Monday Dec 23, 2024

காஞ்சிபுரம் அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில்

முகவரி

அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள்(அஷ்டபுஜப்பெருமாள்) திருக்கோயில், காஞ்சிபுரம் – 631501 காஞ்சிபுரம் மாவட்டம் போன்: +91-44-2722 5242

இறைவன்

இறைவன்: ஆதிகேசவப்பெருமாள்,அஷ்டபுஜப்பெருமாள், இறைவி: அலமேலு மங்கை

அறிமுகம்

2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது இந்த அஷ்டபுஜப்பெருமாள் கோயில். இக்கோயிலின் இறைவனான திருமால் ஆதிகேசவப்பெருமாள் என்றும், தாயார் அலர்மேல்மங்கை, பத்மாசினி ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். கோயிலின் தீர்த்தம் கஜேந்திர புஷ்கரணி என்றழைக்கப்படுகிறது. புராண காலத்தில் இந்த ஊர் அட்டபுயகரம், அஷ்டபுஜகரம் என்கிற பெயர்களில் அழைக்கப்பட்டது. திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார் போன்றோர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கிறது இக்கோயில்.

புராண முக்கியத்துவம்

முன்னொரு காலத்தில் மகாசந்தன் என்னும் யோகிக்கு இந்த பூவுலக வாழ்க்கையை முடித்து விட்டு இறைவனின் திருவடி சேர விருப்பம் ஏற்பட்டது. இந்திரனுக்கு நிகரான தகுதி பெற்றிருந்த இவர் பெருமாளை நோக்கி நீண்ட காலம் தவமிருந்தார். பயந்து போன இந்திரன் மகாசந்தனின் தவத்தை கலைக்க தேவலோக கன்னிகளை அனுப்பி வைத்தான். இதற்கெல்லாம் யோகி அசையவில்லை. பின் இந்திரன் ஆண்யானை வடிவமெடுத்து முனிவரின் இருப்பிடம் சேர்ந்தான். இதன் அழகில் மயங்கிய முனிவர் தானும் யானை வடிவெடுத்து யானைகளுடன் கூட்டம் கூட்டமாக காடுகளில் திரியும் போது, சாளக்கிராமத்தில் நீராடியது. அப்போது அந்த யானைக்கு தன் யோக வாழ்க்கை ஞாபகத்திற்கு வந்தது. மிகவும் வருந்திய யானை பல திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளை வழிபட்டு பரிகாரம் தேடியது. மிருகண்டு முனிவர் என்பவர் இதன் நிலை கண்டு வருந்தி காஞ்சிக்கு சென்று வரதராஜப்பெருமாளை வழிபட்டால் உனது பிரார்த்தனை நிறைவேறும் என்றார். அதன்படியே இந்த யானையும் பெருமாளை வழிபட்டு வந்தது. ஒரு முறை கோயிலுக்கு செல்லும் வழியில் அஷ்டபுஜ பெருமாளை தரிசிக்கும் வாய்ப்பு இதற்கு கிடைத்தது. இவரது அழகில் மயங்கிய யானை அருகிலிருந்த குளத்திலிருந்து 14,000 மலர்களை பறித்து கொடுத்து இறைவனுக்கு சேவை செய்து வந்தது. ஒரு நாள் பூ கிடைக்காமல் போகவே பக்கத்திலிருந்த குளத்திற்கு சென்று பூ பறித்தது. அப்போது அதிலிருந்த முதலை யானையின் காலை விடாமல் பிடித்து கொண்டது. பயந்து போன யானை அஷ்டபுஜ பெருமாள் தன்னை காப்பாற்றும் படி “ஆதிமூலமே’ என அபயக்குரல் கொடுத்தது. முன்பொரு முறை கஜேந்திரனை காப்பாற்றிய ஆதிமூலம் இந்த முறையும் கருட வாகனத்தில் ஏறி வந்து தனது சக்கரத்தினால் முதலையின் தலையை வெட்டி யானையை காப்பாற்றினார்.

நம்பிக்கைகள்

வீடுகட்ட நிலம் வாங்க இருப்பவர்கள், விளை நிலங்களை வாங்குபவர்கள், கட்டிய வீடுகளில் பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு பலனடைகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

அஷ்டபுஜபெருமாள்: ஒரு சமயம் பிரம்மா பூமியில் தனக்கு விக்ரக வழிபாடு இல்லை என்பதற்காக சரஸ்வதியை விட்டுவிட்டு தனியாக பிரமாண்டமான யாகம் ஒன்றை இப்பகுதியில் நடத்தினார். இதனால் வருந்திய சரஸ்வதி யாகத்தை அழிக்க சரபாஸ்வரன் போன்ற கொடிய அரக்கர்களை அனுப்பி வைத்தாள். தன்னை காக்கும்படி பிரம்மனும் பெருமாளை வேண்ட, பெருமாள் 8 திருக்கரங்களுடன் அஷ்டபுஜ பெரு மாளாக தோன்றி அரக்கர்களையும் பின் வந்த காளியையும் அழித்து யாகம் சிறப்பாக நடைபெறச் செய்தார். ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட 108 திருப்பதிகளில் திருமங்கையாழ்வாரும், பேயாழ்வாரும் மங்களாசாஸனம் செய்த 44வது திருப்பதி இந்த அஷ்டபுயகரம். பெருமாள் இங்கு அஷ்டபுஜ பெருமாளாக தோன்றுவதற்கு முன்பே ஆதிகேசவப்பெருமாளாக இத்தலத்தில் அருள்பாலித்து வந்திருக்கிறார் என்றும், மங்களாசாஸனத்திற்கு பின் தான் அஷ்டபுஜபெருமாள் பிரபலமானார் என்றும் கூறுவார்கள். 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் எட்டு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தாயாரை தனியாக பாடல் பாடி மங்களாசாஸனம் செய்த சிறப்பு பெற்ற தலம். இந்த பெருமாள் வலது நான்கு திருக்கரங்களில் சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு ஆகியவையும் இடது நான்கு திருக்கரங் களில் சங்கு, வில், கேடயம், கதை ஆகியவையும் கொண்டு அருள் பாலிக்கிறார். சாதாரணமாக பெருமாள் கோயில்களில் ராஜகோபுர நுழைவு வாயில் ஒரு திசையிலும் சொர்க்க வாசல் ஒரு திசையிலும் இருக்கும். ஆனால் இங்கு சொர்க்கவாசலும் கோயிலின் நுழைவு வாசலும் வடக்கு நோக்கி இருப்பது கோயிலின் சிறப்பம்சமாகும். பூமாதேவியை அழிக்க வந்த அரக்கனை இத்தல பெருமாள் அழித்து அவளை காப்பாற்றியதால், வீடுகட்ட நிலம் வாங்க இருப்பவர்கள், விளை நிலங்களை வாங்குபவர்கள், கட்டிய வீடுகளில் பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு பலனடைகிறார்கள்.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி, ராமநவமி, நவராத்திரி

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top