Friday Nov 22, 2024

திருவாண்டார்கோயில் பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி

முகவரி

அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், கண்டமங்கலம் வழி, திருவாண்டார்கோயில் போஸ்ட், புதுச்சேரி- 605 102. போன்: +91- 99941 90417.

இறைவன்

இறைவன்வடுகீஸ்வரர் (பஞ்சனதீஸ்வரர்) இறைவி: திரிபுரசுந்தரி

அறிமுகம்

திருவாண்டார்கோயில் பஞ்சநதீசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் இந்தியாவில் தமிழகத்தின் அருகே புதுவை மாநிலத்தில் அமைந்துள்ளது. ஆண்டார் கோயில் என்றும், திருவாண்டார் கோயில் என்றும் இக்கோயில் அழைக்கப்பபடுகிறது. விழுப்புரம்-பாண்டிச்சேரி (கோலியனூர் கண்டமங்கலம் வழி) பேருந்து சாலையில் கோலியனூர், வளவனூரை அடுத்து புதுவை மாநில எல்லையில் சிறிது தூரத்தில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

படைப்புத்தொழிலுக்கு அதிபதியான பிரம்மா, சிவனை போலவே ஐந்து தலைகளை கொண்டவராக இருந்தார். இதனால், அவருக்கு மனதில் அகம்பாவம் உண்டானது. அவரது கர்வத்தை அழிக்க எண்ணினார் சிவன். ஒருசமயம் பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி, அவரை சிவன் என நினைத்து கணவனுக்கு செய்யும் மரியாதைகளைச் செய்தார். பிரம்மா மறுக்காமல் இருந்து விட்டார். இதைக்கண்டு கோபம் அடைந்த சிவன், பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கொய்து விட்டார். ஆணவம் அழியப்பெற்ற பிரம்மா, சிவனை வணங்கி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். சிவன் அவருக்கு மன்னித்து அருள் செய்தார். இந்த வரலாறு இந்த தலத்தில் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. பிரம்மாவின் தலையை எடுத்த சிவன் இங்கு, “வடுகீஸ்வரராக’ அருளுகிறார்.

நம்பிக்கைகள்

பணிஉயர்வு கிடைக்க, ஆணவம் அழிய அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

சுவாமிக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் 8 தூண்கள் இருக்கிறது. அதன் அருகே நின்று தரிசனம் செய்தால் ராஜபலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருஞானசம்பந்தர் இவரை “வடுகூரில் ஆடும் அடிகளே!’ என்று பதிகம் பாடியிருக்கிறார். அம்பாள் திரிபுரசுந்தரி லட்சுமி அம்சத்துடன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு “வடுகர் நாயகி’ என்றும் பெயர் உண்டு. பைரவர் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். அஷ்டமி தினங்களில் சுவாமி மற்றும் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதனால் தோஷங்கள், பிணிகள் நீங்குவதாக நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு சுவாமி, பைரவருக்கு தேன், கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்து பின் நாய்க்கு சாதம் படைத்து வழிபடுகின்றனர். இங்கு முருகன் இடது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார். 6 முகம், 12 கரங்களில் ஆயுதங்களுடன் இருக்கும் இவரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என அருணகிரியார் திருப்புகழில் பதிகம் பாடியிருக்கிறார். கோஷ்டத்தில் உள்ள துர்க்கை 8 கைகளுடன், போர்க்கோலத்தில் இருக்கிறாள். வரப்பிரசாதியாக திகழும் இவளை வழிபட்டால் எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை. இவளுக்கு இடப்புறத்தில் அர்த்தநாரீஸ்வரர், வலது புறம் பிரதோஷநாயனார் ஆகியோர் இருக்கின்றனர். இத்தலத்தின் தலவிநாயகரின் திருநாமம் வலம்புரி விநாயகர்.

திருவிழாக்கள்

தமிழ்வருடப் பிறப்பின்போது திருக்கல்யாணம், வைகாசிவிசாகம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, கந்தசஷ்டி, தைப்பூசம்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவாண்டார்

அருகிலுள்ள இரயில் நிலையம்

புதுச்சேரி

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top