தகட்டூர் மல்லிகார்ஜுனேஸ்வர் கோயில், தர்மபுரி
முகவரி
தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வர் கோயில், கோட்டை கோயில், தகட்டூர், தர்மபுரி மாவட்டம் – 636701.
இறைவன்
இறைவன்: மல்லிகார்ஜுனேஸ்வர் இறைவி: காமாட்சியம்மை
அறிமுகம்
தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தர்மபுரியில் கோட்டைக் கோயில்கள் என அழைக்கப்படும் மூன்று கோயில்களில் ஒரு சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள கோயிலாகும். இக்கோயிலில் உள்ள இறைவன் மல்லிகார்ஜுனேஸ்வர் ஆவார். இறைவி காமாட்சியம்மை ஆவார். தமிழ் நாடு தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து – திருப்பத்தூர் சாலையில் வந்து – வேல் பால் டிப்போ என்ற இடத்தில் பிரியும் சாலையில் – இடது புறமாகச் சென்றால் தெருவின் கோடியில் சென்றால் கோயிலை அடையலாம்.
புராண முக்கியத்துவம்
பாசுபத வரத்தை பெறும் பொருட்டு அர்ச்சுனன் தவம் இருக்கிறான். அவன் தவத்தை பரிட்சித்து பார்க்கும் பொருட்டு ஈசன் வேடன் ரூபம் கொண்டு வருகிறான். அப்போது அர்ச்சுனனுக்கும் வேடனுக்கும் சர்ச்சை நிகழ்ந்து சண்டை வருகிறது. “நீ என்ன பெரிய வேடனா?’ என்று வில்லாலேயே சுவாமியை அர்ச்சுனன் அடிக்கிறான். பின்னர் வந்திருப்பது ஈசன்தான் என்பதை தெரிந்துகொண்டான் அர்ச்சுனன். பரத்வாஜ் ரிஷிகள் மூலம் தான் பெரிய பாவம் செய்துவிட்டதாக உணர்ந்து இங்கு வந்து தவம் செய்கிறான். இங்கு மல்லிகைப் பூ கொண்டு சிவபூஜை செய்ததால் சுவாமிக்கு மல்லிகார்ஜூனேசுவரர் என பெயர் வந்தது. சுந்தரரின் நண்பர் சேரமான் பெருமான் வடக்கிருந்து போகும்போது பூரி சித்தர் மூலம் தெரிந்து இங்கு வந்து வழிபாடு செய்துள்ளார். அதியமான் மூலம் இந்த கோயில் திருப்பணி செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சுவாமி சன்னதியில் அஷ்டதிக்கு பாலகர்களை அற்புதமாக சிற்ப வடிவமாக்கி நம்மைக் கவரும் தலம். இத்தல விநாயகர் செல்வகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பூமியில் வாழும் சகல உயிரினங்களும், வான் மண்டலத்தில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் நவகிரகங்களும் கால சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவை. காலத்தைக் கட்டுப்படுத்தி துன்பப்படும் மனிதர்களுக்கு நன்மை செய்யும் கருணை தெய்வம் காலபைரவர். சனிக்கு குருவானவர். இருவருக்குமான தொட்பு பற்றி புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. சூரிய பகவானுக்கும், அவர் மனைவி உஷாதேவிக்கும் பிறந்தவன் எமன். ஒருகட்டத்தில் சூரியனின் வெம்மை தாங்காமல் கடும் அவதிக்குள்ளானாள் உஷாதேவி. எனவே, தன் நிழலாக தன்னைப் போலவே பிரத்யுஷா என்னும் சாயா தேவியை உருவாக்கி தம் பணிகளைச் செய்யுமாறு பணித்து சூரியனை விட்டு விலகியிருந்தாள். உஷாதேவி, சாயாதேவி ஆகிய இருவரின் உருவ ஒற்றுமையும் நடவடிக்கைகளும் ஒன்றாகவே அமைந்திருந்ததால் சூரியனுக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. சூரியபகவான் மீது சாயாதேவி கொண்ட பக்தியால் மந்தன் என்னும் சனி பிறந்தார். அதன் பிறகு எமனை அலட்சியம் செய்ய ஆரம்பித்தாள், சாயாதேவி. அதைப் பொறுத்தக்கொள்ள முடியாத எமன் தன் தந்தையான சூரியபகவானிடம் முறையிட, அவர் ஞானதிருஷ்டியால் உண்மையை அறிந்துகொள்கிறார். பின்னர் சாயா தேவியை விட்டு விலகிவிடுகிறார். தேவரினமே ஆனாலும் நிழலானவரின் மகன் என்பதால் சனியை யாரும் லட்சியம் செய்யவில்லை. அதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த சனியை நாரதர் சமாதானப்படுத்தினார். சனியிடம் பைரவரின் பெருமைகளைக் கூறி அவர் குறித்து தவம் செய்யச் சொன்னார். நாரதர் வாக்கை ஏற்று, கடும்தவத்தில் ஆழ்ந்தார் சனி. சனியின் தவத்தால் மகிழ்ந்த பைரவர், அவருக்கு நேரில் காட்சி தந்து, காலமாகப்பட்ட சூரியபகவானையும், காலனான எமனையும் தன் பார்வையால் கட்டுப்படுத்தியதோடு, சனியை சூரியமண்டலத்தில் தனிப்பெரும் சக்தியாக உருவாக்கினார். காலனையும், காலத்தையும் கட்டுப்படுத்தியதால் இவர் காலபைரவர் என்று அழைக்கப்படுகிறார். காலம் என்னும் சூரியன் உள்பட நவகோள்களும் இவரது ஆணைக்குக்கட்டுப்படுவர் என்பதால் நம் முன்னோர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே காலசக்ரவடிவில் 3 க்கு 3 வடிவ யந்திரம் அமைத்து, சக்ர வடிவில் புடைப்புச் சிற்பமாக நாய் வாகனத்துடன் காலபைரவரை பிரதிஷ்டை செய்துள்ள தலம் தர்மபுரி. இங்குள்ள கோட்டை கோயிலில், குபேர பாகத்தில் கல்யாண காமாட்சியம்மன் சன்னிதிக்கு எதிரில் தனிச்சன்னிதியில் இவரை தரிசிக்கலாம். காலசக்கரத்தைக் கொண்ட தமிழகத்தின் மூத்த பாரம்பரியம் கொண்ட காவல்தெய்வமாக விளங்குகிறார். இருபத்தேழு நட்சத்திரங்களில் சித்திரை நட்சத்திரத்திற்குரியவர் இவரே. ஸ்ரீசக்கரத்தின் நடுவில் சூரிய, சந்திர, அக்னி ஜ்வாலையுடன் புடைப்புச் சிற்பமாக அருளும் இவர் சக்ர பைரவர், யந்திர பைரவர் என்றெல்லாம் சிறப்புப் பெயர்களில் அழைக்கப்படுகிறார். அதியமான் நெடுமான் அஞ்சி உள்பட பல மன்னர்களால் வழிபடப்பட்டவர். சூலினி ராஜ துர்க்காம்பிகை சுயரூப காட்சி : அருள் தரும் சூலினி ராஜ துர்க்காம்பிகை சூலம், சங்கு ஏந்தி கொற்றவையாக மகிஷனை வதம் செய்யும் தோற்றத்தில் காட்சி தருகிறாள். இவள் எருமைத் தலையும் மனித உடலும் கொண்டு கத்தி, கேடயம் ஏந்தி, மகிஷன் கீழே வீழ்ந்துள்ள காட்சியும், அம்பிகை சூலினி இடது கரத்தால் மகிஷன் கொம்பை பற்றியும், இடது பாதத்தால் கழுத்தின் மீது மிதித்தும் சம்காரத்தில் அருள்புரியும் திருக்காட்சி மூலஸ்தான கருவறையில் கிழக்கு நோக்கி தமிழகத்தில் இத்தலத்தில் மட்டுமே காணமுடியும். ராகுவைப் போல கொடுப்பாரில்லை எனும் முது மொழிப்படி ராகு கிரக அதிதேவதை ஸ்ரீ துர்க்கையை ஸ்ரீ தர்மர் முதலானோர் வழிபட்டு, இழந்த நாடு முதல் அனைத்தையும் பெற்றுள்ளார். ரத்னத்ரயம் எனும் வகையில் மூவகை சூலங்களுடன் காரண, காரணி, அதற்கான பலன் எனும் மூவகை பயன்களை அருளும் ஸ்ரீ சூலினியை முழுவதும் சந்தனக் காப்பு தோற்றத்தில் வருடத்தில் ஆடி 3 ம் செவ்வாய்க்கிழமை மதியம் 4.15 முதல் இரவு 9.15 வரை மட்டுமே தரிசிக்க முடியும். வார நாட்களில் பிரதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 5.30 வரையும் 5.30 முதல் 6 .00 மணி வரையிலும் கால பைரவர், ஸ்ரீ சூலினி வழிபாடு சிறப்புடன் நடைபெறுகிறது. ஸ்ரீ கால பைரவர் : பைரவர் இத்திருத்தலத்தில் யந்திர வடிவில் சூரிய சந்திரன் அக்னி ஜூவாலையுடன் அருள்பாலிக்கிறார். சங்ககால மன்னரான அதியமான் நெடுமான் அஞ்சி முதல் பல பேரரசர்களால் இம் மகாபைரவர் வழிபாடு செய்யப்பட்ட மந்திர மூர்த்தி இவராவார். வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி சங்க காலத்தில் அவ்வைக்கு நெல்லிக்கனி வழங்கிய வரலாற்றுப் புகழ் பெற்ற தகடூர் தலம் இது. தகடூர் சுயம்பு லிங்க தலம் ஆகும். திருமாலின் நான்கு அவதாரங்களான யோக நரசிம்மர், ராமர், ஹயக்ரீவர், கிருஷ்ணர் ஆகியோரால் வழிபட்ட தலம். ஆதியில் பாணாசுரனால் ஸ்தாபிக்கப்பட்ட தலம் இது. சுந்தரர், சம்பந்தர், அவ்வை, அரிசில் கிழார், பொன்முடியார், பரணர், கபிலர், நாகையார், அதியன், விண்ணத்தனார் முதலிய புலவர்களால் பாடி பணியப்பட்ட திருத்தலம். 9 ம் நூற்றாண்டிலே திருப்பணிகள் செய்யப்பட்ட கோயில். ராமன் தவமிருந்த இடம் இத்திருத்தலம். ஆறுமுகர் எட்டு திக்கை பார்க்கும் வகையில் ஆறுமுகங்களுடனும் ஐயப்பனைப் போல குந்தலம் இட்டு காட்சி தருகிறார். பாதத்தை ஒரு நாகம் தாங்குகிறது. மயில் அலகில் ஒரு நாகத்தைக் கொண்டுள்ளது. இத்தகைய கோலத்தில் சண்முகரை நாம் தரிசிக்கும் தலம். இங்குள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. தங்கக் கவசமும் சாத்தப்படுகிறது. இந்த வழிபாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு சகலமும் அருள்கிறார், சக்கர பைரவர்.
நம்பிக்கைகள்
“பைரவர்’ என்ற பதத்திற்கு “பயத்தை போக்குபவர்” என்றும் “பயத்தை அளிப்பவர்’ என்றும் பொருள். பிரபஞ்சத்தில் உள்ள சகல ஜீவ ராசிகளும் வான மண்டலத்தில் உள்ள சூரியன் முதலான கிரகங்களும் நட்சத்திரங்களும் கால சக்கரத்தின் ஆளுகைக்குட்பட்டதே. காலச் சக்கரத்தை இயக்கும் பரம்பொருள் காலபைரவர் ஆவர். காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி பக்தர்களுக்கு நன்மை செய்பவரும் இவரே. தஞ்சம் என்று வரும் பக்தர்களை எந்த அபாயத்திலிருந்தும் காத்து ரட்சிப்பவர். நிரபராதிகளுக்கு அபயம் அளித்து எதிரிகளை தூள் தூளாக்குபவர். திருமணத் தடைகளை நீக்குபவர். சந்தான பாக்கியத்தை அருள்வார். பொருள் தந்து வறுமையை போக்குவார். இழந்த வழக்குகளில் வெற்றிபெறச் செய்வார். இவரது கருணையால் வியாபாரம் விருத்தியாகி அபரிமிதமான லாபம் கிடைக்கும். பங்குதாரர்களுக்குள் ஒற்றுமை நிலவும். ஏழரையாண்டு சனி, அட்டமத்து சனி, இதர கிரகங்களால் ஏற்படும் தொல்லைகளை அடியோடு அகற்றுவார். பைரவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி திதிகளில் சிறப்பு வழிபாடும் வளர்பிறை அஷ்டமி திதி, பிரதி சனி, ஞாயிறு நாட்களில் மாலை 5.30 முதல் 7.30 வரை வழிபாடும் நடைபெறும்.
சிறப்பு அம்சங்கள்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இரண்டரை டன் எடையுள்ள வியன்மிகு தொங்கும் தூண்கள் இரண்டைப் பெற்றிருக்கும் சிவத்தலம் இது. தாய்மையின் சிறப்பை உயர்த்திச் சொல்லும் வகையில் காமாட்சி அம்பாளின் சன்னதி சுவாமியின் சன்னதியை விட உயரமாக இருக்கிறது.
திருவிழாக்கள்
ஆடி மாதம் – ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம் – இத்திருத்தலத்தின் மிக சிறப்பான விழாவாகும்.தவிர வெள்ளி சிறப்பு சந்தன காப்பு, பூப்பந்தல் சேவை ஆகியவை சிறப்பானவை. தை மாதம் – சண்டி ஹோமம் – 2 நாட்கள் விழா மார்கழி மாதம் – சிறப்பு பூஜை விழாக்கள் வைகாசி – தேரோட்டம் , வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி உற்சவம் ஆகியவை இத்தலத்தின் சிறப்பான நாட்கள் ஆகும். இத்தலத்தில் மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. ஆங்கில, தமிழ் புத்தாண்டு தினங்களன்று கோயிலில் மிக அதிக அளவு எண்ணிக்கையிலான பக்தர்கள் கூடுகிறார்கள். கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமியன்று, காலபைரவர் ஜெயந்தி எனப்படும். கால பைரவாஷ்டமி விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பைரவருக்கு சிறப்பு யாகம், சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் தங்கச் கவசம் சாத்தப்பட்டு நடைபெறுகிறது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவரை தரிசித்து பலன் பெறுகிறார்கள்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தகட்டூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தர்மபுரி
அருகிலுள்ள விமான நிலையம்
பெங்களூர்