Thursday Dec 19, 2024

கிருஷ்ணாபுரம் ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அருள்மிகு ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம்,

திருநெல்வேலி மாவட்டம் – 627 759.

போன்: +91-4633-245250, 98429 40464

இறைவன்:

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர்

அறிமுகம்:

 ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் ராமாயணத்தில் இருந்தே அறியக்கூடிய புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. வால்மீகியின் ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தில் இந்த இடத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது, இது இரண்டு மிக முக்கியமான காவியங்களில் ஒன்றாகும்.

கடத்தப்பட்ட மனைவி சீதையைக் கண்டுபிடிக்க ராமருக்கு உதவிய குரங்குக் கடவுளான ஆஞ்சநேயர் (அனுமான்), வானர (குரங்கு) படையுடன் ஒரு வாரம் இங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணாபுரத்தில் உள்ள அனுமனின் உருவம் பெரும் வீரம், வலிமை மற்றும் அழியாத விசுவாசத்தின் அடையாளமாகும். அவர் மக்களை ஊக்குவிக்கிறார் மற்றும் அவர் ராமரின் தூதராக இருந்ததால், பிரார்த்தனைகளுக்கு விருப்பத்துடன் பதிலளிக்கும் தெய்வமாக வணங்கப்படுகிறார். கிஷ்கிந்தா புரம் என்று அழைக்கப்பட்ட இந்த இடம் பல ஆண்டுகளாக கிருஷ்ணாபுரமாக மாறிவிட்டது. இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியில் அமைந்துள்ள இக்கோயில், சுற்றிலும் நெல் வயல்களுடன் ஆஞ்சநேயருக்கு கோயில் உள்ளது.

புராண முக்கியத்துவம் :

       யாராலும் சாதிக்க முடியாத காரியங்களை சாதிக்கும் சக்தி பெற்றவர் ராமரின் தூதனான அனுமன். இவர் ஒரு முறை ராமர் தந்த மோதிரத்துடன் சீதையை தேடி வானர வீரர்களுடன் தெற்கு நோக்கி புறப்பட்டு செல்கிறார். பசி, தாகத்தால் வானர வீரர்கள் களைப்படைந்த போது அவர்கள் கண்ணுக்கு ஒரு விசித்திரமான குகை ஒன்று தென்பட்டது. அந்த குகைக்குள்ளேயிருந்து தண்ணீரில் நனைந்தபடி பறவைகள் வருவதை பார்த்து விட்டு அதனுள் நுழைந்து பார்த்தனர். அங்கே நீர் நிறைந்த குளங்கள், மாளிகைகள், கோபுரங்கள் இருந்ததையும், குளத்தின் அருகே சுயம்பிரபை என்ற பெண் தவத்தில் இருப்பதையும் கண்டனர்.(இந்தக் குகையையும் குளத்தையும் இப்போதும் பார்க்கலாம்) சுயம்பிரபையை கண்ட ஆஞ்சநேயர் அவளை வணங்கி, தாங்கள் யார்? என்று கேட்கிறார். அதற்கு சுயம்பிரபை முன்னொரு காலத்தில் தேவலோகத்தை சேர்ந்த மயன் என்பவன் இந்த பகுதியில் அழகிய ஊரை அமைத்தான்.

ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து பிரம்மாவிடம் வரம் பெற்றான். அத்துடன் தெய்வப்பெண்ணான ஹேமையுடன் தான் அமைத்த அழகிய நகரில் வாழ்ந்து வந்தான். மயன் ஹேமையுடன் இருப்பதாக நாரத முனிவர் இந்திரனிடம் கூறினார். இதனால் கோபமடைந்த இந்திரன் மயனை கொன்று விட்டான். கொலைப்பாவத்தால் சிரமப்பட்ட இந்திரனைக் காக்க தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவனின் ஆணைப்படி கங்கை இந்த குகைக்குள் வர அதில் குளித்து தன் பிரம்மஹத்தி தோஷத்தை இந்திரன் போக்கி கொண்டான். அன்றிலிருந்து இந்த குளத்தை நான் காத்து வருகிறேன். அத்துடன் ராமதூதன் அனுமன் இப்பகுதி வரும் போது அவனிடம் ஒப்படைத்து விட்டு நீ தேவலோகம் வந்து விடலாம் என்று பிரம்மன் கூறினார்.

எனவே இன்று முதல் இந்த தீர்த்தத்தை நீ பாதுகாத்து வரவேண்டும். நான் தேவலோகம் செல்கிறேன்’ என்றாள் சுயம்பிரபை. ஆனால் அனுமனோ, “”தாயே, சீதா தேவியை ராமருடன் சேர்த்து வைக்காமல் நாங்கள் எங்கும் தங்க மாட்டோம். மேலும் ராமர் பட்டாபிஷேகம் முடிந்த பின் இங்கு வந்து தங்குகிறேன்’ என்று கூறி விடை பெற்று சென்றார். இலங்கையில் வெற்றி கண்ட ராமர் சீதையுடன் புஷ்பவிமானத்தில் அயோத்தி திரும்புகிறார். அப்போது இத்தலத்தில் வசிக்கும் சுயம்பிரபை பற்றியும், அவள் பாதுகாத்துக்கொண்டிருக்கும் தீர்த்தத்தைப்பற்றியும் ராமரிடம் ஆஞ்சநேயர் எடுத்துக் கூறினார்.

அனுமன் கூறியதைக்கேட்ட ராமரும்,””ஆஞ்சநேயா,பட்டாபிஷேகம் முடிந்தவுடன் அவசியம் இத்தலத்திற்கு வருவோம்’ என்றார். ராமர் பிரதிஷ்டை செய்த அனுமன் பட்டாபிஷேகமும் சிறப்பாக நடந்தது. ஒரு சுபமுகூர்த்த நாளில் ஆஞ்சநேயரை அழைத்துக்கொண்டு கிருஷ் ணாபுரம் வந்தார் ராமர். ஆஞ்சநேயரை யந்திரங்கள் எழுதச்செய்து, தானே யாகம் வளர்த்து அனுமனை பிரதிஷ்டை செய்து, நீ இங்கேயே தங்கி உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறார் ராமர்.

எந்த இடத்தில் ராமரின் திருநாமம் ஒலிக்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் அனுமான் நிச்சயம் இருப்பார். அதே போல் அனுமன் நாமம் ஒலிக்கின்ற இடங்களில் ராமபிரான் இல்லாமலா போய் விடுவார். இதனால் தான் இக்கோயிலில் ராமச்சந்திர மூர்த்தி, சீதை, லட்சுமணன், அனுமாரோடு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார்.ராமனின் அடுத்த அவதாரமாகிய கிருஷ் ணனுக்கும்,அனுமனுடன் தொடர்பு இருக்க வேண்டும் என நினைத்தார். எனவே ஆஞ்சநேயர் கோயில் இருக்கும் பகுதி கிருஷ்ணாபுரம் எனப்பட்டது.

நம்பிக்கைகள்:

மேலும் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள குளத்தின் படியில் படிப்பாயாசம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம்.

சிறப்பு அம்சங்கள்:

                கோயில் மூலவராக ஜெயவீரஅபயஹஸ்த ஆஞ்சநேயர் சுயம்பு மூர்த்தியாக ஆறடி உயரத்திற்கு மேல் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இதுவே ஒரு மிகப்பெரிய விசேஷம் தான். நெல்லிமரம் தலவிருட்சமாகவும், அனுமன் தீர்த்தம் தல தீர்த்தமாகவும் உள்ளது. கிஷ்கிந்தாபுரம் என்பதே இப்பகுதியின் புராணப் பெயராகும்.””அனுமார் வாழ்ந்த காலத்தில் அவரை பார்க்காதவர்கள் இங்குள்ள ஆஞ்சநேயரை பார்ப்பது மிகவும் விசேஷம். ஏனெனில், சாதாரணமாக அனுமார் எப்படி இருப்பாரோ அதேபோல் இங்கு கிரீடம் ஏதும் இல்லாமல், ராமர் கொடுத்த கணையாழியை தன் வலது ஆள்காட்டி விரலில் அணிந்தபடி மிக எளிமையாக அபஹஸ்தமுடன் இருக்கிறார். அனுமார் படங்களை வீடுகளில் வைத்து வழிபட தயங்குவார்கள். ஆனால் கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் ஆயுதம் ஏதும் இல்லாமல், கேட்டதையெல்லாம் தருகிறேன் என்பது போல் இருக்கிறார். எனவே இவரை வீடுகளில் வைத்து வழிபட்டால் அனுமாரையே நேரில் சந்தித்து நம் குறைகளை கூறுவதுபோல் கூறி பலன்களை பெறலாம். குற்றாலம் செல் பவர்கள் மதுரை குற்றாலம் ரோட்டில் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் சென்று ஆஞ்சநேயரை ஒரு முறை கும்பிட்டு கோடி மடங்கு பலனை பெற்று வரலாம்.

திருவிழாக்கள்:

அனுமன் ஜெயந்தி விழா ஒரு வாரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரை விசு, ஸ்ரீ ராமநவமி, புரட்டாசி சனி, ஆங்கிலப்புத்தாண்டு, தைப்பொங்கல், ஐப்பசி விசு மற்றும் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் எல்லாம் திருவிழா தான்.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கிருஷ்ணாபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தென்காசி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை, திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top