுண்ட முருகன், பிரம்மன் தலையில் குட்டி சிறையில் அடைத்தார். இதனால் படைப்பு தொழில் பாதிப்படைந்தது. சிவபெருமான் பிரணவத்தின் பொருள் அறிந்தவரே அறியாதவர் அல்ல. பிருகு முனிவர் ஈசனை வேண்டி தான் ஜீவன் முக்தனாக வேண்டிய கடுந்தவம் புரிந்து வந்தார். தனது தவத்திற்கு இடையூறு ஏற்படாது இருக்க தன் தவத்தை தடுப்பவர்கள் பிரம்மஞானத்தை மறக்க கடவது என சாபமிட்டு தவம் செய்யலானார். அவருடைய தவாக்னி தேவர்களை பீடிக்க அவர்கள் மகாவிஷ்ணுவுடன் பரமேஸ்வரனை அணுகி பிரார்த்திக்க சிவபெருமான் தன் திருக்கரத்தை முனிவரின் சிரசில் வைத்து அவருடைய தவாக்னியை அடக்குகிறார். பிருகு முனிவர் பிரக்ஞை அடைந்து கண்விழிக்கிறார். சிவபெருமானைக் கண்டு வணங்கி மகிழ்கிறார். சிவனும் உன் தவத்தை மெச்சி உன் விருப்பத்தை அருள்கிறேன் என ஆசீர்வதித்தார். பிருகு முனிவர் சிவன் தன் தவத்தை கலைத்ததால் தன்னுடைய சாபம் சிவனை பாதிக்குமே என வருந்தி சிவனிடம் மன்னித்தருளும்படி கேட்கிறார். சிவனும் உன் வாக்கிற்கு பழுது வராது. நான் உன் சாபத்தை மகிழ்வுடன் ஏற்கிறேன் என்று கூறுகிறார். ஆத்மாவை புத்திர நாமஸி என்கிறது வேதவாக்கு. அதன்படி தன் பிள்ளையான சுவாமிநாதனிடம் ரிஷியின் வாக்கை உண்மையாக்க சிவன் பிரம்மோபதேசம் செய்து கொள்கிறார். இதுவே சிவனுக்கு பிரணவப் பொருள் மறக்க காரணமாகும். தேவர்கள் அனைவரும் சென்று நடந்ததையும் நடக்க தேவைப்படுவதையும் சிவனிடம் எடுத்துக் கூறினார். எத்தனையோ திருவிளையாடல்களை நடத்திய எனக்கு இது முருகப்பெருமான் மூலம் வரும் புதிய திருவிளையாடல் என்பதை உணர்ந்தார். முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும் படிக்கூறினார். பிரணவத்தின் பொருள் கூடத்தெரியாத பிரம்மனுக்கு படைப்பு தொழில் எதற்கு என எதிர் கேள்வி கேட்டார் முருகப்பெருமான். பிரம்மனுக்கும் தெரியாத பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என முருகனிடம் கேட்க எனக்குத் தெரியும் என்றார் முருகப்பெருமான். அப்படியானால் சொல்! சிவன் கேட்க, தாம் குருவாகவும், தாங்கள் சிஷ்யனாகவும் இருந்து உபதேசம் பெற வேண்டும் (தத்துவ உபதேசம்) என கூறினார். முருகப்பெருமானின் திருவிளையாடலின் உச்ச கட்டம் நெருங்கிவிட்டதை உணர்ந்தார் சிவபெருமான். கண்டறியாதன கண்டேன் என்ற திருநாவுக்கரசரின் பாடலின்படி….. தென்கையிலாயம் என அழைக்கப்படும் திருவையாற்றில் இருந்துதான் சிவனின் உபதேசம் பயணம் தொடங்கியது. ஆவணி மாதம், அஸ்த நட்சத்திரம் கூடிய அற்புதமான நன்னாளில் சக்தி, கணபதி உட்பட தன் படைபரிவாரங்களுடன் புறப்பட்டு நந்தியெம்பெருமானை விட்ட இடம் நந்தி மதகு என்றும், கணபதியை அமர மைத்த இடம் கணபதி அக்கிரஹாரம் என்றும், சக்தியை அமரவைத்தது உமையாள்புரம் என்றும், சிவபெருமானின் தலையில் உள்ள கங்கையினை அமர வைத்த இடம் கங்காதரபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. அதன்பின்னர் சிவபெருமானும் முருகனும் தனியாக அருகில் உள்ள மண்குன்று (மலை) பகுதியில் ஓம் எனும் பிரணவ பொருள் உபதேசம் நிகழ்த்திய தலமானதால் சுவாமிக்கே நாதனாக இருந்தமையால் இப்பகுதி சுவாமிமலை என அழைக்கப்பெறுகிறது. பிற்காலத்தில் இம்மண்குன்றினை கட்டுமலையாக அமையப்பெற்றது. இத்தலத்தில் முருகப்பெருமானை தேவர்கள் புடைசூழ வழிபட்ட தேவேந்திரன் தனது நினைவாக ஐராவதுத்தினை (வெள்ளை யனை) முருகப்பெருமானுக்கு வழங்கியதால் மூலவருக்கு முன் இன்றும் ஐராவதம் உள்ளது. (முருகன் திருக்கோயில்களில் சன்னதி முன் மயில் காணப்படும்). தன்னுடன் வரப்பெற்ற தேவர்களில் தமிழ் வருட பெயர் கொண்ட தேவதைகள் அறுபது பேரை இத்தலத்தில் முருகப்பெருமானுக்கு சேவை செய்ய விட்டு சென்றார். தமிழ் வருடத்தேவர்கள் அறுபது பேரும் இத்தலத்தில் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கள் முதுகு மேல் ஏறி தரிசிக்க வேண்டிய பாக்கியம் அருள முருகனிடம் இத்தலத்தில் அறுபது படிகளாக அமையப்பெற்றனர்.

நம்பிக்கைகள்

மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, இரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி அடியவர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம். நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் “தாத்ரி” என்பர். அதனால் சுவாமிமலையை “தாத்ரிகிரி” என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை “ஞானஸ்கந்தன்” என்று போற்றுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

நான்காம்படை வீடாகும். நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடப்பெற்ற ஸ்தலமாகும். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தையாகிய சிவபெருமானுக்கு உபதேசித்த தலமாகும். அறுபது தமிழ் வருட தேவதைகள் அறுபது படிகளாக அமையப்பெற்றது. ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தாண்டுகளில் திருப்படி திருவிழா நடைபெறும் சிறப்புமிக்க தலமாகும். காவிரி சுவாமிநாதனை வழிப்பட்டு இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் தீர்த்தத்தில் நீராடி தரிசிக்க வேண்டும் என பிரார்த்தித்து குமார தாரை என்கிற பெயரில் இவ்வூரில் தொடர்ந்து இருக்க அருள் பெற்றுள்ளார். கங்காதேவி முருகனை தரிசித்து தனது பாபவிமோசனம் பெற்றதால் தானும் காவிரியுடன் இணைந்து இத்தலத்தில் இருக்க அருள் வேண்டினார். முருகப்பெருமானும் தனது தலத்தில் விருட்சமாக இருக்க அருள்பாலித்தார். கங்காதேவி இத்தலத்தில் தாத்தாத்ரி (நெல்லி மரம்) தலவிருட்சமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். காவிரி (குமாரதாரை), நேத்ர புஷ்கரணி, சரவண பொய்கை, பிரம்மட்டான் குளம், வஜ்ர தீர்த்தம் ஆகிய பஞ்ச தீர்த்தங்கள் திருக்கோயில் பகுதியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் பானரூபமாகவும், சிவபெருமான் ஆவுடைபீடமாகவும் அமையப்பெற்ற நான்கு அடி உயரத்திற்கு இடது கரத்தை தொடையில் அமர்த்தியும், வலது கையில் தண்டத்துடனும், மார்பில் யக்யோபியம் (பூணுல்) தரித்தும், (சிரசில்) உச்சிக்குடுமியுடன் கோவணத்துடன் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி ஆகிய மூன்று சக்திகளுடன் கூடிய சக்தி வேலுடன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

திருவிழாக்கள்

சித்திரை பிரமோற்சவம் வைகாசி விசாகம் கார்த்திகை

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top