Sunday Dec 29, 2024

திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில், திருநீலக்குடி- 612 108, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் – மாவட்டம் போன் +91 435 246 0660, 94428 61634

இறைவன்

இறைவன்: நீலகண்டேஸ்வரர் இறைவி: ஒப்பிலாமுலையாள்,

அறிமுகம்

நீலகண்டேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் நீலகண்டேசுவரர், தாயார் ஒப்பிலாமுலையாள். இத்தலத்தின் தலவிருட்சமாக ஐந்து இலை வில்வ மரமும், பலாமரம் உள்ளன. தீர்த்தமாக தேவிதீர்த்தம் அமைந்துள்ளது. இத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருநீலக்குடி எனும் ஊரில் அமைந்துள்ளது. கும்பகோணம்- காரைக்கால் சாலையில் கும்பகோணத்தை அடுத்து உள்ளது. இத்தலம் பழங்காலத்தில் தென்னலக்குடி என்று அழைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 32ஆவது சிவத்தலமாகும்.

புராண முக்கியத்துவம்

யோக மார்க்கத்தில் செல்பவர்களுக்கு இது மூலாதாரமான தலம். மொத்தம் ஆறு ஆதாரங்கள் உள்ளன.அவை மூலாதாரம்,சுவாதிட்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்னை முதலியன.இந்த ஆறு ஆதாரங்களில் இது மூலாதாரமான தலம்.குண்டலினி சக்தியை தட்டி எழுப்புவர்களுக்கு உடனடியாக பலம் தரும் விசேச சக்தி படைத்த சிவதலம் இது. மார்க்கண்டேயர் தன் ஆயுள் பலம் அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.அப்போது நாரதர் மார்க்கண்டேயரிடம் திருநீலக்குடியில் உள்ள இறைவனை பூஜிக்குமாறு கூறுகிறார்.மார்க்கண்டேயரும் இங்கு வந்து நாளும் பொழுதும் சிவபெருமானை எண்ணி தியானிக்கிறார். முடிவில் இறைவன் அவர் முன் தோன்றினார்.உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். மார்க்கண்டேயர் தமது விருப்பத்தை சொன்னவுடன் அதுபடியே மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவி பதம் தரப்பட்டது.அதற்கு நன்றிகடனாக மார்க்கண்டேயர் இறைவனை பல்லக்கில் வைத்து இளந்துளை, ஏனாதிமங்கலம், திருநாகேசுவரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவகுடி என்று ஊர் ஊராக அழைத்துச் சென்றார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் முகமாகவே இத்தலத்து சித்திரைத்திருவிழா நடத்தப்படுகிறது.

நம்பிக்கைகள்

பிரிந்திருக்கும் தம்பதியர் இங்குள்ள திருநீலகண்டரை மனமுருக வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்ந்து இல்லறம் நடத்துவர்.இந்த பிரார்த்தனைக்காக பக்தர்கள் இத்தலத்துக்கு பெருமளவு வருகின்றனர். இத்தலத்தில் வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம். எம பரிகாரம், ராகு தோஷ பரிகாரங்கள் இத்தலத்தில் பக்தர்களால் செய்யப்படுகிறது. திருநீலகண்டரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

சிறப்பு அம்சங்கள்

திருநீலக்குடி நீலகண்டேசுவர் என்றாலே இந்த எண்ணெய் அபிஷேகம்தான் என்கின்ற அளவுக்கு இந்த அபிசேகம் சிறப்பும் புகழும் கீர்த்தியம் வாய்ந்தது. இங்குள்ள மூலவருக்கு எண்ணெய்யால் அபிசேகம் செய்யும்போது பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெய்யை சுவாமியின் மீது ஊற்றி அபிசேகம் செய்வார்கள். எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிசேகம் செய்தாலும் அத்தனை எண்ணெயும் சுவாமி மேலேயே உவரி விடும். அதாவது எண்ணெய் முழுவதும் சிவலிங்கத்திற்குள்ளேயே(உறிஞ்சி) இறங்கி விடுவது அதிசயமாக உள்ளது. நாள் பூராவும் எணணெய் அபிசேகம் செய்தாலும். குடம் குடமாக கொட்டி அபிசேகம் செய்தாலும் கூட அத்தனையும் உறிஞ்சி விடுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிசேகம் செய்த அடுத்தநாள் சுவாமியை பார்த்தால் அவரது சிவலிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தடவாவது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும்.அபிசேகம் செய்யப்படும் எண்ணெயெல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை. எண்ணெய் அபிசேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால் சிவலிங்கத்திருமேனி வழுவழுப்பாகத்தானே இருக்கவேண்டும் ? ஆனால் இங்குள்ள ஈசனின் மேனி சொர சொரப்பாகவே இருக்கிறது.ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால் அந்த விஷத்தன்மை குறைக்க வேண்டியே இங்கு எண்ணெய் அபிசேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம் இத்தலத்தின் தலவிருட்சம் வில்வம் என்றாலும் கூட கோயிலின் உட்பிரகாரத்தில் இருக்கும் பலா மரம் சிறப்பு வாய்ந்தது. இது தெய்வீகமான பலா மரம் என்று அழைக்கப்படுகின்றது.அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தை அறுத்து அதன் சுளைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்னர்தான் எடுத்துக் கொண்டு செல்லவேண்டும்.அம்மரத்தில் காய்க்கும் பலாபழத்தை முழுப்பழமாக எடுத்துக் கொண்டு செல்லக்கூடாது.அதை மீறி எடுத்துச் செல்பவர்கள் இறைவனால் தண்டனை அடையப்பெறுவார்களாம். பரீட்சித்து பார்ப்பதற்காக மீறி எடுத்துச்சென்று தண்டனை பெற்றவர்களும் உண்டாம். சிவலிங்கத்திருமேனி வழுவழுப்பாக இல்லாமால் சொர சொரப்பாக உள்ளது. இறைவனுக்கு சிகை முடி வளர்ந்திருப்பது போல் உள்ளது. ஐந்து இலை வில்வ மரம் இத்தலத்தின் தலமரமாக திகழ்கிறது.இது பஞ்ச வில்வ மரம் என்றும் அழைக்கப்படுகிறது.ஒரே காம்பில் ஐந்து இதழ்களையுடைய இலைகள் இருப்பது என்பது அதிசயமாக உள்ளது. மார்க்கண்டேயர் சிரஞ்சீவி வரம் பெற்ற சிறப்புவாய்ந்த தலம் இதுதான். தட்சனின் யாகத்திற்கு சென்ற தாட்சாயினி அவமரியாதை பெற்று திரும்பி இத்தலத்தில் வந்து இறைவனை பூஜித்து இறைவனோடு ஒன்றுபட்டார். பிரம்மா, தேவகண்டர், வசிஷ்டர், சூரபத்மன் ,காமதேனு ஆகியோர் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம். வருணனும் தேவகன்னியர்களும் பூஜித்து வரம் பெற்ற தலம். அப்பர் பெருமானால் ஆத்மார்த்தமான தேவாரப்பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலம் கல்லினோடு அவன் கையர் என்று தன்னை கல்லோடு கட்டிப் போடும்போது அப்பர் இத்தலத்து இறைவனைத்தான் ஆத்மார்த்தமாகப் பாடி உயிர்பெற்றதாக இத்தலக் குறிப்பு கூறுகிறது.

திருவிழாக்கள்

சித்திரை மாதம் – பிரம்மோற்சவம் – 18 நாட்கள் திருவிழா வாகனங்களில் மார்க்கண்டேயாரால் ஏற்படுத்தப்பட்ட இந்த திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருவிழா நாட்களில் தினந்தோறும் சுவாமி வாகனங்களில் சுவாமி வீதியுலா செல்வார்.அப்போது திருநீலக்குடி மட்டுமல்லாது சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கும் சுவாமி செல்வார்.18 வது நாளில் எலந்துறையில் எழுந்தருள்வார். 18 வது நாளில் எலந்துறை(பவுண்டரீகபுரம்)என்ற ஊரில் சுவாமி அருள்பாலிப்பார். இது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை ஆகிய நாட்கள் இத்தலத்தில் விசேசமாக இருக்கும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆடுதுறை

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஆடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top