திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், கன்னியாகுமரி
![](https://lightuptemples.com/wp-content/uploads/temple/profile_image/temp-0388.jpg)
முகவரி
அருள்மிகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், திருவட்டாறு-629 177. கன்னியாகுமரி மாவட்டம் போன்: +91- 94425 77047
இறைவன்
இறைவன்: ஆதிகேசவப் பெருமாள் இறைவி: மரகத வள்ளி
அறிமுகம்
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாக வைத்து எண்ணப்படுகிறது. மேலும் இது 13 மலைநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகும். நம்மாழ்வார் இவ்வூர்க் கோயில் பெருமாளை ‘வாட்டாற்றான்’ என்று குறிப்பிடுவதால் இந்த ஊரின் பழங்காலப் பெயர் வாட்டாறு என்பது தெளிவாகிறது. எனவே, சங்ககால அரசன் வாட்டாற்று எழினியாதன் இந்த ஊரினன் என்பதை உணரமுடிகிறது.
புராண முக்கியத்துவம்
பிரம்மா யாகம் நடத்திய போது ஏற்பட்ட தவறால், யாக குண்டத்தில் இருந்து கேசன், கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அழித்து, கேசியின் மேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி பெருமாளை பழிவாங்கும் நோக்கத்துடன், கங்கையையும், தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க, அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர். இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். அவர்கள், திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இத்தலம் “வட்டாறு’ என அழைக்கப்பட்டது. இரு நதிகளும் பெருமாளுக்கு மாலை சூட்டியது போல் இருப்பதைக்கண்ட நம்மாழ்வார், “மாலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான்’, என பாடுகிறார். கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப் பெருமாள் எனப்படுகிறார். கேசியின் மீது சயனித்த போது, அவன் தன் 12 கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாரை சுற்றி சிவாலயங்களாக அமைந்தன. மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் 12 சிவாலயங்களையும், ஓடியவாறு தரிசித்து, கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும், அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
நம்பிக்கைகள்
108 திருப்பதிகளை தரிசனம் செய்பவர்கள் திருவனந்தபுரம் பத்மநாபரை தரிசிப்பதற்கு முன், ஆதிகேசவப்பெருமாளை தரிசிப்பது சிறப்பு.
சிறப்பு அம்சங்கள்
நீளமான சிலை: பெருமாளின் 108 திருப்பதிகளில் இத்தல பெருமாள் தான் கிடந்த கோலத்தில் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார். இவர் திருவனந்தபுரம் அனந்தபத்மநாபரை பார்த்த நிலையில் மேற்கு நோக்கி அருளுகிறார். மேற்கு பார்த்த பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு. இடது கையை தொங்கவிட்டு, வலது கையில் முத்திரை காட்டி, தெற்கே தலைவைத்தும், வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அரிது. தாயார் மரகதவல்லி நாச்சியார். இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது. பெருமாளை மூன்று வாசல் வழியாகத்தான் தரிசிக்க முடியும். நடுவாசலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளுகிறார்.பெருமாளின் நாபியில் தாமரையோ, பிரம்மனோ கிடையாது. இதனால் இவரை வணங்கினால், மறுபிறப்பு கிடையாது என்பது ஐதீகம். கருவறையில் கருடன், சூரியன், பஞ்சாயுத புருஷர்கள், மதுகைடபர் என்னும் அரக்கர்கள் உள்ளனர். சிரசின் அருகே ஹாதலேய மகரிஷி மண்டியிட்டு அமர்ந்துள்ளார்.ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 77 வது திவ்ய தேசம்.
திருவிழாக்கள்
ஓணம், ஐப்பசி பிரமோற்ஸவம், புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவட்டாறு
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவனந்தபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருவனந்தபுரம்