ஸ்ரீமுஷ்ணம் பூவாராக சுவாமி திருக்கோவில், கடலூர்
முகவரி
அருள்மிகு பூவாராக சுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம், விருதாச்சலம் வட்டம், கடலூர் மாவட்டம் – – 608 703. Phone: +91 4144 245 090 Mobile: +91 94423 78303
இறைவன்
இறைவன்: பூவராக சுவாமி இறைவி: அம்புஜவள்ளி தாயார் (லட்சுமி)
அறிமுகம்
பூவராக சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில், ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள கோவிலாகும். திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோயிலானது விஷ்ணுவின் அவதாரமான, வராகர் (பூவராக சுவாமி), மற்றும் அவரது துணைவியார் அம்புஜவல்லி தாயார் (லட்சுமி) ஆகியோருக்கு அமைக்கபட்டுள்ளது. இந்த கோவிலில் 10 ஆம் நூற்றாண்டின் இடைக்கால சோழர்களின் திருப்பணிகள் இருந்தன. பின்னர் தஞ்சை நாயக்க மன்னரான அச்சுதப்ப நாயக்கரால் விரிவாக்கபட்டது. கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சிற்றாலயங்களையும் குளத்தையும் உள்ளடக்கி கருங்க்கல்லாலான பெரிய மதில் சுவர் அமைந்துள்ளது. கோயிலின் நுழைவாயில் ஏழு நிலை இராஜகோபுரம் உள்ளது. திருப்பதி – திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்கும் முன்பு, அவருக்குக் கோவில் கொண்டு எழுந்தருள இடமளித்த சந்திர புஷ்கரணி என்னும் திருக்குளம் அருகில் தனிக் கோவிலில் நின்றருள் புரியும் ஆதிவராகப் பெருமாளைச் சேவிக்க வேண்டுமென்று சொல்வார்கள். திருமாலின் பத்து அவதாரத்தில் வராக அவதாரம் சிறப்பு மிக்கது. இவரே பூவராக மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இந்த ஆலயம் திருமுட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயில் தமிழக அரசின் இந்து சமய அற நிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. தேரில் கட்டப்படும் கொடி முஸ்லிம்களால் வழங்கப்படுகிறது; அவர்கள் கோவிலில் இருந்து பிரசாதம் கொண்டுவந்து மசூதிகளில் அல்லாவுக்கு வைக்கிறார்கள்.
புராண முக்கியத்துவம்
ஒரு சமயம், மகாவிஷ்ணுவைத் தரிசனம் செய்ய நான்கு மகரிஷிகள் வந்தனர். அவர்களை வாயில் காப்பாளர்களான ஜெயன், விஜயன் இருவரும் தடுத்து நிறுத்தினர். இதனால் கோபமடைந்த ரிஷிகள், “நீங்கள் பூலோகத்தில் அசுரர்களாக பிறப்பீர்கள்” என்று சாபமிட்டனர். அதன்படி அவர்கள் இருவரும், காசியப முனிவருக்கு பிள்ளைகளாக பூலோகத்தில் பிறந்தனர். இரண்யகசிபு, இரண்யாட்சன் என்ற பெயர் களைக் கொண்ட அவர்கள், பல யாகங்களையும், தவங்களையும் செய்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களைப் பெற்றார்கள். அந்த வரங்களைக் கொண்டு, பூலோக மக்களையும், தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப் படுத்தத் தொடங்கினர். அவர்கள் கொடுமை எல்லை தாண்டியது. கொடிய அசுரர்களான அவர்கள் இருவருக்கும் பயந்து, தேவர்கள் மறைந்து வாழத் தொடங்கினர். இரண்யகசிபு, பிரம்மாவை நோக்கி கடும் தவம் இயற்றி, மூன்று உலகங்களையும் ஆளும் வரத்தைப் பெற்றான். இதனால் அவனது சகோதரன் இரண்யாட்சனுக்கு ஆணவம் அதிகரித்தது. அவன் வருண பகவானை பிடித்து துன்புறுத்த நினைத்தான். அப்போது வருணன், “நீ என்னிடம் மோதுவதை விட, வராக அவதாரம் எடுக்கப் போகும் திருமாலிடம் மோதுவதுதான் சிறப்பானது. அவரை வெற்றி கொண்டால், நீ அனைத்தையும் வெற்றி கொண்ட வனாவாய்” என்றார். அதன்பிறகு வராக மூர்த்தியைத் தேடுவதே, இரண்யாட்சனின் முழுநேர வேலையாகிப் போனது. ஆனால் எங்கு தேடியும் வராகரைக் காணவில்லை. எனவே பூமியைக் கவர்ந்து சென்று, கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான். இதனால் உலக உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. பிரம்மதேவர், பூமியை காப்பாற்றுவதற்காக மகாவிஷ்ணுவை நினைத்து ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்தில் இருந்து கட்டை விரல் அளவு கொண்ட வராகம் தோன்றியது. அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பிரமாண்டமாக வளர்ந்து நின்றது. மகாவிஷ்ணுவே, வராகமூர்த்தியாக அவதரித்திருந்தார். மகாவிஷ்ணு வராகமூர்த்தியாய் வந்துள்ள செய்தியை, நாரதர் மூலம் அறிந்த இரண்யாட்சன் விரைந்து வந்தான். அதற்குள் வராகர், பூமி மறைத்து வைக்கப்பட்டிருந்த கடலுக்குள் நுழைந்து விட்டார். அங்கு வந்த இரண்யாட்சன், வராகரை தடுத்து போரிட்டான். முடிவில் அவனை அழித்த வராகர், தனது இரண்டு கோரை பற்களுக்கு இடையே பூமியை வைத்து கொண்டு கடலுக்குள் இருந்து மேலே வந்தார். அப்படி கடலுக்குள் இருந்து மேல்மட்டத்திற்கு வரும் வழியில், பூமாதேவி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம், வராகர் பதிலளித்துக் கொண்டே வந்தார். பின்னர் பூமியை அதன் இடத்தில் நிலை நிறுத்தினார். அப்போது அவர் உடலில் இருந்து பெருகிய வியர்வைத் துளிகளால் நித்யபுஷ்கரணி தீர்த்தம் உருவானது. அந்த தீர்த்தத்தின் அருகில் வராகர் ஓய்வெடுத்தார். பின்னர் கண்விழித்து பார்த்தார். அப்போது ஒரு விழிப் பார்வையில் இருந்து அரச மரமும், மறு விழிப் பார்வையில் இருந்து துளசிச் செடியும் உருவானது. தேவர்கள் அனைவரும் வராக மூர்த்தியாக இருந்த மகாவிஷ்ணுவை வழிபட்டனர். பின்னர் மகாவிஷ்ணு அங்கிருந்து வைகுண்டம் புறப்படத் தயாரானார். ஆனால் அவரிடம் பூமாதேவி, வராக திருக்கோலத்திலேயே தன்னுடன் சில காலம் தங்கியிருந்து அருள் பாலிக்கும்படி வேண்டியதன் பேரில், பூவராகப் பெருமாளாக அங்கேயே அருள்பாலிக்கத் தொடங்கினார். அப்பொழுது, அவருடைய பரிவாரங்களும் பூமியிலேயே தங்கின. திருமால் தன் கைகளில் இருக்கும் சங்குக்கு சங்கு தீர்த்தத்திலும், சக்கரத்திற்கு சக்கர தீர்த்தத்திலும், பிரம்மாவுக்கு பிரம்ம தீர்த்தத்திலும், கருடனுக்கு பார்க்கவ தீர்த்தத்திலும், வாயுவுக்கு கோபுரத்திலும், ஆதிசேஷனுக்கு பலிபீடத்திலும், விஷ்வக்சேனருக்கு வாசலிலும் இடமளித்து அருளினார். அதோடு இங்கு வந்து தன்னை வழிபடுபவர்களை எமதூதர்கள் நெருங்காமல் பார்த்துக் கொள்ளும் பணியை ஆதிசேஷனுக்கும், வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லும் பணியை பிரம்மாவுக்கும் வழங்கினார். இப்படி வராக மூர்த்தியானவர், பூவராகப் பெருமாளாக தன் பரிவாரங்களுடன் தங்கிய திவ்ய தேசமே ஸ்ரீமுஷ்ணம். வராகப் பெருமாள் அவதரித்து, பூமியை மீட்ட தினம் சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியாகும். அன்றைய தினம் வராக ஜெயந்தி கடைப்பிடிக்கப்படுகிறது.
நம்பிக்கைகள்
பிள்ளைப்பேறு வேண்டுவோர் நித்ய புஷ்கரணியில் நீராடி, அரசமரத்தைச் சுற்றிவந்து, பூவராகரை உள்ளன்புடன் உருகி வழிபட வேண்டும். பின்னர் ஆலயத்தில் சந்தான கிருஷ்ண மூர்த்தத்தை, கைகளில் வாங்கி மடியில் வைத்து வணங்கினால், மழலை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். பெருமாள் சன்னிதிக்கு வடக்குச் சுற்றில், பாவை பாடிய ஆண்டாள் சன்னிதியும், பரமபத வாசல் கோபுரம் அருகே மகேஸ்வரி, சாமுண்டி வராகி போன்ற சப்த மாதர்கள் கோவிலும் உள்ளன. இவர்களை வேண்டிக் கொண்டு அருகே இருக்கும் வேப்ப மரத்தடியில், குழந்தை அம்மன் சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுவோரும் உண்டு. உடையவர் சன்னிதி, சேனை முதலியார் சன்னிதி, வேதாந்த தேசிகர் சன்னிதி ஆகியவை திருச் சுற்றில் உள்ளன. தெற்குப் பக்கத்தில் தனிச் சன்னிதியில் அம்புஜவல்லித் தாயார், கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக் கிறார். அருகே உள்ள வளையமாதேவி என்ற ஊரில் கார்த்திகாயினி முனிவரின் மகளாக அவதரித்து இத்தலப் பெருமாளைத் திருமணம் செய்து கொண்டவர்தான் அம்புஜவல்லித் தாயார். இத்தலத்து சுவாமியையும், தாயாரையும் வணங்கினால், திருமண வரம், குழந்தைப்பேறு கிடைக்கும். பகை அச்சம் விலகும். காரியத்தடைகள் நீங்கும் என்பது கண்கூடு. இந்த ஆலயத்தின் மகிமை பற்றி கந்தபுராணம், பிரமாண்ட புராணம், விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
நெடிந்துயர்ந்து மேற்கு நோக்கிய ஏழு நிலைகளுடன் ஒன்பது கலசங்களுடன் வண்ணமயமான ராஜகோபுரம் இந்த ஆலயத்தை அலங்கரிக்கிறது. அதனைக் கடந்து உள்ளே சென்றால் சிற்ப அழகு மிளிரும் கருங்கல் தூண்களுடன் பெரிய ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அங்குள்ள கருடாழ்வாரை தரிசித்து விட்டு உள்ளே சென்றால், மூலவரின் கருவறையை தரிசனம் செய்யலாம். கருவறையின் முன்பாக ஜெய, விஜயர்கள் துவாரபாலகர்களாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். கருவறையின் உள்ளே பூவராக மூர்த்தி வீற்றிருந்து சேவை சாதிக்கிறார். இவர் வீற்றிருக்கும் விமானம், ‘பாவன விமானம்’ என்று அழைக்கப்படுகிறது. வைணவத் தலங்களுக்குள் இத்தலம் ஒரு தனிச்சிறப்பானது. சுயம்புலிங்கம் போல, சிற்றுளி கொண்டு செய்யப்படாது தானாகவே தோன்றிய தலங்கள் எட்டு என்பர். அவை திருரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், ஸாளக்கிராமம், நைமி, சாரண்யம், வானவாமலை, புஷ்கரம், நாராயணம் என்றும் கூறுவர். இவற்றையே வடமொழியில் ‘ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம்’ என்பர். அதில் ஒன்று இக்கோயில்.
திருவிழாக்கள்
கோயிலில் தினசரி ஆறுகால பூஜைகளும், ஆண்டு விழாக்கள் மூன்றும் நடத்தப்படுகின்றன. அவற்றில் தேர் திருவிழா, தமிழ் மாதமான வைகாசியில் (ஏப்ரல்-மே) நடத்தப்படுகிறது. இது மிக முக்கியமான விழாவாகும். இந்த திருவிழாவானது பிராந்தியத்தின் சமய நல்லினக்கத்தைக் குறிக்கிறது. 15 தினங்கள் நடைபெறும் இக்கோவில் திருவிழாவின் போது மாசி மக நாளில், உற்சவர் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை என்ற கடலோர கிராமத்துக்கு எழுந்தருள்வார். அங்கே தர்காவின் எதிரே பெருமாள் வரும்போது இஸ்லாமியப் பெரியவர்கள், அரிசி, பூ, பழம் கொடுத்து மரியாதை செய்வார்கள். பிறகு புவனகிரி வந்து அங்குள்ள சவுராஷ்டிர சத்திரத்தில் சுவாமி தங்கியிருக்கும் போது மத வேறுபாடின்றி அனைவரும் இறைவனைச் சேவிப்பார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஸ்ரீமுஷ்ணம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருதாச்சலம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி