அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில், இராமேஸ்வரம்
முகவரி
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில் இராமேஸ்வரம் இராமநாதபுரம் மாவட்டம் PIN – 623526
இறைவன்
இறைவன்: ராமநாதசுவாமி, அம்மன்: பர்வத வர்த்தினி.
அறிமுகம்
இராமேஸ்வரம் இராமநாதஸ்வாமி திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டார். இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி.
புராண முக்கியத்துவம்
அரக்க குணங்களில் முதன்மையான காமத்தால் பிடிக்கப்பட்ட இராவணனிடமிருந்து சீதையை மீட்க, அரக்க இராவணனிடம் போர் புரிந்து அவனை கொன்றார் ராமன். ராவணன் பிராமணன் ஆதலால் ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் வரக்கூடாது என்பதற்காகவும் இராவணனைக் கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிசுடை செய்தார்.எனவே ராமனே ஈசுவரனை வணங்கியதால் இக்கோயில் மூலவர் சிவபெருமானுக்கு இராம நாத சுவாமி என்றும் ராமேசுவரம் அதாவது இராம ஈசுவரம் என்று பெயர் பெற்றது. இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி ராமநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கி வாழ்வு வளம்பெருகும் என்பது நம்பிக்கை. இங்கு கோயில் கொண்டுள்ள அம்மன் பெயர் பர்வத வர்தனி அம்மன். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது. சக்தி பீடங்களில் இத்தலம், சேதுபீடம் ஆகும். அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர். அம்மன் சன்னதி பிரகாரத்தில் வீடணன் அமைத்த ஆதிசேசன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சன்னதி அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட பந்தலில் நடராசர் காட்சி தருகிறார். யோகக் கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோச நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நாகவடிவில் உள்ள பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரசுவதி, சங்கரநாராயணர், அர்த்தநாரீசுவரர், ஏகாதச ருத்ர லிங்க சன்னதிகள் அமைந்துள்ளது.
நம்பிக்கைகள்
இறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கிய தலம் ஆகும். இரட்டை விநாயகரை குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் வேண்டிக்கொள்கின்றனர். நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அக்னி தீர்த்தக்கரையில் நாகர் பிரதிஷ்டை செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்
தீர்த்தமும் பலனும்: 1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம் 2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி) 3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி) 4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி 5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு 6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல் 7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல். 8. நள தீர்த்தம், 9. நீல தீர்த்தம், 10.கவய தீர்த்தம், 11.கவாட்ச தீர்த்தம், 12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல். 13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், 14. கங்கா தீர்த்தம், 15. யமுனை தீர்த்தம், 16. கயா தீர்த்தம், 17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல் 18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல் 19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி 20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல் 21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல் 22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)
திருவிழாக்கள்
கர்ப்பகிரகத்தில் உள்ள ஆதிசங்கரர் பிரதிசுடை செய்த படிக இலிங்கத்திற்கு நாள் தோறும் காலை 5 மணி முதல் ஆறு மணி வரை பாலாபிசேகம் செய்யப்படுகிறது.
காலம்
2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இராமேஸ்வரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
இராமேஸ்வரம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை