Sunday Jan 26, 2025

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் – சதயம் நட்சத்திரம்

முகவரி

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் (சரண்யபுரீஸ்வரர்) திருக்கோயில், திருப்புகலூர், திருக்கண்ணபுரம் வழி, திருவாரூர் மாவட்டம். Phone: +91- 4366-237 198, 273 176, 94431 13025, 94435 88339

இறைவன்

இறைவன் – சரண்யபுரீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர் இறைவி – கருந்தார் குழலி, சூளிகாம்பாள்

அறிமுகம்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், திருநாவுக்கரசர் முக்தி அடைந்த தலம் அருள்மிகு முருக நாயனார் அவதரித்த தலம். அக்னி பகவானுக்கு இத்தலத்தில் உருவம் உண்டு முருக நாயனார் இத்தலத்தில் அவதரித்து வர்த்தமானேஸ்வரருக்கு பூத்தொடுத்து சேவை புரிந்துள்ளார். இறைவன் சுந்தரருக்கு செங்கற்களை பொன் கற்களாக்கி தந்த அற்புதம் நிகழ்ந்த தலம். காலசம்ஹார மூர்த்தி இங்கு தனியாக மூலஸ்தானம் கொண்டு எழுந்தருளியுள்ளார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது சதயம் நட்சத்திர நாளிலோ வழிபாடு செய்ய வேண்டிய தலம். சதயம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டிருப்பர். பால் பாக்கியம் பெற்று செல்வவளத்தோடு வாழ்வர். பொறுமை மிக்க இவர்கள், விசாலமான சிந்தனையுடன் செயல்படுவர். மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். தீர்க்கமான யோசனைக்குப் பிறகே செயலில் ஈடுபடுவர். செயல்களில் திறமையும், நல்ல நடத்தையும் கொண்டிருப்பர்.

புராண முக்கியத்துவம்

அசுர வம்சத்தை சேர்ந்த பாணாசுரனின் தாயார் மாதினியார். சிவபக்தை. தன் தாய் செய்யும் சிவபூஜைக்காக, அவள் இருக்கும் இடத்திற்கே தினமும் புதுப்புது லிங்கங்களை கொண்டுவந்து சேர்ப்பது பாணாசுரனின் வழக்கம். ஒருமுறை விண்ணில் பறந்த அவன், ஓரிடத்தில் ஏராளமான லிங்கங்கள் இருப்பதை பார்த்தான். அதில் ஒரு லிங்கத்தின் அமைப்பு அவனது கருத்தைக் கவர்ந்தது. இதைக் கொண்டு சென்றால், தாய் மிகவும் மகிழ்வாள் என்று கருதிய பாணாசுரன், லிங்கத்தை எடுத்தான். ஆனால், அது அசையவில்லை. லிங்கத்தைச் சுற்றிலும் அகழி தோண்டி பெயர்த்தெடுக்க முயன்றான். ஆனால், அகழியில் தண்ணீர் நிரம்பி, லிங்கத்தின் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இறைவா இதென்ன சோதனை. என் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நான் இனியும் உயிர் வாழ்ந்து பயனில்லை எனச் சொல்லிவாளை எடுத்து தலையை அறுக்க முயன்றான். அப்போது அசரீரி ஒலித்தது. பாணாசுரனே உனது தாயாரின் பூஜைக்கு நாம் எழுந்தருள்வோம் என்றது. உடனே லிங்கத்தின் உச்சியில் ஒரு புன்னை மலர் பறந்து வந்து அமர்ந்தது. உடனே மறைந்து விட்டது. அது மாதினியாரின் இருப்பிடத்திற்கே சென்றதும், மகிழ்ந்த அவள் பூஜை செய்தாள். பூஜை முடிந்ததும் திருப்புகலூருக்கே திரும்பி விட்டது. இப்படி, பக்தர்கள் இருக்குமிடத்திற்கு ஓடிவந்து அருள் செய்யும் சிவனுக்கு அக்னிபுரீஸ்வரர் என பெயர் உருவானது. ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து போனார். இதனால் உலகில் யாகம் முதலியன நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட லிங்க பூஜை செய்தனர். அவரது உத்தரவுப்படி அக்னி பகவான் மீண்டும் வந்தார். அவருக்கு இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை, ஏழு ஜூவாலையுடன் சிவன் ஒரு உருவத்தையும் படைத்தார். அக்னி பகவானுக்கு அனுக்கிரகம் செய்ததால் இறைவனுக்கு “அக்னீஸ்வர சுவாமி’ என்ற பெயர் ஏற்பட்டது. சரண்ய மகராஜா என்பவரால் பூஜிக்கப்பட்டதால் சரண்யபுரீஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. அக்னீஸ்வரர் கோயிலின் நான்கு புறமும் அகழி சூழ்ந்திருந்தது. கோயிலுக்குள் செல்ல வழியில்லாததால், முன்பகுதி அகழியை தூர்த்து வழி ஏற்படுத்தினர். ராஜராஜன் காலத்து கல்வெட்டுகள் இருப்பதன் மூலம் தொன்மையான கோயில் என்று தெரிய வருகிறது. இங்குள்ள அம்பாளுக்கு கருந்தார்குழலி என்றும், சூலிகாம்பாள் என்றும் பெயர். இவள் தன் பக்தையின் மகளுக்கு பிரசவம் பார்த்ததாக வரலாறு உள்ளது. கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட, அம்பாளை வழிபட்டு பலனடையலாம். சாயரட்சை காலத்தில் ராஜராஜேஸ்வரி கோலத்தில் அம்பாள் வெள்ளைப்புடவை அணிவது வழக்கம். திருமணமாகாத பெண்கள் அம்பாளுக்கு வெள்ளைப்புடவை சாத்தினால் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கையுள்ளது. திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி அர்ச்சனை செய்கிறார்கள். சூளிகாம்பாள் என்னும் பெயருடைய இந்த பெருந்தகையாள் தெற்குப் பார்த்த முகமுடையாள். கருந்தாள் என்று எல்லோராலும் கருதப்படுவாள். நளச் சக்கரவர்த்திக்கும் சனீஸ்சுவர பகவானுக்கும் ஒரே சந்நிதி. நள சக்கரவர்த்தி பாணாசுரன் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும் இதிலிருந்து 7 கல் தொலைவில் உள்ள திருநள்ளாறில் நான் விலகிக் கொள்கிறேன் என்று அசரீரி ஏற்பட்டதாகும். அப்பர் சுவாமிகள் தனது 81வது வயதில் இத்தலத்தில் உழவார பணி செய்து முக்தி அடைந்த தலம். அப்பர் சுவாமிகளுக்கு தனி சந்நிதி உள்ளது. சித்திரை சதயத்திற்கு 10 தினங்களுக்கு முன்பிருந்தே திருநாவுக்கரசர் திருவிழா ஆரம்பமாகி சமண மதத்திலிருந்து சைவ மதமாற்ற, முதல் அரசால் ஆணையிடப்பட்ட ஆக்ஞைகள், உழவாரப் பணியின் உயர்வு, அரம்பையர் நடனம், அப்பர் ஐக்கிய காட்சி வரை இன்னும் அப்படியே நடைபெற்று வருகிறது. அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக ஆகும்போது பக்தர்கள் கண்ணில் நீர் வழிய தரிசிப்பது கண்கொள்ளா காட்சி ஆகும். ஒரே கோயிலுக்குள் திருநாவுக்கரசரும், சுந்தரரும் பாடிய இரு சன்னதிகள் உள்ளது.

நம்பிக்கைகள்

சதயம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். பெண்களுக்கு பிரசவ காலத்தில் வயிற்றில் வலி ஏற்படாமல் இருக்க இங்கு வழிபடுகிறார்கள்.இங்கு அம்பாளே ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததாக புராணம் சொல்வதால் இங்கு எண்ணெய் பிரசாதம் தரப்படுகிறது. அது பிரசவ வலியை போக்கி சுகப்பிரசவம் அடையச் செய்வதால் பெண்கள் இங்கு பெருமளவில் வந்து வழிபடுகிறார்கள். அக்னீசுவரரை வணங்கு வோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. புதிய வீடு கட்டுபவர்கள் செங்கற்களை வைத்து பூஜை செய்து மனை முகூர்த்தம் செய்து வருகின்றனர். வாஸ்து பூஜைக்கு இத்தலம் மிகவும் விசேஷமானது.

சிறப்பு அம்சங்கள்

இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் எழுந்தருளி அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார். அக்னி பகவானுக்கு இத்தலத்தில் உருவம் உண்டு. 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் உடையவராக உள்ள இந்த அக்னி பகவான் விக்கிரகம் மிகவும் அபூர்வமானது. இறைவன் சுந்தரருக்கு செங்கற்களை பொன் கற்களாக்கி தந்த அற்புதம் நிகழ்ந்த தலம். இந்த காரணத்தால் புதிய வீடு கட்டுபவர்கள் செங்கற்களை வைத்து பூஜை செய்து மனை முகூர்த்தம் செய்து வருகின்றனர். வாஸ்து பூஜைக்கு இத்தலம் மிகவும் விசேஷமானது. நவக்கிரகங்கள் இங்கு மற்ற கோவில்களில் இருப்பதைப் போல் இல்லாமல் “ட” என்ற அமைப்பில் இருக்கிறார்கள்.

திருவிழாக்கள்

வைகாசி மாதம் – வைகாசி பூர்ணிமா – பிரம்மோற்சவம் – 10 நாட்கள் திருவிழா – அன்றைய தினம் தல புராணப்படி அருள்மிகு சந்திரசேகரர் அக்கினிபகவானுக்கு காட்சி அளித்தல் நிகழும். மாதங்கள் தோறும் முக்கிய திருவிழாக்கள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. சித்திரை மாதம் – சதய நட்சத்திரத்தன்று – 10 நாட்கள் – அப்பர் பக்தோற்சவம் இதுவும் இத்தலத்தில் நடைபெறும் மிக முக்கிய திருவிழா ஆகும். மாதாந்திர பிரதோஷ நாட்களில் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்த்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

HRCE

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top