Sunday Oct 06, 2024

அத்தாளநல்லூர் கஜேந்திரவரதர் சுவாமி திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அருள்மிகு கஜேந்திரவரதர் சுவாமி திருக்கோயில்,

அத்தாளநல்லூர்,

திருநெல்வேலி மாவட்டம் – 627 426.

போன்: +91- 4634 – 287195

இறைவன்:

ஆதி மூலம் 

இறைவி:

ஆண்டாள்

அறிமுகம்:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் ஆதி மூலம் என்றும், உற்சவ மூர்த்தி கஜேந்திர வரதன் என்றும் அழைக்கப்படுகிறார். தாய் தெற்கு நாச்சியார் என்றும் வடக்கு நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார். புனித தீர்த்தம் தாமிரபரணி நதி.

இது அம்பாசமுத்திரத்திலிருந்து வடகிழக்கே 12 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து சுமார் 42 கிமீ தொலைவிலும் தாமிரபரணியின் கிழக்குக் கரையில் பசுமையான வயல்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. 1800 ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலுக்குள் உள்ள கல்வெட்டுகளின்படி, இந்த இடம் அத்தாணி நல்லூர் (அத்தாணி = யானை) என்று குறிப்பிடப்படுகிறது.

புராண முக்கியத்துவம் :

 சிறந்த பெருமாள் பக்தனாக இருந்த இந்திரதிம்னன் எனும் மன்னன், அகத்திய மகரிஷியை தனது குருவாக ஏற்றுக்கொண்டு அவரது ஆலோசனைப்படி ஆட்சி புரிந்து வந்தான். ஒருமுறை தன் அவைக்கு வந்த அகத்தியரை வரவேற்காமல், கேளிக்கையில் மூழ்கியிருந்தான். இதனைக்கண்டு மனம் குமுறிய அகத்தியர், தனது சீடராக இருந்து கொண்டு தம்மை மதிக்காமல் இருந்ததற்கு தண்டனையாக அவரை யானையாக மாறி, வனத்தில் சுற்றித்திரிந்து பின் மோட்சம் பெறுவாய் என சபித்தார். அகத்தியரிடம் சாபம் பெற்ற அவன் காட்டில் யானைகளின் தலைவனாக கஜேந்திரன் என்ற பெயரில் வாழ்ந்து வந்தான்.

இச்சம்பவம் ஒருபுறமிருக்க, கபிலமுனிவர் ஒருமுறை ஆற்றில் நீராடச் சென்றார். அப்போது அங்கு ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த கந்தர்வன், விளையாட்டாக அவரது காலைப்பிடித்தான். இதனால் கோபம் கொண்ட கபிலமுனிவர் அவனை நீரிலேயே முதலையாக இருக்கும் படியும், பிற்காலத்தில் பகவான் விஷ்ணுவின் சக்கரத்தால் மோட்சம் பெற்று பழைய சரீரம் கிடைக்கப்பெறுவாய் என்றும் சபித்துச்சென்றார். அதன்படி அவன் தாமிரபரணி ஆற்றில் முதலைகளின் தலைவனாக வசித்து வந்தான். இவ்வாறு, இந்திரதிம்னனும், கந்தர்வனும் தாங்கள் பெற்ற சாபத்தினால் யானைகள் மற்றும் முதலைகளின் தலைவனாக நிலத்திலும், நீரிலும் வாழ்ந்து வந்தனர்.

ஒருசமயம், காட்டில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட அங்கு வசித்த யானைகள் அனைத்தும் அவர்களின் தலைவனான இந்திரதிம்னன் தலைமையில் நீர் நிலையைத் தேடி தாமிரபரணிக்கு வந்தன. அவ்வாறு, வந்த யானைகள் அனைத்தும் ஒரே சமயத்தில் தாமிரபரணியில் இறங்கிட அங்கு வசித்த உயிரினங்கள் யானைகளின் காலில் மிதிபட்டு இறந்தன. இதனால் கலக்கமடைந்த முதலைகளும், நீர்வாழ் ஜீவன்களும் யானைகளின் படையெடுப்பிற்கு முடிவு கொணரும்படி, தங்களது தலைவனாக இருந்த கந்தர்வனிடம் முறையிட்டனர். எனவே கந்தர்வன் நீருக்கு அடியில் வந்து இந்திரதிம்னனின் காலை இறுகப்பற்றிக்கொண்டான். தனது காலை முதலையிடமிருந்து மீட்க யானை எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

இவ்வாறு, இவ்விருவரும் ஒரு யுககாலம் வரையில் போரிட்டும் முடிவு ஏதும் ஏற்படவில்லை. அப்போது ஆற்றின் நடுவே தாமரை மலர் ஒன்று இருந்ததைக்கண்ட இந்திரதிம்னனுக்கு அம்மலரை பெருமாளின் திருப்பாதத்தில் வைத்து பூஜைசெய்ய வேண்டுமென்ற ஆசை தோன்றியது. எனவே “மூலப்பரம்பொருளே’ இறுதியாக உன்னை துதிக்கும் பாக்கியத்தை எனக்கு வழங்கு என்று பெருமானை நோக்கி வணங்கினார். அவரது வேண்டுகோளுக்கு செவிசாய்த்த விஷ்ணுஅவ்விடத்தில் தோன்றி முதலை வடிவில் இருந்த கந்தர்வன் மீது தனது சக்கராயுதத்தை செலுத்தி அவனை மோட்சமடையச் செய்தார். பின், கஜேந்திரனை மீட்க விஷ்ணுஅவருக்கு கைகொடுத்த போது அவர் தனது கையை கொடுக்காமல், “என் வேண்டுதலை ஏற்று தன்னைக் காக்க வந்தது போல, உன்னை நாடி வரும் பக்தர்களையும் காக்க இவ்விடத்தில் இருந்து அருள்புரிய வேண்டும், என்றார். அவரது, கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எம்பெருமாள் இவ்விடத்தில் வீற்று அருள்பாலித்து வருகிறார்.

நம்பிக்கைகள்:

திருமணத்தடை நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்க, நல்ல இல்வாழ்வு அமைய, கல்வியில் சிறக்க, படிப்புக்கேற்ற வேலை கிடைக்க, குடும்ப பிரச்னைகள் நீங்க, ஐஸ்வர்யம் கிடைக்க, வியாபாரம் சிறக்க. உடற்பிணிகள் நீங்க, நினைத்த செயல்கள் ஈடேற இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்:

 யானையாக சபிக்கப்பட்ட இந்திரதிம்னனும், முதலையாக சபிக்கப்பட்ட கந்தர்வனும் மோட்சம் பெற்ற இத்தலத்திற்கு வந்து சுவாமியை எண்ணி மனமுருகி துதிப்போரது பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும். தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் பெருமாளின் பக்தர்களான பிருகு மற்றும் மார்க்கண்டேய ரிஷிகள் தவம் செய்து கஜேந்திரவரதரின் திருவுருவ தரிசனம் பெற்றுச் சென்றுள்ளனர். இத்தலத்தில் யானைகள் வந்ததற்கு சான்றாக இன்றும் பக்கத்தில் உள்ள முண்டந்துறை வனப்பகுதியில் அதிகளவில் யானைக்கூட்டம் இருப்பதும், அகத்திய முனிவர் இருந்ததற்கு சான்றாக அருகிலுள்ள பாபநாசத்தில் அகத்தியர் அருவி இருப்பதும் குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். மன்னர்காலத்தில் கட்டப்பட்ட இத்தலம் பிரம்மாண்டமாக மன்னர்கால கட்டடக்கலையை பறைசாற்றும் விதமாக பொலிவுற அமைந்துள்ளது. இங்கு கோயில் செய்தி குறித்த கல்வெட்டுக்களும் அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளன.

கஜேந்திரனாக சாபம் பெற்ற பின் மோட்சம் அடைந்த இந்திரதிம்னனின் வேண்டுகோளின் படி பெருமாள் இத்தலத்தில் வீற்றிருப்பதால் அவர் “கஜேந்திரவரதன்’ என்ற திருநாமம் கொண்டே அழைக்கப்படுகிறார். இதனால், இவ்வூர் ஆதியில் யானைகாத்தநல்லூர் என்ற பெயரிலும் அழைக்கப் பட்டுள்ளது.

திருவிழாக்கள்:

தைப்பூச தினத்தில் 3 நாட்கள், சித்திரைப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, திருக்கார்த்திகை, மார்கழி 30 நாள் பூஜை, தமிழ் மாத இறுதி சனி மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகள்.

காலம்

1800 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அத்தாளநல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வீரவநல்லூர்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை, திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top