Wednesday Jan 15, 2025

சோமநாதபுரம் சோமநாதர் (ஜோதிர்லிங்கம்) கோயில், குஜராத்

முகவரி

ஸ்ரீ சோமநாதர் (ஜோதிர்லிங்கம்) கோயில், சோமநாதர் மந்திர் சாலை, வெராவல், குஜராத் – 362268

இறைவன்

இறைவன்: சோமநாதர்

அறிமுகம்

சோமநாதபுரம் கோயில் இந்தியாவின் குஜராத்து மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், கிர்சோம்நாத் மாவட்டத்தில், பிரபாச பட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோயில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள 12 சோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது.இங்கு சோதிர் லிங்கத்தின் நேர் பின்புறம் உள்ள சக்தி அம்மன், 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த சக்தி பீடத்திற்குரியதாகும். சாளுக்கியர் கட்டிடக்கலை வடிவத்தில் இறுதியாக கட்டப்பட்ட சோமநாதர் கோயில் பிரமிடு வடிவத்தில் விசாலமாகக் கட்டப்பட்டுள்ளது.

புராண முக்கியத்துவம்

சந்திரனின் மற்றொரு பெயர் சோமன் என்பது. சந்திரன் மிக்க அழகானவன். எனவே, தக்கன் என்பவரது 27 பெண்களும் சந்திரனை விரும்பித் திருமணம் செய்து கொண்டனர். சந்திரன் தனது கடைசி மனைவி ரோகிணி என்பவளிடம் மட்டும் பிரியமாக நடந்து கொண்டான். அதனால் மற்ற 26 பெண்களும் தங்களது தந்தையிடம், சந்திரனின் பாகுபாடு பற்றி முறையீடுயீ செய்தனர். தக்கனும் சந்திரனைக் கூப்பிட்டு, எல்லா மனைவிகளிடமும் பாரபட்சமின்றி நடந்து கொள்ள அறிவுரை கூறியும் பயனில்லாத காரணத்தால், தக்கனுக்குக் கோபம் வந்து, சந்திரனுக்குத் தொழு நோய் ஏற்பட்டுத் துன்பப்பட, சாபம் கொடுத்து விட்டார். சாபத்தின் படி சந்திரனுக்குத் தொழுநோய் உண்டாகி, சந்திரன் அழகெல்லாம் கெட்டுப் போய்விட்டது. அதனால் உலகின் உயிர்கள் வாழக் காரணமான அமிர்தம் சுரக்கும் சக்தியும் குறைந்து விட்டது. சந்திரனின் 16 கலைகளில் தினம் ஒன்றாக 15 நாட்களில் 15 கலைகள் போய்விட்டன. உலகில் உள்ள உயிர்கள் வாடவே, தேவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அவிர்ப்பாகம் நின்று விட்டது. தேவர்கள் சந்திரனைக் கூட்டிக் கொண்டு பிரம்ம தேவரிடம் சென்று முறையிடவே, அவர் குஜராத்தில் பிரபாசத் தீர்த்தம் என்னும் திரிவேணி சங்கமத்தில் சந்திரனை நீராடச் செய்தார். இங்கே சிவலிங்கம் தாபித்து விரதமோடிருந்து சிவபெருமானை வழிபட்டு, சில நாட்கள் தவமிருக்கக் கூறினார். ஓராயிரம் ஆண்டுகள் இங்கே சந்திரன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்தான். சந்திரனின் தவத்திற்கு இரங்கிய ஈசன், சந்திரன் முன்பு தோன்றினார். சந்திரனைச் சாபத்தின் பிடியிலிருந்து காத்தார். 15 நாட்கள் சந்திரனின் கலைகள் குறையவும், 15 நாட்கள் சந்திரனின் கலைகள் வளரவும் வரம் கொடுத்தார். உலகத்து உயிர்களை முன்பு போலவே காக்க, சந்திரனிடம் அமிர்தம் சுரக்கும் சக்தியையும் அருளினார். சந்திரனைப் பிறைச் சந்திரனாகத் தன் முடியில் சூடிக் கொண்டார். சிவபெருமான் சந்திரனுக்குக் கோழிமுட்டை வடிவில் ஒரு ஜோதிர்லிங்கத்தைக் கொடுத்துச் சென்றார். சந்திரன் வழிபட்ட இடத்தில் அந்த ஜோதிர்லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, அதன்மீது பெரிதான ஒரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து, சிவபெருமான் எப்போதும் இங்கே ஜோதிர்லிங்கமாக இருந்து மக்களுக்கு அருள்புரிய வேண்டுமெனச் சந்திரன் சிவபெருமானை வேண்டிக் கொண்டு வழிபட்டான். அந்த லிங்கமே சந்திரனின் பெயரால் சோம நாதலிங்கம் எனப் பெயர் பெற்றது. அந்த இடமே சோமநாத புரமாகும். இன்றும் சோமநாதபுரத்துக் கடற்கரையில் சந்திரன் ஒளி பிரகாசமாக ஒளிரும் எனக் கூறுகின்றனர். அந்தச் சோமநாதரே ஜோதிர்லிங்கம் என்கின்றனர்.

நம்பிக்கைகள்

சகல பாவங்களும் நீங்கவும், இறப்பிற்கு பின் முக்தி கிடைக்கவும் இங்குள்ள சோமநாதரை வழிபட்டு செல்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

சோமன் என்று சொல்லக்கூடிய சந்திரன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றமையால் சோமநாதம் எனப் பெயர் உண்டாகியது. சோமநாதபுரம் உலகம் தோன்றிய காலம் முதலே சிறந்த தலமாக விளங்கியது. பிரபாசப் பட்டணம் எனப் புகழ்பெற்றது. ஏனெனில், இத்தலத்தின் கடற்கரையில் ஓரிடத்தில், ஒரு குறிப்பிட்ட சமயத்தில், சூரிய ஒளியும், சந்திர ஒளியும் பிரகாசிக்கும். புராணகாலம், வேத காலம், இதிகாச காலம், தற்காலம் என இப்படிப் பல காலங்களிலும் புனிதத் தலமாக விளங்கி வருகிற சிறப்புடையது இத்தலம். நமது நாட்டின் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் தலையாய தலம். இரண்யா நதி, கபில நதி, சரஸ்வதி நதி ஆகிய மூன்று நதிகளும் திரிவேணி சங்கமத்தில் ஒன்று கூடுகின்றன. இந்த இடம் புனிதமாகக் கருதப்படுகிறது. பாண்டவர்கள் காலத்தில், அவர்கள் பலமுறை இங்கே வந்து வாழ்ந்தும், தவம் செய்தும் உள்ளார்கள். சரித்திர காலத்தே சரித்திர ஆசிரியர்கள் சோமநாதத்தின் புகழைப் பற்றி எழுதியதை அடிப்படையாக வைத்து, ஆப்கானிஸ்தானப் பேரரசன் கஜினி முகமது 17 தடவை படையெடுத்து வந்து, சோமநாதபுரத்தைப் தாக்கிப் பெரும் செல்வத்தைக் கொண்டு சென்று – தன் ஊரைச் சொர்க்க புரியாக ஆக்கினான். அவன் சோமநாத லிங்கத்திற்கு அடியில் பெரும் ஒளிவரும் ரகசியம் அறிந்து அதனைக் களவாட முயற்சித்தான். ஏழுமுறை இக்கோயிலை இடித்துத் தள்ளினானாம். ஆனால் அந்த ஒளியின் ரகசியத்தை அவனால், அறியமுடியவில்லை. பெரும் செல்வத்தை மட்டும் வாரிக்கொண்டு போனானாம். சுதந்திரம் அடைந்த பின்னர் வல்லபாய் பட்டேல் அவர்களின் முயற்சியால் புதிய சோமநாதம் கோயில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஆதிசங்கரர் தாபித்த சாரதா பீடம் உள்ளது. நமது நாட்டின் நான்கு திக்குகளிலும் உள்ள நான்கு புனிதத் தலங்களில் மிகவும் சிறந்த தலம் சோமநாதம் ஆகும். இது கண்ணன் காலில் வேடன் அம்பு பட்ட இடம். கண்ணன் உயிர் நீங்கிட, தனியே கிடந்த உடலை அர்ச்சுனன் கண்டெடுத்த இடம். கண்ணன் உடல் தகனம் செய்த இடம் – ஆகிய இம்மூன்று இடங்களும் உள்ள தலம். பலராமர் பாம்பாக மாறிப் புற்றினுள் மறைந்த இடமும் இங்கே உள்ளது. சோமநாதரின் பழைய கோயில் புதிய கோயிலின் இடது புறமுகப்பில் உள்ளது.

திருவிழாக்கள்

சிவராத்திரி, பிரதோஷம்

காலம்

2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

சோமநாதபுரம் கோயில் டிரஸ்ட்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தியோ பாட்டான்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பாட்டான்

அருகிலுள்ள விமான நிலையம்

அகமதாபாத்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top