Sunday Jul 07, 2024

அருள்மிகு அஷ்டமூர்த்தீஸ்வரர் சிவன் கோயில், அவியானூர்

முகவரி

அருள்மிகு அஷ்டமூர்த்தீஸ்வரர் சிவன் கோயில், அவியானூர், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம்

இறைவன்

இறைவன் அஷ்டமூர்த்தீஸ்வரர்

அறிமுகம்

அவியன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெண்பாற்புலவர் இவனது கொடையைப் பாராட்டிப் பாடியுள்ளார். அந்தப் பாடல் புறநானூறு 383-ஆம் பாடலாக உள்ளது. இந்தப் பாடலில் இவன் ‘கான்கெழு நாடன் கடுந்தேர் அவியன்’ என்று இவன் சிறப்பிக்கப்பட்டுள்ளான். அவியன் திருமுனைப்பாடி நாட்டில் வாழ்ந்தவன். அவன் பெயரால் அவியனூரென்றோர் ஊர் பண்டைநாளில் இருந்தது. அஃது அவியனூர் நாட்டுக்குத்தலைநகராகவும் இருந்ததெனத் திருவதிகைக்கல்வெட்டொன்று (A. R. No. 419 of 1921) கூறுகிறது. பண்ருட்டி அருகே 15 கி.மீ. தொலைவில் உள்ளது அவியனூர். பண்ருட்டி-திருக்கோயிலூர் சாலையில் சென்று ஆனத்தூரில் வடக்கு நோக்கி திரும்பி ஐந்து கிமி சென்றால் அவியனுர் அடையலாம். இந்தக் கிராமத்தில் பழைமையான ஜலசயன சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் சுற்று பாதையை சீரமைக்க முற்பட்ட போது சிவலிங்க ஆவுடையார் (சிவலிங்கத்தின் வட்ட வடிவப் பகுதி) மட்டும் கிடைத்தது. அவியனூர் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சிறப்பு பெற்ற ஊர் என்பது ஆய்வுகள் மூலமாகவும், புறநானூறு, அகநானூற்று பாடல்கள் மூலமாகவும் அறியப்படுகிறது. அப்போது, தலைநகரத்துக்கான தகுதியைப் பெற்றிருந்த இந்த இவ்வூரை, அவியன் என்ற அரசன் ஆண்டார். அவர் பெயராலே அவியனூர் என அழைக்கபடலாயிற்று. இந்த மன்னருக்குப் பிறகு அவரது மரபினராக அவியன் பெரிய நாயனான விசயால தேவன், அவியன் மாளவச் சக்கரவர்த்தி ஆகியோரும் வாழ்ந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் மூலம் அறியப்படுகிறது. இங்கு சிவன், கோதண்டராமர் கோயில் என இரு கோயில்கள் உள்ளன. 1993ஆம் ஆண்டில் தொல்லியல் ஆய்வுத் துறையினரால் இந்த ஊரில் 6 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. தற்போது மேலும் 2 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று, நீரில் பள்ளிகொண்ட சிவபெருமான் (ஜலசயன தேவர்) கோயில் கருவறையில், சிவ லிங்கத்துக்குப் பின்புறச் சுவரில் இராசவிபாடன் என்று மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. இது விஜயநகர மன்னரின் மெய்க் கீர்த்திப் பெயராகும். எனவே, இது பழங்காலக் கோயிலாக இருந்து சிதைவுற்றப் பிறகு 500 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் கட்டப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த சிவலிங்க ஆவுடையானது, முழுமையான கல்வெட்டாக இருந்த கருங்கற்பலகையை உடைத்து செதுக்கியிருப்பதாகத் தெரிகிறது. கி.பி.9ஆம் நூற்றாண்டின் எழுத்தமைதியில் காணப்படும் இந்த கல்வெட்டில், மறைந்துபோன எழுத்துகள் போக எஞ்சியவற்றில், நூற்றி ஐம்பது நாநாழி நெல் கொடை அளிக்கப்பட்ட செய்தி மட்டும் அறியப்படுகிறது. மேலும், குளக்கரையில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சங்க கால செங்கல் முழுமையாகக் கிடைத்துள்ளது. இது 41 செ.மீ. நீளம், 26 செ.மீ. அகலமும், 8 செ.மீ. கனமும் கொண்டுள்ளது. மேலும், சோழர்கால செங்கற்களும், கருப்பு, சிகப்பு பானை ஓடுகளும் கிடைத்துள்ளன . சரி இப்போது கோயிலை பார்ப்போம். கடலூர் மாவட்டத்தின் வடக்கு எல்லை கிராமம் இந்த அவியானுர். கிழக்கு நோக்கிய கோயில், கோயில் கருங்கல் கொண்டும் விமானம் செங்கல்லாலும் கட்டப்பட்டுள்ளது. பிரதான வாயில் தென்புறம் உள்ளது. சாளரக்கோயில் என்பதால் பிரகாரத்தின் கிழக்கில் கருங்கல் சன்னல் வழியே மட்டுமே இறைவனை தரிசிக்கலாம். அழகிய நந்தி சாளரம் வழி இறைவனை நோக்கியபடி உள்ளது. தென்மேற்கில் மிக பழமை வாய்ந்த நான்கு அடி உயர விநாயகர், பலகை கல்லில் செதுக்கப்பட்டுள்ளதை காணலாம். பிரகாரத்தில் வேறு சன்னதிகளோ ஏதும் இல்லை. பழமையான சண்டேசர் மட்டும் உள்ளார். இறைவன் அஷ்டமூர்த்தீஸ்வரர் அழகிய அம்பிகை கண்ணடக்கம் சூட்டப்பெற்று புன்னகை பூத்திருக்கிறார் கோயில்தென் புறம் மட்டும் வழி உள்ளத்தால் அம்பிகை சன்னதி வெளிச்சமாகவும், இறைவன் சன்னதி இருளடைந்தும் இருந்தது. பூசாரிக்கு கை நடுக்கம் இருந்ததால் என்னைவிளக்கேற்ற சொன்னார். இருட்டறையில் ஓர் அகலை ஏற்றி தரை மட்டத்தில் இறைவனை தேடினேன். விளக்கொளி எங்கும் பரவ திடுக்கிட்டு நிமிர்ந்தேன் ஆம் ……ஆளுயரத்தில் பிரம்மாண்ட லிங்கம் வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி| மீளாமே ஆளென்னைக்கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி | ஓவாத சத்தத் தொலியே போற்றி ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அவியானூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பண்ருட்டி

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top