அருள்மிகு சத்யவாசகர் திருக்கோயில், மாத்தூர்
முகவரி
அருள்மிகு சத்யவாசகர் திருக்கோயில், மாத்தூர் – அஞ்சல், (வழி) ஆக்கூர் – 609301, தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை RMS.
இறைவன்
இறைவன்: சத்யவாசகர், இறைவி: சௌந்தர நாயகி
அறிமுகம்
இத்தலம் திருஞான சம்பந்தர், சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழநாட்டு வைப்பு தலமாகும். மக்கள் வழக்கில் இன்று மாத்தூர் என்று வழங்குகிறது. ஆக்கூர் தான்தோன்றிமாடம் என்றழைக்கப்படும் பாடல் பெற்ற தலமான ஆக்கூருக்கு வந்து ஆக்கூர் மாரியம்மன் கோயிலை அடைந்து, இடப்புறமாகப் பிரியும் சாலையில் சிறிது தூரம் சென்றால் ஆதிகைலாச நாதர், ஆனந்த வல்லி அம்மை வீற்றிருக்கும் கோயில் வரும். இப்பகுதி சிற்றாக்கூர் எனப்படுகிறது. புதுப் பொலிவுடன் விளங்கும் இக்கோயில் வைப்புத்தலமன்று. இதே சாலையில் மேலும உள்ளே சென்றால் (சரளை – தார் கலந்த சாலை – மிகக் குறுகலான சாலை) பழமையான சிதலமான கோயில் உள்ளது. இதுவே வைப்புத்தலம். எதிரில், குளம் குட்டை போலவுள்ளது. கோயில் முழுவதும் அழிந்து இடிபாடுகளுடன் காட்சியளிக்கின்றது. இரண்டாண்டுகளாகவே பூஜைகள் நடைபெறவில்லை என்கின்றனர் ஊர் மக்கள். முன் மண்டபம் இடிந்து வீழ்ந்துள்ளது. கருவறையில் நுழையவே முடியாத நிலை. உடைபட்ட / இடிந்து வீழ்ந்துள்ள கற்கள் சிதறிக் கிடைக்கின்றன. இடிபாடுகளுக்கிடையில் மூலவர் சிவலிங்கமும், பின்னமான அம்பாள் சிலையும் உள்ளே இருக்கின்றன.
புராண முக்கியத்துவம்
சுவாமி – சத்ய வாசகர். அம்பாள் – சௌந்தர நாயகி. கண்வ மகரிஷி வில்வமரம் வளர்த்துப் பூஜித்த தலம். மார்க்கண்டேயரை காலன் உயிரைக் கவர வந்தபோது அவனைத் தடுத்து சத்திய வாசகம் சொன்னதால் இறைவன் சத்திய வாசகர் எனப் பெயர் பெற்றார். மார்க்கண்டேயனுக்கு சத்ய வாசகம்’ கூறி அனுப்பிய ஸ்ரீ சத்ய வாசகர், ‘இந்தப் பக்கம் வந்த சிறுவன் எவ்வழி சென்றான்?’ என்று கேட்ட யமனுக்கு, வழியை மாற்றிச் சொன்னார். அதனால், இவ்வூருக்கு மாற்று ஊர் என்று பெயர் ஏற்பட்டு, பின்னர் அதுவே தற்போது “மார்த்தூர்” என்றாகி விட்டது.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மாத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி