கொச்சி திருப்பூனித்துறை பூர்ணத்திரயேஸ்வரர் திருக்கோயில், கேரளா
முகவரி :
அருள்மிகு பூர்ணத்திரயேஸ்வரர் திருக்கோயில்,
திருப்பூனித்துறை-682301,
கொச்சி மாவட்டம்,
கேரளா மாநிலம். போன்: +91- 484 – 277 4007.
இறைவன்:
பூர்ணத்திரயேஸ்வரர்
அறிமுகம்:
ஸ்ரீ பூர்ணாத்திரேயசர் கோயில், கேரளத்தின், கொச்சி, திருப்பூணித்துறையில் அமைந்துள்ள ஒரு விஷ்ணு கோயில் ஆகும். கொச்சி இராஜ்ஜிய அரச குடும்பத்தின் 8 அரச கோவில்களில் இது முதன்மையானது. இந்தக் கோயில் கேரளத்தின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த தெய்வம் கொச்சினின் தேசிய தெய்வமாகவும், திருப்பூத்துறையின் காவல் தெய்வமாகவும் கருதப்பட்டது. எனவே இந்தக் கோயிலில் நடக்கும் விருச்சிகோத்சவ விழாவில் 40 க்கும் மேற்பட்ட யானைகள் கலந்துகொள்கின்றன. பூர்ணசந்திர ஈசர் யானைகளை விரும்புபவராக கருதப்படுவதால், யானைகளின் உரிமையாளர்கள் பலர் பணத்தை எதிர்பார்க்காமல் யானைகளை உறசவத்திற்கு அனுப்புகின்றனர்.
இந்த கோயில் ஆண்டுதோறும் நடக்கும் உற்வங்கள் அல்லது பண்டிகைகளுக்கும் பிரபலமானது. கோயில் விழாவானது ஒவ்வொரு ஆண்டும் விருச்சிகம் மாதத்தில் (நவம்பர்-திசம்பர்) விருச்சிகோற்சவம் என்ற பெயரில் நடத்தபடுகிறது. மேலும் இந்த விருச்சிகோற்சவம் விழாவானது உலகின் மிகப் பெரிய கோயில் திருவிழாவாகும். இக்கோயில் இறைவன் “சந்தனா கோபால மூர்த்தி” வடிவத்தில் உள்ள மகா விஷ்ணு என்பதால், குழந்தையில்லாதவர்கள் குழந்தை வரம்வேண்டி இங்கு வழிபட வருதல் வழக்கமாக உள்ளது.
புராண முக்கியத்துவம் :
இப்பகுதியில் வாழ்ந்த அந்தணர் தம்பதிக்கு நெடுங்காலமாக குழந்தை இல்லை. அந்தணருக்கு கடவுள் பக்தி கிடையாது. அவரது மனைவியோ விஷ்ணுபக்தை. தன் கணவனை மன்னித்து தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என மனைவி அவரை வழிபட்டு வந்தாள். ஆனாலும், பெருமாள் மலடி என்ற இவளது பட்டத்தை தீர்க்கும் வகையில் குழந்தை பாக்கியத்தை தந்தாரே தவிர, பிறந்த குழந்தைகள் எதுவும் பிழைக்கவில்லை. ஒன்பது குழந்தைகள் பிறந்து இறந்தன. இதனால் அந்தணருக்கு பெருமாள் மீது கோபம் இன்னும் அதிகமானது. அந்தணரின் மாமனார், “”மருமகனே! தாங்கள் பெருமாளிடம் கோபப்படுவதில் அர்த்தமில்லை. உங்களுக்கு அவர்மீது பக்தி இல்லாததே குழந்தைகளின் மரணத்திற்கு காரணம். பெருமாளை சரணாகதி அடைந்தால் இனிமேல் பிறக்கும் குழந்தை இறக்காது,” என்றார். ஆனாலும், அந்தணர் அதைக் கண்டுகொள்ளவில்லை.
அந்தணரின் மனைவி தன் கணவன் திருந்தாததையும், பெருமாள் தன்னைச் சோதிப்பதையும் எண்ணி வேதனையில் தவித்தாள். ஒருமுறை அவள் தன் கணவனுடன் துவாரகை செல்ல நேர்ந்தது. அங்கே கிருஷ்ணனை சந்தித்தார் அந்தணர். “”கிருஷ்ணா! உன்னைத் திருமாலின் அவதாரம் என்கிறார்கள். உலகம் முழுமையும் காக்கும் கடவுள் நீ என்கிறார்கள். ஆனால், எனக்கு பல குழந்தைகள் பிறந்தும் இறந்து விட்டன. அவற்றைக் காக்கும் பொறுப்பு பூமியில் வாழும் கடவுளான உனக்கில்லையா” என்றார். கிருஷ்ணரின் அருகில் இருந்த அர்ஜுனன், “”அந்தணரே! ஒருவர் பிறப்பதும் இறப்பதும் விதிவசத்தால் ஆனது. இருந்தாலும், கிருஷ்ண ராஜாவை நீர் தவறாக எண்ணக்கூடாது. எனவே, இந்த கிருஷ்ணரின் முன்னால் சபதம் செய்கிறேன். இனிமேல் உனக்கு பிறக்கும் குழந்தைகள் இறக்காமல் பார்த்து கொள்கிறேன். அப்படி இறந்தால் நான் அக்னியில் விழுந்து இறப்பேன்,”என்றான்.
அந்தணர் மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார். ஆனால், பத்தாவது குழந்தையும் பிறந்து இறந்து விட்டது. இதைக் கேள்விப்பட்ட அர்ஜுனன் தீயில் இறங்கத் தயாரானான். கிருஷ்ணர் அவனைத் தடுத்து,””அர்ஜுனா! நான் அருகில் இருக்கும் போது, நீ அந்தணரிடம், குழந்தை பாக்கியம் வேண்டி கிருஷ்ணனை சரணாகதி அடைய வேண்டும் என கூறாமல், பிறக்கும் குழந்தைகளை இறக்காமல் நான் பார்த்து கொள்கிறேன் என்று ஆணவத்தால் கூறினாய். எனவே தான் பத்தாவது பிறந்த குழந்தையும் இறந்து விட்டது,”என்றார். இதைக்கேட்ட அர்ஜுனனின் அகங்காரம் அழிந்தது. ஆனாலும், அவன் அக்னியில் விழுந்து வைகுண்டம் சேர்ந்தான். அங்கே, மகாவிஷ்ணு ஒரு லிங்கத்தை கையில் வைத்தபடி தியானத்திலிருந்தார். அர்ஜுனன், “”பகவானே! எனது ஆணவம் அழிந்தது. அந்தணருக்கு கொடுத்த வாக்கை தாங்கள் காப்பாற்றவேண்டும்,” என வேண்டினான்.
மகாவிஷ்ணு அர்ஜுனனிடம் அந்த லிங்கத்தைக் கொடுத்து, “”நான் பூஜித்து வரும் இந்த லிங்கத்தை, மலைநாட்டில், அந்தணர் வாழும் ஊரில் பிரதிஷ்டை செய். அந்தணரையும் அவரது குடும்பத்தையும் வழிபடச்சொல். இது சந்தான பாக்கியத்தை தரக்கூடியது,” என்றார். அதன்படி அர்ஜுனன் இத்தலம் வந்து அந்த லிங்கத்தை பெருமாளின் கையில் இருக்கும்படியாக வைத்து, ஒரு சிலை வடிக்க ஏற்பாடு செய்தான். சிவலிங்கத்திற்குரிய ஆவுடையார் (பீடம்) மீது பெருமாள் கையில் லிங்கத்துடன் அமர்ந்திருக்கும் சிலை தயாரானது. பெருமாளாக இருந்தாலும், சிவனுக்குரிய ஈஸ்வரப்பட்டத்தையும் சேர்த்து, “பூர்ணத்திரயேஸ்வரர்’ என்ற திருநாமத்தை சூட்டினான். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குழந்தை பிறந்தாலும் இறந்து விட்ட சூழ்நிலையில் அடுத்த குழந்தைக்காக காத்திருப் பவர்கள்இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.
நம்பிக்கைகள்:
குழந்தை இல்லாதவர்கள் “கடாவிளக்கு’ என்னும் 3 அடுக்குவிளக்கை ஏற்றி பிரார்த்தனை செய்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
கேரளாவிலுள்ள கோயில்களிலேயே இங்கு தான் முதன் முதலாக ஓணத்திருவிழா துவங்கும். இதன்பிறகு தான் மற்ற கோயில்களிலும், வீடுகளிலும் ஓணக் கொண்டாட்டம் துவங்கும். பெருமாளே நேரில் அமைக்கச் சொன்ன கோயில் என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது. லிங்கத்தின் ஆவுடைக்கு மேல் பஞ்சலோகத்தால் ஆன பெருமாள் அமர்ந்த கோலம் பெருமாள் கையில் சிவலிங்கம் இருப்பதும், பெருமாளுக்கு பூர்ணத்திரயேஸ்வரர் என்ற சிவன் பெயர் இருப்பதும் தனி சிறப்பாகும்.
திருவிழாக்கள்:
மாசி சுவாதி முதல் திருவோணம் நட்சத்திரம் வரையிலும், கார்த்திகை சுவாதி முதல் திருவோணம் நட்சத்திரம் வரையிலும் இரு பெரும் விழாக்கள்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருப்பூனித்துறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கொச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
கொச்சி