அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், திருத்தணி
முகவரி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,திருத்தணி-631 209, திருவள்ளூர் மாவட்டம். தொலைபேசி எண் : 044-27885225
இறைவன்
இறைவன்: தணிகாச்சலம், இறைவி: வள்ளி, தெய்வானை
அறிமுகம்
திருத்தணி முருகன் கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவின், வடதமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம்.[1] இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.[
புராண முக்கியத்துவம்
குன்றுதோராடும் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக முருகப் பெருமானின் கிரீடத்தில் ஜொலிக்கும் வைரக்கல்லாக இத்திருத்தலம் பிரகசமாக உள்ளது. முருகக் கடவுளின் பெயர் தணிகாச்சலம் எனவும் கூறப்படுகிறது. முருகப் பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபத்மனுடன் செய்த பெரும் போரும் வள்ளிய்ம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுகோபமும் தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் இதற்குத் தணிகை எனப் பெயரமைந்தது. தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனிவர்களின் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும் இதற்குத் தணிகை என் பெயரமைந்தது. முருகப் பெருமான் தன் கிரியா சக்தியாகிய தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டாற்போல் திருத்தணிகையில் தன் இச்சா சக்தியாக வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருந்தருள்கிறார். மேலும், இக்கடவுளை ஐந்து குறிப்பிட்ட தினங்களில் தொடர்ந்து வழிபடும் பக்தர்கள் கடவுளின் ஆசியை பெற்றும் அவரது வாழ்கையில் அரிய பேறுகளை பெற்றவர்கள் ஆகிறார்கள். திரேதா யுகத்தில் ராவணனை போரில் வென்று அதனால் ஏற்பட்ட பாவத்திற்கு பரிகார பூஜைகள் செய்ய ராமேஸ்வரம் சென்று திரும்பும் வழியில், சிவபெருமான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, திருத்தணிகையில் முருகப் பெருமானை வழிபட்டு மனச் சாந்தி பெற்றதாக புராணங்கள் கூறுகின்றது. துவாபர யுகத்தில் அர்ஜுனன் தென் பகுதிக்கான தீர்த்த யாத்திரை செல்லும் வழியில் இந்திருக்கோயில் சுவாமியை தரிசித்து ஆசி பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. திருத்தணிகையில் முருகனை வழிபட்டு தாரகாசூரனால் கவரப்பட்ட தமது சக்கரம் மற்றும் சங்கு முதலியவற்றைத் திருமால் மீண்டும் பெற்றார். அவர் உண்டாக்கிய விஷ்ணு தீர்த்தம், மலையின்மேல் கோயிலுக்கு மேற்கே உள்ளது. திருத்தணிகையில் பிரம்மதேவர் முருகப் பெருமானைப் பூஜித்துப் படைப்புத் தொழில் செய்யும் ஆற்றலை திரும்பப் பெற்றார். மேலும், சூரபத்மனால் கவரப்பட்ட தமது செல்வங்களையும் முருகன் அருளால் திரும்பப்பெற்றார். கலைமகளும் இந்தலத்தில் முருகனைப் பூஜித்தாள். கிழக்கே மலையடிவாரத்திலிருந்து மலைமேல் ஏறிச் செல்லும் வழியில், பாதித் தொலைவில் மலைபடிகளை அடுத்த வடபக்கத்தில் பிரம்மதேவர் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இது பிரம்மசுனை என அழைக்கப்படுகிறது. இதன் தென்கரையில் பிரம்மேசுவரர் கோயில் அமைந்துள்ளது. சூரபத்மனால் தேவலோகத்திலிருந்து கவர்ந்து கொண்டு செல்லப்பெற்ற, சங்கநிதி, பதுமநிதி, காமதேனு, சிந்தாமணி, கற்பகதரு முதலிய செல்வங்களை மீண்டும் பெறுவதற்காக இந்திரன் முருகனை இங்கு பூஜித்தான். திருத்தணிகை மலைக்குத் தென்புறத்தில் உள்ள ஒரு சுனையில், நீலோற்பல மலர்க்கொடியை நட்டு வளர்த்து அதன் பூக்களைக் கொண்டு காலை, மாலை, நண்பகல் என்று மூன்று வேளைகளிலும் இந்திரன் முருகனை பூஜித்தான். அதுபோல் அவன் ஸ்தாபித்து, வணங்கி அருள் பெற்ற விநாயகருக்குச் செங்கழுநீர் விநாயகர் என்று பெயர். அவனால் உண்டாக்கப் பெற்ற நீலோற்பல மலர்ச்சுனை இந்திர நீலச்சுனை என்னும் பெயர் பெற்ற தீர்த்தமாக மலைக்கோயிலின் தெற்கு வாயிலுக்கு நேராக இருக்கின்றது. இது கல்கார தீர்த்தம் என்வும் அழைக்கப்படுகின்றது. இத்தீர்த்தகத்தின் நீர்தான் சுவாமியின் திருமுழுக்கிற்கும், திருமடைப்பள்ளிக்கும் மற்றும் பூஜை செய்வதற்கும் தனிச்சிறப்பாகப் பயன் படுத்தப்படுகிறது. அதனால் இத்தீர்த்தத்தைத் தொலைவிலிருந்து தொழுதல் வேண்டுமேயன்றி வேறு எவ்வகையிலும் நாம் பயன்படுத்துதல் ஆகாது. பதி, பசு, பாசம் என்னும் இறை, உயிர், தளை ஆகிய முப்பொருள் இயல்புகளைக் கூறும் சைவ சித்தாந்த் நுட்பங்களை இங்கு முருகனை வழிபட்டுத் திருநந்தித் தேவர் அறிவுறுத்தப் பெற்றார். அவன் பொருட்டு முருகப் பெருமான் வரவழைத்த “சிவதத்துவ அமிர்தம்” என்னும் நதியே இப்பொழுது நந்தியாறு என் அழைக்கப்படுகிறது.முருகனின் அருளைப் பெற நந்தி தேவர் யாகம் புரிந்த குகை நந்தி குகை என அழைக்கப்படுகிறது. தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த போது மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் நாகத்தினை நாணாகவும் கொண்டு கடைந்தனர். அங்ஙனம் கடைந்த போது வாசுகி நாகத்தின் உடலில் பல வடுக்களும், புண்களும், தழும்புகளும் ஏற்பட்டு பெரிதும் துயர் விளைவித்தன. ஒரு சுனையில் நாள்தோரும் முறையாக நீராடி முருகனை வழிபட்டு, வாசுகி நாகம் அத்துயரங்களினின்று நீங்கி உய்த்தது. ஆதிசேச தீர்த்தம் விஷ்ணு தீர்த்ததிற்க்கு மேற்கே மலைப் பாதைக்குத் தென்புறம் இருக்கிறது.இங்கு முருகனை வழிபட்டு, அகத்திய முனிவர் முத்தமிழ்ப் புலமையும், சிவஞானத் தெளிவும் பெற்றார். அவர் உண்டாக்கிய அகத்திய தீர்த்தம் ஆதிசேச தீர்த்தத்திற்குத் தென் கிழக்கில் உள்ளது.
நம்பிக்கைகள்
முருகப் பெருமான் சரவணப் பொய்கை தீர்த்தத்தில் கார்த்திகை பெண்களுக்கு குழந்தையாக அவதரித்த திருக்குளம். திருத்தணிகை சரவணப் பொய்கை தீர்த்தத்தில் நீராடுவோர் தங்களது உடல் உபாதைகள், பாவங்கள் கலையப்ப்டுவதக ஐதீகம்.
சிறப்பு அம்சங்கள்
சற்றேற்குறைய அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறந்த தவயோகியாகிய அருணகிரிநாதர் இத்திருத்தலத்தின் பெருமையை திருப்புகழ் எனும் நூலின் மூலம் பாடல்கள் அமைத்து பாராட்டியுள்ளார். இவர் தமது பாடல்களில் தணிகை மலையை கைலாய மலைக்கு ஒப்பிட்டும் புகழ்ந்துள்ளார். மூலவரின் பாதத்தில், மார்பில், சிரசில் தொடர்ந்து மூன்று நாட்கள் சூரிய ஒளி விழுந்து காணப்படுவது பக்தி பரவசமூட்டும் நிகழ்ச்சியாகும்.
திருவிழாக்கள்
டிசம்பர் 31 – படித்திருவிழா ஆடிக்கிருத்திகை கந்தசஷ்டி பங்குனி உத்திரம் தைப்பூசம் ஆடித் தெப்பத் திருவிழா
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருத்தணி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருத்தணி
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை