ஓதல்வாடி பிரம்மபுரீஸ்வரர் சிவன்கோயில், திருவண்ணாமலை
முகவரி :
ஓதல்வாடி பிரம்மபுரீஸ்வரர் சிவன்கோயில்
ஓதல்வாடி, சேத்பட் தாலுகா,
திருவண்ணாமலை மாவட்டம் – 606902.
தொடர்புக்கு: ராஜசேகர் – 81240 89062
இறைவன்:
பிரம்மபுரீஸ்வரர்
இறைவி:
அபீதகுஜாம்பிகை
அறிமுகம்:
திருவண்ணாமலை மாவட்டம் – சேத்பட் தாலுகாவில், ஆரணிக்கும் தேவிகாபுரத்துக்கும் இடையில் உள்ளது ஓதல்வாடி எனும் கிராமம். இங்குதான் பிரம்மபுரீஸ்வரரின் ஆலயம் உள்ளது. பிரம்ம தேவருக்கும் முருகனுக்கும் சிவனார் அருள்பாலித்த தலம். ஆனால், ஆலயம் சிதிலமுற்றுத் திகழ்கிறது.
ஒருகாலத்தில் சேயாற்றங்கரையில் பிரமாண்ட கற்றளியாக இருந்த ஆலயம் இடிந்து போக, பின்னர் சிறிய கோயிலாக மாற்றிக் கட்டப்பட்டது. பிறகு அதுவும் களையிழந்து பூஜையின்றிபோனது. கற்றளி இருந்த கோயில் இடம் பள்ளிக் கூடமாக மாறிவிட்டது. தற்போது குறுகிய இடத்தில் சிறிய கூடாரத்தின் கீழ் சுவாமி அமர்ந்திருக்கிறார். அம்பிகையின் திருநாமம் அபீதகுஜாம்பிகை. ஆனால் அன்னையின் திருமேனி சென்ற இடம் தெரியவில்லை!
புராண முக்கியத்துவம் :
பல்லவர்களும் பிற்காலச் சோழர்களும் கொண்டாடிய ஆலயம் இது என்கிறார்கள் ஊர் மக்கள். பரிவார தெய்வங்கள், பழங்கால சிலைகள் பலவும் உடைந்த நிலையில் கோயிலைச் சுற்றிக் காணப்படுகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளாக பூஜைகளையும் பிரதோஷ வழிபாடுகளையும் ஊர்மக்கள் இயன்றவரை செய்து வருகின்றனர். நிச்சயம் எங்கள் ஊர் கோயிலை கட்டி முடித்து விடுவோம், இங்கு இடம் கிடைக்காவிட்டாலும் வேறோர் இடத்தில் ஆலயத்துக்கென இடம் வாங்கி வைத்துள்ளோம். அங்கேனும் நிச்சயம் ஐயனுக்கான ஆலயத்தைக் கட்டு வோம்” என்று நம்பிக்கையோடு ஊர்மக்கள் கூறுகிறார்கள்.
பிரணவ உபதேசத்தின்போது ஈசனை சிஷ்யனாக பாவித்தார் அல்லவா முருகப்பெருமான்?! அதற்குப் பிராயச்சித்த மாக இங்கு வந்து சிவபூஜை செய்து அருள் பெற்றார் என்று கூறப்படுகிறது. ஈசனே முருகப்பெருமானுக்கு இங்கு காட்சி தந்து “நீ செய்ததில் எந்தத் தவறும் இல்லை. எங்கு ஞானம் இருக்கிறதோ, அதுவே உயர்ந்தது. ஞானம் கொண்டவருக்கு வயது பொருட்டு இல்லை என்பதை உணர்த்தவே அந்தத் திருவிளையாடல் நிகழ்வுற்றது!” என்று ஆறுதல் தெரிவித்தாராம் அந்த பரம்பொருள்.
அதேபோல் ஆணவத்துடன் பொய் கூறிய பிரம்மன், தொண்டை நாடெங்கும் பல ஆலயங்களில் வழிபாடு செய்துவந்தபோது, இங்கும் வந்து ஈசனை வழிபட்டு அருள் பெற்றார் என்று கூறுகிறார்கள். அதனால்தான் இந்த ஊருக்கு `பிரம்மபுரி’ என்றும் ஈசனுக்கு `பிரம்மபுரீஸ்வரர்’ என்றும் திருநாமம் வந்ததாம். பிரம்மன் சிவாய மந்திரம் ஓதியும் பாடியும் தங்கிய தலம் என்பதால் `ஓதல் பாடி’ என்று பெயர் ஏற்பட்டது. அதுவே தற்போது `ஓதல்வாடி’ என்று மாறிவிட்டது என் கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.
உறவுகளில் உயர்ந்ததான குரு-சிஷ்ய உறவின் பெருமையைக் கூற இங்கே ஈசன் தோன்றியதால், தகுந்த குருவைத் தேடும் அன்பர்கள் இங்கு வந்து வழிபடுவது விசேஷம். அதன் பலனாக குருவே நம்மைத் தேடி வருவார் என்கிறார்கள். மேலும் ஞானமும் மோட்சமும் அருளும் தேவனாகவும் இங்கே பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார்! சிதிலமான இந்த ஆலயத்தைப் புனரமைக்க சித்திரை மாதம் கட்டடப்பணிகள் தொடங்க உள்ளார்கள்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஓதல்வாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவண்ணாமலை
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி