காரமடை நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், கோயம்பத்தூர்
முகவரி :
காரமடை நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்,
காரமடை, மேட்டுப்பாளையம் தாலுக்கா,
கோயம்பத்தூர் மாவட்டம்,
தமிழ்நாடு– 641 104
தொலைபேசி: +91 4254 272 318 / 273 018
இறைவன்:
நஞ்சுண்டேஸ்வரர்
இறைவி:
உலகாம்பிகை / உலகநாயகி / லோக நாயகி
அறிமுகம்:
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் தாலுகாவில் காரமடை நகரில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானம் நஞ்சுண்டேஸ்வரர் என்றும், தாயார் உலகாம்பிகை / உலகநாயகி / லோக நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய வாரியத்தால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
புராண முக்கியத்துவம் :
அமுதம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது மத்தாக பயன்பட்ட வாசுகி நாகம், களைப்பில் விஷத்தை உமிழ்ந்தது. தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன் தேவர்களைக் காக்க, விஷத்தை விழுங்கினார். அப்போது அம்பிகை, அவரது கழுத்தைப் பிடித்து விஷம் உடலுக்குள் செல்லாமல் நிறுத்தினாள். விஷயம் கழுத்திலேயே தங்கியது. இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. தேவர்களை காப்பதற்காக விஷத்தை உண்டவர் என்பதால் இவர், “நஞ்சுண்டேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். திருநீலகண்டன் என்றும் இவருக்கு பெயர் உண்டு.
நம்பிக்கைகள்:
திருமண, சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் சிவன், அம்பாள், சிவதுர்க்கைக்கு வஸ்திரம் அணிவித்து, வேண்டிக்கொள்கிறார்கள். சித்திரையில் நஞ்சுண்டேஸ்வரருக்கு தேனபிஷேகம் செய்வது சிறப்பு. வைகாசியில் கரும்புச் சாறு அபிஷேகமும், ஆனியில் தீர்த்தவாரியும், ஆவணியில் நெய்யபிஷேகமும், புரட்டாசியில் பால் தயிர் அபிஷேகமும் செய்து வேண்டிக் கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்!
சிறப்பு அம்சங்கள்:
அம்பிகை, லோக நாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். சிவனின் உடலில் விஷம் இறங்காமல் செய்து, மக்களைக் காப்பாற்றியதால் இவள் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். இரண்டு கரங்களில் தாமரையுடன் காட்சி தரும் இவளது சிற்பம் திருவாட்சியுடன் சேர்த்து வடிக்கப்பட்டிருக்கிறது. சோமாஸ்கந்த அமைப்பில் அமைந்த தலம் இது. சிவன், அம்பிகைக்கு நடுவில் ஆறுமுக வேலவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இம்மூவரது சன்னதியும் ஒரே வரிசையில் அமைந்திருக்கிறது. 12 கரங்களுடன் காட்சி தரும் முருகனுடன் வள்ளி, தெய்வானையும் உள்ளனர்.
சிவனுக்கு இடதுபுறத்தில் ரங்கநாதர் தனிக்கோயிலில் இருக்கிறார். இவ்விருவருக்குமான தீர்த்தம் கோயிலுக்குப் பின்புறம் உள்ளது. மார்கழி மாதத்தில் அதிகாலை பூஜையின்போது தினமும் நஞ்சுண்டேஸ்வரர், ரங்கநாதர் கோயில் அர்ச்சகர்கள் இருவரும் ஒன்றாக சென்று தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்கிறார்கள். நவராத்திரி விழாவின் பத்தாம் நாளில் ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இக்கோயிலுக்கு வந்து அம்பு போடும் நிகழ்ச்சிக்கு சிவனை அழைத்துச் செல்வது விசேஷம். அப்போது சிவன், பெருமாள் இருவரும் அருகருகில் செல்கின்றனர். அந்நேரத்தில் மட்டுமே இவ்விருவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.
இத்தலத்து விநாயகர், “செண்பக விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். சிவன் சன்னதியை சுற்றி வரும்போது கோஷ்டத்தின் அடியில் பாதாள விநாயகர் இருக்கிறார். மிகவும் சிறிய மூர்த்தியான இவரை வணங்கிவிட்டே பரிவார தேவதைகளை வணங்க வேண்டும் என்பது ஐதீகம். கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி சீடர்கள் இல்லாமல் தனித்து காட்சி தருகிறார். இவருக்கு வியாழக்கிழமை குரு ஓரையில் (காலை 6.30 7 மணி) சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
கோஷ்டத்தில் பிரதோஷமூர்த்தி, சிவதுர்க்கையும் இருக்கிறாள். துர்க்கைக்கு அருகில் சிவலிங்கத்தை ராகு, கேது வழிபடும் சிற்பம் இருக்கிறது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் துர்க்கையை வணங்கி, இந்த லிங்கத்தையும் தரிசித்துச் செல்கிறார்கள். நவக்கிரக சன்னதி கிடையாது. கால பைரவர், சூரியன் உள்ளனர். மைசூரில் உள்ள நஞ்சன்கூடு தலத்தை மாதிரியாகக் கொண்டு, இந்தக் கோயிலை அமைத்ததாகச் சொல்வர்.
கர்நாடகாவில் நஞ்சன்கூடில் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்குவது. நஞ்சுண்டேஸ்வரர், கோயில். அதே பெயரில் தமிழ்நாட்டில் காரமடையிலும் ஓர் கோயில் உள்ளது. நஞ்சுண்டேஸ்வரர் கோவை காரமடைக்கு வந்தது எப்படி? ஒரு காலத்தில் நஞ்சன்கூடில் வாழ்ந்த ஒரு பிரிவினர், சூழ்நிலை காரணமாக அங்கிருந்து காரமடைக்கு இடம் பெயர்ந்தனர். தாங்கள் வணங்கி வந்த நஞ்சுண்டேஸ்வரரை, தாங்கள் இடம் பெயர்ந்த இடத்திலும் வணங்க வேண்டும். என்ற ஆவலில் அவருக்கு காரமடையில் கோயில் அமைத்தனர். ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையான இந்த கோயில் வீரநவீ ஞ்சராயர் என்பவரால் கட்டப்பட்டது. காரமடையின் மையப்பகுதியில் ரங்கநாதர் கோயில் அருகிலேயே இந்த கோயில் உள்ளது. கோயிலின் முன்பு உயர்ந்த தீபத்தூண் காணப்படுகிறது. கருவறையும் அர்த்த மண்டபமும் பழமையானவை. அர்த்த மண்டபத்தில் ஒருபுறம் விநாயகரும் முருகனும் இருக்க, அவர்களுக்கு முன்னே நந்தி உள்ளார். கருவறையில் ஆலகால விஷத்தை உண்டு உயிர்களைக் காப்பாற்றிய நஞ்சுண்டேஸ்வரர் லிங்கவடிவில் காட்சி தருகிறார். பிராகாரங்களில் சூரியன், கால பைரவர், சனீஸ்வரன், பிள்ளையார் தரிசனம் கிடைக்கிறது. அன்னை லோகநாயகி தனி சன்னிதியில் அருள் புரிகிறாள். ஆறுமுகவேலவர், வள்ளி தெய்வானையோடு தனி சன்னிதியில் காட்சி தருகிறார். காரமடை நஞ்சுண்டேஸ்வரரை வணங்கினால் வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும். கடுமையான, நோய்களும் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவிழாக்கள்:
சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை
காலம்
1479 ஆம் ஆண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காரமடை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கோயம்பத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்