அருள்மிகு கைலாசநாதர்(சந்திரன்) திருக்கோவில் திங்களூர்
முகவரி
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர் – 613 204, தஞ்சாவூர் மாவட்டம்., தொலைபேசி எண் 4362 – 262499
இறைவன்
இறைவன்: ஸ்ரீ கைலாசநாதர், இறைவி: பெரியநாயகி.
அறிமுகம்
அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இந்த திங்களூர் கைலாசநாதர் கோயில்இருக்கிறது. இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் கைலாசநாதர் என்கிற பெயரிலும், அம்பாள்பெரியநாயகி என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். நவகிரகத் தலங்களுள் சந்திரன் தலம் திங்களூர் ஆகும். தமிழ் நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் இருந்து சுமார் 3 கி.மீ.தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் 33 கி.மீ.தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். தீர்த்தம் : சந்திர தீர்த்தம், காவிரி ஆறு. தலவிருட்சம் : வில்வம்/வாழை.
புராண முக்கியத்துவம்
தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெற வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். மந்திரமலையை மத்தாகவும் வாசுகி எனும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அவர்கள் பாற்கடலைக்கடைந்தபோது, ஆலகால விஷம் வெளிப்பட்டது. அசுரர்கள் வாசுகியின் தலைப்பக்கத்திலும் தேவர்கள் வால் பக்கத்திலும் நின்றுகொண்டு இருந்தனர். தேவர்களைக் காப்பாற்றுவதற்காக இறைவன் அந்த விஷத்தை தானே அருந்தினார். ஆனாலும் நஞ்சின் தாக்கத்தினால் தேவர்கள் மயக்கம் அடைந்துவிட்டனர். அப்போது அமிர்தத்துடன் எழுந்து வந்த சந்திரன், தேவர்களின் மயக்கத்தைத் தெளிவித்தான். இத்தலம் அப்பூதி அடிகள் நாயனார் அவதாரத் தலம். அப்பூதி அடிகள் நாயனார், திருநாவுக்கரசரின் பெயரில் தண்ணீர்ப் பந்தல் வைத்து நடத்திய தலமிது. திங்களூரில் அப்பூதி அடிகள் என்ற சிவனடியார் வாழ்ந்து வந்தார். இவர் திருநாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அவர் பெயரில் பல நற்பணிகளைச் செய்து வந்தார். ஒருமுறை திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசர், அப்பூதி அடிகளின் இல்லத்துக்கு வருகை புரிந்தார். திருநாவுக்கரசர் தமது இல்லத்தில் உணவருந்த வேண்டும், என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளை திருநாவுக்கரசர் ஏற்றுக் கொண்டார். அதற்காகத் தோட்டத்தில் சென்று வாழை இலை பறித்து வருமாறு அப்பூதி அடிகள் சிறுவனான தமது மகனை அனுப்பி வைத்தார். ஆனால் வாழைத்தோப்பில் பாம்பு கடித்து சிறுவன் இறந்து விட்டான். தமது துயரத்தைத் திருநாவுக்கரசரிடம் காட்ட விரும்பாத அப்பூதி, பிணத்தைத் துணியால் மூடி வைத்துவிட்டு திருநாவுக்கரசருக்கு உணவு பரிமாறினார். ஆனால் நிலைமையை உணர்ந்துகொண்ட திருநாவுக்கரசர் சிறுவனின் பிணத்தைக் கோவிலுக்கு எடுத்துச் சென்று இறைவன் முன் கிடத்தி ஒன்று கொலாம் அவர் சிந்தை” என்று இறைவனை மனமுருகப் பாடினார். சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் பத்தும் “திருப்பதிகம்” என்றழைக்கப் படுகின்றன.
நம்பிக்கைகள்
சூரியன், சந்திரன் ஆகியோர்களுக்கு தனி சன்னதி உண்டு. கோள்கள் சூரியனை பார்த்தவாறு அமைந்து உள்ளது. பங்குனி உத்திரம் நாளன்று காலை 6 மணிக்கு இறைவன் மீது சூரிய ஒளியும், மறுநாள் மாலை சந்திர ஒளியும் படரும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. தமிழகத்தில் அன்னப் பிரசாதத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும். நீர் தொடர்பான நோய்களுக்கு இவரே காரணம் ஆவார். காலரா, நுரையீரல் நோய்கள் போன்றவை நீங்க இவரை வழிபடலாம். வெண்மை நிற மலர்களால் அர்ச்சனை செய்து, வெள்ளை நிற ஆடைகள்உடுத்தி, முத்து மாலை அணிந்து, பெளர்ணமி விரதம் இருந்து வழிபடலாம்.
சிறப்பு அம்சங்கள்
குழந்தைகளுக்கு அன்னப்பிரசானம் சடங்கு செய்வதற்கு மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக இந்ததிங்களூர் கைலாசநாதர் கோயில் இருக்கிறது. அஸ்வினி, மிருகசீரிடம், உத்திரம், சுவாதி,திருவோணம், சதயம், ரேவதி போன்ற நட்சத்திர தினங்களிலும், சந்திரஹோரை வேளைகளிலும் இக்கோயிலில் குழந்தைகளுக்கு சந்திரனையும், பசுவையும் காண்பித்து ஒரு வெள்ளிக் கிண்ணத்தில்பால், தேன் கலந்து குழந்தைக்கு சோறூட்டும் சடங்கை செய்கின்றனர். இவ்வாறு சாப்பிடும்குழந்தைக்கு ஜலதேவதையின் அருளும், ஒளஷதி (மருந்து) தேவதையின் அருளும் கிடைத்து அக்குழந்தை பூரண உடல் நலத்தோடு இருக்கும் என்பது ஐதீகம். ஜல தேவதையின் அருளால் அக்குழந்தைக்கு ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படாது என்றும், ஒளஷதி தேவதையின் அருளால் மருந்து உண்டவுடன் அக்குழந்தையை பிடித்திருக்கும் நோய்கள் நீங்கும் என்பதற்காக இந்த சடங்கு செய்யப்படுகிறது. இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. திராவிடக் கட்டிடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது இக்கோவில். இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் நிலா வெளிச்சம் இங்குள்ள சிவலிங்கம் மேல் படும். நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்குரிய பரிகார தலமாக இக்கோயில் இருக்கிறது. மனநல பாதிப்பு உள்ளவர்கள், மனக்குழப்பம், சித்த பிரமை ஏற்பட்டவர்கள், தாயாரின் உடல் நலம் பெற விரும்புபவர்கள் மற்றும் ஜாதகத்தில் சந்திரனின் பாதகமான நிலையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இக்கோயிலில் வந்து வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும் என்பது பக்தர்களின் திடமான நம்பிக்கையாகும். மேலும் திருமணத்தடை, புத்திர பாக்கியம் இன்மை போன்றவை நீங்கவும் இங்கு வந்து பெரும்பாலான பக்தர்கள் வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கு வஸ்திரம் சாற்றியும், கோயில் திருப்பணிக்கு நன்கொடை அளித்து தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
திருவிழாக்கள்
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திங்களூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி