அருள்மிகு அட்சயநாதசுவாமி திருக்கோயில், மாந்துறை
முகவரி
அருள்மிகு அட்சயநாதசுவாமி திருக்கோயில், மாந்துறை, மணலூர் – அஞ்சல், துகிலி – வழி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 609 804.
இறைவன்
இறைவன்: அட்சயநாத சுவாமி இறைவி: யோகநாயகி
அறிமுகம்
மாந்துறையின் சிறப்பு இங்கு அமைந்துள்ள பழமையான சிவன் கோவில். இது அருணகிரிநாதர் மற்றும் அப்பர், திருஞானசம்பந்தர் முதலிய நாயன்மார்கள் ஆகியோரால் பாடப் பெற்ற திருவிடமாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.முன்னர் மாந்தோப்புக்கள் நிறைந்து காணப்பட்டமையாலேயே “மா-உறை” இடம் எனக் கூறப்பட்டுப் பின்னர் மாந்துறை என வழக்கில் மாறியது என்பர். தல வரலாற்றின்படி, மான்களாய்ப் பிறப்பெடுத்த அசுரர்களுக்கு முக்தி அளித்தமையால், மான்- உறை என்பதே மாந்துறையானது என்பதும் உண்டு. இந்தக் கோயிலின் தல மரம் மாமரமே என்பது குறிப்பிடத்தக்கது. கும்பகோணத்திற்கு அருகில் மாந்துறை என்றொரு ஊர் இருப்பதால், இது வடகரை மாந்துறை எனவும், கும்பகோணத்தில் அருகில் உள்ளது தென்கரை மாந்துறை எனவும் வழங்குகின்றன. இக்கிராமத்தில் சோழர் காலக் கல்வெட்டுக்கள் இரண்டு படி எடுக்கப்பட்டுள்ளமை இதன் தொன்மையைப் பறைசாற்றுவதாக உள்ளது. இக்கோயிலின் மூலவர் ஆம்ரனேஸ்வரர் எனப்படுகிறார் (ஆம்- என்பது வடமொழியில் மாங்காயைக் குறிப்பது). மிருகண்டு முனிவர் இங்கு வந்து வழிபட்டமையால் இவருக்கு மிருகண்டீஸ்வரர் என்று மற்றொரு பெயரும் உண்டு. அம்மனின் பெயர் வாலாம்பிகா (தமிழில் அழகம்மை; அழகு உயர்ந்த அம்மை என்று கூறுவதும் உண்டு) எனப்படுகிறது. சூரியனார், சந்திரனார் மற்றும் இந்திரன் ஆகியோர் இங்கு வழிபட்டதாக நம்பிக்கை நிலவுகிறது. லால்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆங்கரை போன்ற கிராமங்களில் வசித்தவர்களும், அவர்கள் மரபில் வந்து தற்போது உலகெங்கும் பரவியுள்ள பலரும், மாந்துறையில் உள்ள இக்கோயிலினை இன்றளவும் புண்ணியத்தலமாகவும், இந்த இறைவனை மாந்துறையான் என்ற வழக்குப் பெயருடன் குல தெய்வமாகவும் கொண்டுள்ளனர்.
புராண முக்கியத்துவம்
முனிவர் ஒருவர் தாம் சிவனுக்குச் செய்த தவறால், இத்தலத்தில் மான்களாகப் பிறந்து வந்த ஒரு அசுர தம்பதியினருக்கு மகனாக அவதரித்தார். ஒரு முறை இரைதேடச் சென்ற மான்கள் தமது சாப விமோசனம் வேண்டவே சிவன் அம்பால் அவற்றை வீழ்த்தி அவற்றிற்கு முக்தி அளித்தார். தாய் தந்தையரைக் காணாத பிஞ்சு மான் கலங்கி நிற்க, அம்மையப்பனே தாய்-தந்தை மான்களாக வடிவெடுத்து சிறு மானை ஆற்றுப்படுத்த அன்னையின் பாலாம் அமுதுண்ட பிஞ்சு மான் ஞானம் அடைந்தது.
சிறப்பு அம்சங்கள்
இக்கோயிலை ஒட்டி கிராமத்துத் தெய்வமான கருப்பண்ணசாமியின் பூசையிடமும் அமைந்துள்ளது. கிராமத்து வழக்கப்படி மூலவர் என சிலை ஏதும் இல்லாது, குதிரைகளும், வேல்களுமே காவல் தெய்வத்தின் உருவகமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். இக்காவல் தெய்வத்தின் காலடி மண் நோய்களைப் போக்கும் சக்தி கொண்டது எனும் நம்பிக்கை இங்கு வரும் பக்தர்களுக்கு மிக அதிகம் உண்டு.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மாந்துறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவிடைமருதூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி