கீழூர் சிவன்கோயில், கடலூர்
முகவரி
கீழூர் சிவன்கோயில், குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் – 607302.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
வடலூரில் இருந்து சென்னை வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வடக்குத்து காவல் நிலையத்தின் சற்று முன்னதாக சிறிய சாலையொன்று கிழக்கில் செல்கிறது, இதில் 4 கிலோமீட்டர் தூரத்தில் கீழூர் அமைந்துள்ளது. இப்பகுதியில் பாளையக்காரர்களால் கட்டப்பட்ட சிவன்கோயில் ஒன்று இருந்ததாக கூறுகின்றனர். காலப்போக்கில் சிதைவுண்ட அக்கோயில் பல காலம் ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டு இருந்ததாம். அதில் இப்போது சிவலிங்கமும், அதன் எதிரில் ஒரு நந்தியும், தட்சணாமூர்த்தியும், உடைந்த அம்பிகையின் மார்பளவு சிலையும் மட்டும் உள்ளது. தற்போது அக்கோயில் இருந்த இடத்தில் புதிய கோயில் எழும்பி கொண்டிருக்கிறது. பணிகள் சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது ஏனென தெரியவில்லை. விரைவில் குடமுழுக்கு கண்டு சைவ சமயம் இப்பகுதியில் தழைக்கட்டும் என வேண்டுவோம்.
புராண முக்கியத்துவம்
டில்லியை ஆட்சி செய்த மொகலாயர்களிடம் ஆந்திர பகுதியில் பணியாற்றிய வீரர்கள், .ஒரு கட்டத்தில் டில்லி பாஷாவை எதிர்த்தனர், இதனால் கோபமுற்ற பாஷா பெரும்படையைத் அனுப்பி இவர்களை கைது செய்துவர ஆணையிட்டார். பாதுஷாவால் கைது செய்யப்படுவதை தவிர்க்க தங்கள் குடிகள் மற்றும் சேனைகளுடன் புறப்பட்டு நாயக்கர்கள் ஆளும் மதுரை பகுதி செல்ல எண்ணி வந்தனர். பிற்பாடு அவர்கள் வடலூருக்கு வடக்கே உள்ள நிலப் பகுதியில் வந்து நிரந்தரமாகத் தங்கினர். டில்லி பாதுஷாவின் கீழ் பணி புரிந்ததன் நினைவாக இவர்கள் தங்கியப் பகுதிக்கு ‘’பாஷாரப் பாளையம்‘’ என பெயரிட்டனர். ஆற்காடு நவாப்பின் கீழ் இப்பகுதி வந்த போது பதினாறு கிராமங்களில் வரி வசூல் செய்யும் உரிமை இவர்களுக்கு வழங்கப்பட்டது. நவாப்பின் ஆட்சிக்கு பின்பு பதினாறு கிராமங்களின் நிர்வாக மையமாக பாச்சாரபாளையம் விளங்கியது. பாச்சாரபாளையக்காரரிடம் சிறிய குதிரைப்படையொன்று இருந்தது. அக்குதிரைகளை பராமரிப்பதற்காக முஸ்லீம் இனத்தவர்களையும் பணியமர்த்தி இருந்தார்கள். ஒருமுறை வடக்குத்து பாளையக்காரர் தமது இல்ல திருமண விழாவிற்காக பாச்சாரப்பாளையத்தார்களிடம் குதிரைகளைக் கேட்டுள்ளார். அதற்கு பாச்சாரப்பாளையக்காரர் தமது குதிரைகளுக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் அதற்கு இழப்பிடு தரவேண்டும் எனக் கூறினார். அந்த உடன்படிக்கைக்கு ஒத்துக்கொண்ட வடக்குத்து பாளையக்காரர் பாச்சாராப்பாளையக்காரரிடமிருந்து குதிரைகளைப் பெற்றுள்ளார். திருமணம் நடைபெற்ற இரவு மர்மமான முறையில் குதிரைகள் அனைத்தும் இறந்து கிடந்தன. இந்த இழப்பிற்கு காரணம் வடக்குத்து பாளையக்காரரின் அஜாக்கிரதை தான் காரணம் என கூறி ஒப்பந்தப்படி குதிரைகளின் இழப்பிற்கு நஷ்டஈடு கேட்டுள்ளார். எனவே தமது பாளையத்திற்கு உட்பட்ட கிழக்குப் பகுதியில் இருந்த காட்டுப்பகுதி முழுவதையும் பாச்சாரப்பாளையத்தாற்கு நஷ்டஈடாக கொடுத்தார். அக்காட்டுப்பகுதி முழுவதையும் அழித்து நிலங்களாக்கி அப்பகுதியில் புதிய மக்கள் குடியேற்றங்களை பாச்சாராப் பாளையக்காரர் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் தமது அரண்மனையையும் அந்தப்பகுதியில் புதியதாக அமைத்துக் கொண்டார். வடக்குத்து பாளையத்தின் கிழக்கு பகுதியில் அமைந்திருந்த இப்பகுதிக்கு கீழூர் என பெயரிட்டுக் கொண்டனர். தற்போதும் பாளைய வாரிசுகள் கீழுரில் வாழ்ந்து வருகின்றனர். (தகவல் உதவி- வரலாற்று பேராசிரியர் திரு.சிவராமகிருஷ்ணன் அவர்கள்) # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
குறிஞ்சிப்பாடி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி