Friday Dec 27, 2024

சோளிங்கர் யோக நரசிம்மர் திருக்கோயில், வேலூர்

முகவரி

அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர்- 631102. வேலூர் மாவட்டம் போன்: +91- 4172 263515

இறைவன்

இறைவன்: யோகநரசிம்மர் இறைவி: அமிர்தவள்ளி

அறிமுகம்

பெருமாளின் 108 திருப்பதிகளில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற சோளிங்கர் திருத்தலம் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற பெரிய மலைமீது மூலவரும், அதன் அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயரும், கீழே உற்சவரும் அருள்பாலிக்கிறார்கள். முதலில் பெருமாளை தரிசித்து விட்டு பின் ஆஞ்சநேயரை தரிசிப்பது வழக்கம். இத்தலத்தில் ஒரு கடிகை (24நிமிடம்) இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.மூலவர் யோக நரசிம்மர் கிழக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்த திருக்கோலமாக உள்ளார். சுவாமி ஸ்ரீ சாளக் கிராம மாலை அணிந் துள்ளார்.இவரது வடிவத்தை சிலா வடிவம் என்கின்றனர். தாயார் அமிர்தவல்லி வேண்டும் வரம் தருபவராக அருள்பாலிக்கிறார். ஊரின் மையப்பகுதியில் உற்சவருக்கென தனிக்கோயில் அமைந்திருப்பது இங்கு மட்டும் தான். இங்கு தான் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இங்கிருந்து மலைக்கோயில் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.

புராண முக்கியத்துவம்

பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். இவர்கள் இங்கு வந்து தவம் இருந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. ஒரு காலத்தில் விசுவாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு “பிரம்மரிஷி’ பட்டம் பெற்றாராம். அதே போல் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் உடனடியாக வேண்டும் என்ற காரணத்தினால் தான் அவர்கள் இங்கு தவமிருந்தனர். ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம், “”இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதை போக்கி வை,” என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்ய, அது முடியாமல் போனதால் ராமனை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார். கடைசியில் ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை கண்டு களித்த ஆஞ்சநேயரிடம் பெருமாள், “”நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என்பக்தர்களின் குறைகளை போக்கி வா,”என்று கூறினார். அதன்படி ஆஞ்சநேயர் நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் “யோக ஆஞ்சநேயராக’ சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

நம்பிக்கைகள்

இத்தலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால் புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி ஆகிய பிரச்சினைகள் தீரும். ஆண்பெண் சேராமை(தாம்பத்ய பிரச்சினை) , குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீர்வதற்காகவும் பக்தர்கள் வழிபாடு செய்து கஷ்டம் நீங்கப் பெறுகிறார்கள். இத்தலத்தில் வழிபட்டால் வியாபார நஷ்டம், பசி , மூப்புத் துன்பம் ஆகிய பிரச்னைகள் தீர்ந்து சுபிட்சம் ஏற்படுகிறது. புது நிலம் வாங்க அல்லது புது வீடு கட்ட பக்தர்கள் கோயில் மலைப்பாதைக் கருகில் வழிநெடுக கற்களை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கோபுரம் போல் கட்டினால் உடனே தங்கள் வேண்டுதல் கிடைக்கிறது என்பது இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இங்கு நரசிம்ம குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் கூட நீங்கும் என்பது ஐதீகம். இங்கு தானம், தர்மம் செய்வது கயையில் செய்வதற்கு சமமானது என்பர்.மன நோய் உள்ளவர்கள், புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள், தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள குளத்தில் நீராடி மலை மீதுள்ள பெருமாளையும், அருகில் உள்ள ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்ய வருகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

பெருமாளின் 108 திருப்பதிகளில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற சோளிங்கர் திருத்தலம் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற பெரிய மலைமீது மூலவரும், அதன் அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயரும், கீழே உற்சவரும் அருள்பாலிக்கிறார்கள். முதலில் பெருமாளை தரிசித்து விட்டு பின் ஆஞ்சநேயரை தரிசிப்பது வழக்கம். இத்தலத்தில் ஒரு கடிகை (24நிமிடம்) இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.மூலவர் யோக நரசிம்மர் கிழக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்த திருக்கோலமாக உள்ளார். சுவாமி ஸ்ரீ சாளக் கிராம மாலை அணிந் துள்ளார்.இவரது வடிவத்தை சிலா வடிவம் என்கின்றனர். தாயார் அமிர்தவல்லி வேண்டும் வரம் தருபவராக அருள்பாலிக்கிறார். ஊரின் மையப்பகுதியில் உற்சவருக்கென தனிக்கோயில் அமைந்திருப்பது இங்கு மட்டும் தான். இங்கு தான் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இங்கிருந்து மலைக்கோயில் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஸ்ரீமன் நாரயணன் எடுத்த அவதாரங்களிலேயே ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண்கூடாக வெளிப்படுத்திய அவதார மட்டுமில்லாமல், சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க தன்னை அண்டியவர்க்காக உதவிய அவதாரமாகும்.அத்தகைய அவதாரமாக இறைவன் யோக நரசிம்மராக இருக்கும் தலம் இது. சிறிய மலை : பெரிய மலைக்கு எதிரில் இயற்கை அழகோடு 406 படிகள் அமைந்து அழகிய குன்றின் மீது அமைந்துள்ளது எழில்மிகு யோக ஆஞ்சநேயர் கோயில். யோக ஆஞ்சநேயருக்கு நான்கு கைகள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம், மற்ற இருகைகளில் ஜபமாலை உள்ளது.சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது.பேய் பிசாசு பிடித்தவர் தீராத நோயினால் வருந்துபவர்கள் இம்மலைச் சுனை(குளம்) நீரில் விதிப்படி மூழ்கிப் படிகளில் படுத்தக் கிடந்து வாயு குமாரனை நினைத்து எண்ணிய வரம் பெறலாம். பெருமாளுக்கு ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு வழிபாட்டு முறை உள்ளது. சில கோயில்களில் மொட்டை போடுவது. சில கோயில்களில் உண்டியலில் காணிக்கை போடுவது. ஆனால் இத்தலத்து பெருமாள், ஒரே கல்லால் ஆன மலை மீது அருள்பாலிக்கும் தன்னை 1500 படிகள் ஏறி வந்து தரிசித்தாலே பலன் தந்து விடுவார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.இங்கு பிறந்த தொட்டாச்சாரியார் ஆண்டுதோறும் காஞ்சி சென்று வரதராஜப்பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை உடல் நிலை சரியில்லாத இவரால் காஞ்சி செல்ல முடியவில்லை. இங்குள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி பெருமாள் கோயிலில் நடக்கும் கருட சேவையை நினைத்து கண்ணீர் சிந்தினார். உடனே பெருமாள் கருட வாகனத்தில் இங்குள்ள நரசிம்ம குளத்தில் தரிசனம் தந்தார். இதன் நினைவாக இன்றும் காஞ்சி பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி தொட்டாச்சாரியாருக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். தொண்டை நாட்டு 22 திவ்யதேசங்களில் ஒப்பற்ற திவ்யதேசம் இது. காஞ்சிபுரத்திற்கும், திருவேங்கடமலைக்கும் இடையிலுள்ள திவ்ய தேசம் ஆகும். சப்தரிஷிகளுக்காக கோபம் தணிந்து யோக முத்திரையில் தியான கோலத்தில் காட்சியளித்த இடம். சுவாமி உட்கார்ந்திருக்கும் பாறை அடிவாரம் வரை ஒரே மலையைச் சேர்ந்த குன்று என்பது அதிசயம். மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலம் ஆகும். மனஅமைதி தரும் அற்புதமான தலம் இது, இம்மலையில் உள்ள மூலிகை மரங்களால் இங்கு வரும் ரத்தகொதிப்பு,இதயநோய் பிரச்சினை உள்ள பக்தர்கள் குணமாகிறது. பராங்குச சோழன் கட்டிய 3 ம் நூற்றாண்டு கோயில் இது.

திருவிழாக்கள்

கார்த்திகை திருவிழா – 5 வெள்ளி 5 ஞாயிறு கிழமைகளில் – இத்திருவிழா இத்தலத்தில் மகிவும் விசேஷம்.இவ் விழா நாட்களின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது பரவசமாக இருக்கும். சித்திரை -பிரம்மோற்ஸவம்-10 நாள் – இவ்விழாவிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். வைகாசி – நரசிம்ம ஜெயந்தி, காஞ்சி கருடசேவை. ஆடி – திருவாடிப்பூர உற்ஸவம். ஆவணி – திருப்பவித்ரோற்ஸவம். புரட்டாசி – நவராத்திரி. ஐப்பசி – மணவாளமாமுனி உற்ஸவம். மார்கழி- பகல்பத்து ராப்பத்து உற்ஸவம். தை – தைப்பொங்கல். மாசி – தொட்டாச்சார்யா உற்ஸவம்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அரக்கோணம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

அரக்கோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top