அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் – மூலம் நட்சத்திரம்
முகவரி
அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில், மப்பேடு, பேரம்பாக்கம் வழி, திருவள்ளூர் மாவட்டம். Phone: +91 44 -2760 8065, 94447 70579, 94432 25093
இறைவன்
இறைவன் – சிங்கீஸ்வரர் இறைவி – புஷ்பகுஜாம்பாள்
அறிமுகம்
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, மூலம் நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில். பிரகாரத்தில் ஆஸ்தான விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீரபாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. வீரபாண்டியன் தலை கொண்டவன் என்ற பெயர் கொண்ட சோழ மன்னனான இரண்டாம் ஆதித்திய கரிகாலனால் கி.பி.976ல் கோவில் கட்டப்பட்டது. இவன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் தகப்பனார். பின்னர் இதே கிராமத்தில் பிறந்த அரியநாத முதலியார் கிருஷ்ண தேவராயர் மதுரையை ஆண்ட காலத்தில் தளவாயாக இருந்ததால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி கி.பி.1501ல் கோவில் இராஜ கோபுரம், மதில் சுவர் மற்றும் 16 கால் மண்டபத்தை கட்டி வைத்தார். ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். அதே போல் வீணையை கையில் ஏந்தியிருக்கும் கலைமகளான சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர். எனவே இத்தலத்தில் வீணையுடன் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை வணங்கினால், இசைத்துறையில் சங்கீத சக்ரவர்த்தியாகலாம் என்றும், மூல நட்சத்திரம் உள்ள வர்களின் குறைகளை நீக்கும் தலம் என்றும், தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். மூலம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: சோம்பல் என்பதே இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுவர். கல்விகேள்விகளில் ஆர்வம் நிறைந்திருக்கும். பார்ப்பதற்கு லட்சணம் பொருந்தியவர்களாக இருக்கும். இவர்கள் உணவு விஷயத்தில் அக்கறை கொண்டவர்களாக இருப்பர். பழங்களை விருப்பத்தோடு புசிப்பர். உடல் வலிமையோடு திகழ்வர்.
புராண முக்கியத்துவம்
சிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்தத் தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தைக் காண முடியாமல் போய்விட்டது. இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடியாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்திலுள்ள மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார். நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த இலிங்கத்திற்குப் பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி, மீண்டும் நடனம் புரிந்தார். சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால், இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பகுஜாம்பாள் என்றும், பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.
நம்பிக்கைகள்
கோயிலின் வட கிழக்கு மூலையில் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்ரீவீரபாலீஸ்வரர் சன்னதி உள்ளது. கொடி மரத்தின் அருகில் உள்ள நந்தியையும், மூலவரையும் பிரதோஷ காலத்தில் ஒரே நேரத்தில் அதன் எதிரில் கீழே உள்ள நவவியாகரண கல்லின் மீது ஏறி நின்று தரிசனம் செய்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. இங்குள்ள துர்க்கை மிகவும் விசேஷமானவள். 42 வாரம் இவளுக்கு தீபமேற்றி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம். மூலம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இவரை வணங்கினால் சிறப்பாக படிப்பார்கள்.
திருவிழாக்கள்
பிரதோஷம், சிவராத்திரி
காலம்
1000-2000 வருடங்களுக்கு முன்
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கடம்பத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடம்பத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை