Sunday Jun 30, 2024

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம்

முகவரி

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் கும்பகோணம் – 612 001 தஞ்சாவூர் மாவட்டம, போன்: 0435-2430349

இறைவன்

இறைவன்: சாரங்கபாணி, ஆராவமுதன் இறைவி: கோமளவல்லி

அறிமுகம்

சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. சோழ நாட்டு பனிரெண்டாவது திருத்தலம். இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும். இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். கருவறையிலுள்ள தெய்வங்‌கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இக் கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருப்பதாகும். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவில் கலைநயம் மிகுந்த சிற்பங்கள் தூண்கள் மண்டபங்கள் இராஜ கோபுரங்கள் கட்டப்பட்டவையாகும்.

புராண முக்கியத்துவம்

இந்து புராணத்தின் படி, பொற்றாமரை குளத்தின் கரையில் தவம் செய்த ஹேமரிஷி என்ற முனிவருக்காக இந்து கடவுளான விஷ்ணுவின் அவதாரமான வைணவ தெய்வம் சாரங்கபணி தோன்றினார். ஒருமுறை, பிரிகு முனிவர் விஷ்ணுவை அவரது இருப்பிடமான பாற்கடலில், சந்திக்க விரும்பினார். முனிவரால் விஷ்ணுவின் கவனத்தை ஈர்க்க இயலவில்லை. அதனால் ஏற்பட்ட கோபத்தில், முனிவர், விஷ்ணுவை மார்பில் உதைத்தார். ஆனால், விஷ்ணு, கோபத்தை காட்டாமல் அமைதியாக இருந்தார். இதனால், விஷ்ணுவின் மார்பில் வசிக்கும் மகாலட்சுமி கோபமடைந்தார். அவர் வைகுண்டத்தை விட்டு பூமியை அடைந்து பத்மாவதி வடிவத்தை எடுத்தார். விஷ்ணு அவரைப் பின்தொடர்ந்து அவளை மணந்தார். பத்மாவதிக்கு பழைய நினைவுகள் திரும்பின. அதனால், மீண்டும் விஷ்ணுவிடம் கோபம் ஏற்பட்டது. மகாலட்சுமியின் கோபத்தைத் தவிர்க்க, விஷ்ணு கோயிலின் நிலத்தடி அறையில் பாதாள சீனிவாசராக வசித்து வந்தார். இதற்கிடையில், பிரிகு முனிவர் விஷ்ணுவிடம் மன்னிப்பு கோரினார். மற்றும் மகாலட்சுமியை தனது அடுத்த பிறவியில், தனது மகள் கோமலவள்ளியாக பிறக்கும்படி கேட்டுக்கொண்டார். அடுத்த பிறவியில், முனிவர் ஹேமரிஷியாகப் பிறந்தார். மகாலட்சுமியை தனது மகளாக அடைய தவம் செய்தார். [3] விஷ்ணு முனிவரின் தவத்தால் மகிழ்ச்சி அடைந்தார், மேலும், அவரின் விருப்பத்திற்கிணங்க, மகாலட்சுமியை மகளாகப் பெற வரமளித்தார். இதனால், மகாலட்சுமி ஆயிரம் தாமரைகள் பூத்திருந்த பொற்றாமரைக் குளத்திலிருந்து வெளிவந்தார், இதனால் கோமலவள்ளி (தாமரையிலிருந்து தோன்றியவர்) என்று பெயரிடப்பட்டார். விஷ்ணு தனது தங்குமிடமான வைகுண்டத்திலிருந்து குதிரைகள் மற்றும் யானைகள் பூட்டப்பட்ட தேரில் ஆரவாமுதனாக பூமிக்கு இறங்கினார். மகாலட்சுமியை சமாதானப்படுத்தி, அவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக, விஷ்ணு, அருகிலுள்ள சோமேஸ்வரர் கோவிலில் தங்கியிருந்தார். இறுதியில், மகாலட்சுமியின் கோபம் தணிந்ததால், இவர்களின் திருமணம் இனிதே நடந்தது. சாரங்கபாணி (“கையில் வில் வைத்திருப்பவர்”) என்ற பெயர் சமசுகிருத வார்த்தையான சாரங்கத்தில் இருந்து உருவானது, சார்ங்கம் என்றால் விஷ்ணுவின் வில் என்றும், பாணி என்றால் கை என்றும் பொருள் ஆகிறது.

நம்பிக்கைகள்

கருவறைக்கு முன்பாக சந்தான கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

சிறப்பு அம்சங்கள்

உத்தான சயன பெருமாள் : பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் தலங்களில் பலவிதமான சயனங்களில் காட்சி தருவார். இங்கு “உத்தான சயன’ கோலத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.இத்தலத்திற்கு வந்த திருமழிசையாழ்வார், சுவாமியை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர், “நடந்த கால்கள் வலிக்கிறது என்றா பள்ளி கொண்டிருக்கிறாய்!’ என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். திருமாலின் அருளைக்கண்டு மகிழ்ந்த திருமழிசையாழ்வார், “அப்படியே காட்சி கொடு!’ என்றார். சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை “உத்தான சயனம்’ என்பர். திவ்ய பிரபந்தம் தந்த திருமால் : பெருமாளை குறித்து, பன்னிரு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த பாடல்கள், நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர் இத்தலத்து பெருமாளே ஆவார்.ஆம்! நாதமுனி என்பவர் சாரங்கபாணியை வணங்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை “ஓராயிரத்துள் இப்பத்தும்’ என்று சொல்லி பாடினர். இதைக்கேட்ட நாதமுனி, “இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா!’ என வியந்து மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. அப்போது அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார்திருநகரி (நவதிருப்பதி – தூத்துக்குடி மாவட்டம்) சென்று, நம்மாழ்வரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்குமென்றார். அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார். ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி தொகுத்தார். ஆழ்வார்கள் பல தலங்களிலும் மங்களாசாசனம் (பாடல்) செய்த இப்பாடல்களின் தொகுப்பே “நாலாயிர திவ்ய பிரபந்தம்’ ஆனது. ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால் இத்தலத்து சாரங்கபாணிக்கு, “ஆராவமுதாழ்வார்’ என்ற பெயரும் உண்டானது. அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் : திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்தனர். 108 திருப்பதிகளில் அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலங்கள் இவையிரண்டு மட்டுமே. இதற்கு அடுத்து கும்பகோணம் சாரங்கபாணி கோயிலே அதிக (ஏழு) ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டிருக்கிறது. பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தில் மங்களாசாசனம் செய்துள்ளனர். பாதாள சீனி வாசன் மேட்டு சீனி வாசன் : திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு அவள் முன்தோன்றிய சுவாமி, தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம், “பாதாள சீனிவாசர் சன்னதி’ என்ற பெயரில் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு, இவர், மேடான இடத்தில், மேட்டு சீனிவாசராக’ தாயார்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். பிரம்மச்சாரிகள், இல்லறத்தை தழுவிய பின்பே, மேன்மை பெற முடியும் என்ற வாழ்க்கை தத்துவத்தை இந்த அமைப்பு உணர்த்துவதாக உள்ளது. சொர்க்கவாசல் இல்லாதது ஏன்? : திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால், இத்தலத்தில் சொர்க்கவாசல் கிடையாது. இதற்கு காரணம் இருக்கிறது. இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும் என்பதால், சொர்க்கவாசல் கிடையாது. மேலும், இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தெட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்ல வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டிருக்கும். உபய பிரதான திவ்யதேசம் : திவ்யதேசம் தெரியும், அதென்ன உபய பிரதான திவ்யதேசம் என்கிறீர்றீகளா? இதற்கான விளக்கம் இதுதான்! திவ்யதேசங்களில் மூலவர் மட்டுமே பிரதானம் பெற்றிருப்பார். அவருக்கே பூஜையின்போது அனைத்து அலங்காரங்களும் செய்யப்படும். ஆனால் இக்கோயிலில் உற்சவருக்கு, மூலவருக்கான மரியாதைகள் செய்யப்படுகிறது. அதாவது உற்சவர் மூலவரின் பொறுப்பில் இருந்து, உபயமாக (அவருக்கு பதிலாக) செயல்படுபவராக இருக்கிறார். எனவே இத்தலம், “உபய பிரதான திவ்யதேசம்’ எனப்படுகிறது. வில்லுடன் பெருமாள் : பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம். இதன் பெயராலேயே இவர், “சார்ங்கபாணி’ என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது. கும்பகோணம் தீர்த்த ஸ்தலம் என்பதால், மூலவரை மகாமகத்திற்கு வரும் நதி தேவதைகளும், தேவர்களும் வணங்கியபடி காட்சி தருவதைக் காணலாம். மாமனார் வீட்வீ டோடு மாப்பிள்ளை : இந்த தலம் தாயாரின் பிறந்த வீடுவீ ஆகும். திருமால், அவளைத் திருமணம் செய்து வீட்வீ டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும் என்பது பொதுவான அம்சமானாலும், இத்தலத்தைப் பொறுத்தவரை, தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது. நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோயிலில் கோமளவல்லி தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோமாதா பூஜை தாயார் சன்னதியில் நடத்தப்பட்ட பிறகே, சுவாமி சன்னதியில் நடக்கிறது. பக்தனுக்கு சிரார்த்தம் செய்யும் பரந்தாமன்! லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர் சாரங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். இறுதிக்காலம் வரையில் சேவை செய்தார். இக்கோயிலின் கோபுரத்தை கட்டியவரும் இவரே. அவருக்கு குழந்தைகள் இல்லை. ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடியை அடைந்தார். சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி. இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்த போது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன்பக்தனுக்க ஈமக்கிரியை செய்துவைத்து கருணைக்கடலாக விளங்கினார். தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால், இதை பக்தர்கள் பார்க்க முடியாது.

திருவிழாக்கள்

சாரங்கபாணி கோயிலை பொறுத்தமட்டில் 1. ஏப்ரல்-மேவில் நடக்கும் சித்திரைத்தேர் உற்சவம் உலக பிரசித்தம். 2. தை (ஜன-பிப்) சங்கரமன் உற்சவம் 3. வைகாசி (மே-ஜுன்) வசந்த உற்சவம் 4. மாசி (பிப்-மார்ச்) தெப்பத் திருவிழா 5. மார்கழி (டிச-ஜன) வைகுண்ட ஏகாதசி குறிப்பிடத்தக்கவை.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சாரங்கபாணி

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top