அச்சன் கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில், கேரளா
முகவரி
அச்சன் கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில், அச்சன் கோவில், புனலூர் நகர், கேரளா மாநிலம் – 689696.
இறைவன்
இறைவன்: ஐயப்பன்
அறிமுகம்
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், அச்சன் கோவில் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில், அச்சம் நீக்கி அருளும் அரசனாக ஐயப்பன் அருள்பாலித்து வருகிறார். கேரள மாநிலம், புனலூர் நகரில் இருந்து 43 கிலோ மீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை நகரில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் அச்சன்கோவில் இருக்கிறது. இங்கு செல்ல ஏராளமான பேருந்து வசதிகளும் உள்ளன. இந்த கோவில் பரசுராமரின் கைகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தை மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று பிரதிஷ்டை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. எனவே தை மாதத்தில் ரேவதி நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் புஷ்பாஞ்சலி விமரிசையாக நடைபெற்று வருகிறது. அச்சன் கோவில் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலின் கருவறையில், பூர்ணா – புஷ்கலை என்னும் இரண்டு தேவியர்களுடன் அரசரின் தோற்றத்தில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இதனால் இங்கிருக்கும் ஐயப்பனைக் ‘கல்யாண சாஸ்தா’ என்று அழைக்கின்றனர். இங்கிருக்கும் ஐயப்பன் வலது கையில் சந்தனம் மற்றும் புனித நீர் இருக்கிறது. இதனால், ஐயப்பனை ‘பெரும் மருத்துவர்’ (மகாவைத்யா) என்றும் அழைக்கின்றனர். ஆலய வளாகத்தில், சிவன், பார்வதி, கணபதி, சுப்பிரமணியர், நாகராஜா, நாகயட்சி, மாளிகப்புறத்தம்மாள், சப்பானி மாடன், கருப்பசாமி போன்ற தெய்வங்களும் இடம் பெற்றுள்ளனர்.
புராண முக்கியத்துவம்
முன்பொரு காலத்தில், இக்கோவிலில் இருக்கும் ஐயப்பனை வழிபடுவதற்காக முதியவர் ஒருவர், தனது ஊரிலிருந்து கிளம்பி அடர்ந்த காடுகளின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், பகல் கடந்து இரவு நேரமாகி விட்டது. இரவு வேளையில், அவருக்குப் பாதை சரியாகத் தெரியவில்லை. மேலும் அவருக்கு, ‘வழி தவறி வேறு பாதையில் சென்று, ஏதாவது ஆபத்து வந்து விடுமோ?’ என்கிற அச்சமும் ஏற்பட்டது. உடனே அவர், ஐயப்பனை மனதில் நினைத்து, அச்சத்தை நீக்கிச் சரியான பாதையைக் காட்டியருள வேண்டினார். அப்போது, “பக்தனே! உன் முன்பாக தோன்றும் என் வாள், உன்னை என் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லும். அச்சன்கோவிலை அடைந்ததும், அந்த வாளை என் சன்னிதியில் சேர்த்துவிடு” என்று ஒரு குரல் அசரீரியாக ஒலித்தது. சிறிது நேரத்தில், ஒளி மிகுந்த வாள் ஒன்று அங்கே தோன்றியது. அந்த வாள் முன்னோக்கிச் செல்ல, அதனைப் பின் தொடர்ந்து சென்றார், முதியவர். மறுநாள் அதிகாலையில் கோவிலை அடைந்த முதியவர், கோவில் அர்ச்சகரைச் சந்தித்து, இரவில் காட்டுக்குள் நடந்ததைச் சொல்லி அந்த வாளை அவரிடம் ஒப்படைத்தார். அப்போது கருவறையில் இருந்து, “என் வாளைக் கருவறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள். நான் உங்களுக்கு அரணாக இருந்து காப்பேன்” என்று ஒரு குரல் கேட்டது. அங்கிருந்த அனைவரும் அதனைக் கேட்டனர். அன்று முதல் அந்த வாள், அச்சன்கோவில் ஐயப்பனின் கருவறையில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது என்று அச்சம் நீக்கிய ஐயப்பனின் வரலாறு சொல்லப்படுகிறது.
நம்பிக்கைகள்
இங்கிருக்கும் ஐயப்ப பக்தர்களின் அனைத்து வகையான அச்சங்களையும் நீக்கி, வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவார் என்னும் நம்பிக்கை இருக்கிறது. மேலும் இத்தல ஐயப்பனை வழிபடுபவருக்குத் திருமணத்தடை இருப்பின் அவை நீங்கும். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு மனமகிழ்ச்சியுடனான வாழ்க்கை அமையும். பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சி கடித்தவர்களுக்கு இங்கிருக்கும் ஐயப்பன் சிலையிலிருந்து சந்தனம் எடுத்துத் தரப்படுகிறது. சந்தனத்துடன், அர்ச்சகர் தரும் புனித நீரையும் சேர்த்துப் பூசினால் விஷம் உடனடியாக நீங்கிக் குணம் பெறலாம் என்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட ஐயப்பன் ஆலயங்களில் இருக்கும் ஐயப்பன் சிலைகள், நெருப்பு மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் சேதமடைந்து பின்னர் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அச்சன் கோவிலில் இருக்கும் ஐயப்பன் சிலை மட்டும் பழைய சிலையாக அப்படியே இருக்கிறது. இக்கோவிலில் ஐயப்பன் பூர்ணா, புஷ்கலை ஆகிய இரு தேவியர்களுடன் முழுமையான குடும்பத்தினராக இருந்து அரசாட்சி செய்கிறார். ஐயப்பன் கோவில்களில், சபரிமலை ஆலயத்துக்கு அடுத்தபடியாக புகழ் பெற்ற கோவிலாக அச்சன்கோவில் ஐயப்பன் கோவில் திகழ்கிறது. ஐயப்பன் கோவில்களில் சபரிமலை, அச்சன் கோவில் ஆகிய இடங்களில் மட்டுமே பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மட்டுமே தேரோட்டம் நடத்தப்படுகிறது. பிற ஐயப்பன் கோவில்களில் தேரோட்டம் இல்லை. அச்சன்கோவில் ஐயப்பன் ஆலயத்தில், ஆண்களுடன் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். குழந்தைப்பேறு வேண்டுபவர்கள், இங்கிருக்கும் அம்மன் சன்னிதியில் பட்டுத்துணி, வளையல் போன்றவற்றுடன் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாய, மந்திரச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இக்கோவிலில் நடைபெறும் ‘கருப்பந்துள்ளல்’ என்னும் விழாவில் கலந்து கொண்டு, கருப்பசாமியை வழிபட்டால், தீய சக்திகள் அனைத்தும் நீங்கி வளம் பெறுவர்.
திருவிழாக்கள்
இங்கு ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும், சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஐயப்பன் மண்டல வழிபாட்டு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். மேலும் ஆண்டுதோறும், மலையாள நாட்காட்டியின்படி, தனு (மார்கழி) மாதம் முதல் நாளிலிருந்து பத்து நாட்கள் வரை பெருவிழா (மகோத்ஸவம்) நடைபெறுகிறது. இவ்விழா நாட்களில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் தங்க ஆபரணங்கள் மற்றும் வாள் போன்றவை புனலூர் கருவூலத்தில் இருந்து எடுத்துச் சென்று அணிவிக்கப்படுகின்றன. இந்த திருவாபரண ஊர்வலம் செல்லும் பாதையானது, கேரளாவிலுள்ள புனலூர், ஆரியங்காவு, தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட நகரங்களின் வழியாக அமைந்திருக்கிறது. விழாவின் ஒன்பதாம் நாளில் தேரோட்டம் நடத்தப் பெறுகிறது. மகரம் (தை) மாதம் வரும் ரேவதி நட்சத்திர நாளில் பூச்சொறிதல் நிகழ்ச்சி நடக்கிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அச்சன்கோவில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மாவேலிக்கரை
அருகிலுள்ள விமான நிலையம்
திருவனந்தபுரம்