ஒழுகச்சேரி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
ஒழுகச்சேரி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 609807.
இறைவன்
இறைவன்: காசிவிஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி
அறிமுகம்
கும்பகோணம்- சென்னை சாலையில் உள்ள அணைக்கரை எனும் ஊரின் முதல் பாலம் ஏறுவதற்கு முன்னர் வலதுபுறம் ஒரு சாலை திட்டச்சேரி செல்கிறது அதில் ஒரு கிமீ தூரம் சென்றால் உள்ளது இந்த ஒழுகச்சேரி. சிறிய கிராமம், பிரதான தார் சாலையில் இந்த சிவாலயமும் இதன் தெற்கில் ஒரு பிராமண அக்கிரஹார தெருவில் வைணவ கோயிலும் உள்ளது. இறைவன்- காசிவிஸ்வநாதர் இறைவி- விசாலாட்சி. சிறிய கோயிலாக இருந்தாலும் மிக சிறப்பு வாய்ந்தது. சிவாலயம் மேற்கு நோக்கியது, இதனால் நூறு கிழக்கு நோக்கிய சிவாலயங்களை தரிசனம் செய்த பலன் அடையலாம், அது மட்டுமன்றி அம்பிகை இங்கு கிழக்கு நோக்கி இருக்கிறார். ஆம் இறைவன் கருவறை முகப்பில் ஒரு மண்டபம் உள்ளது அதனை ஒட்டி இறைவனின் வலதுபுறம் கிழக்கு நோக்கிய கருவறையும் முகப்பு மண்டபமும் கொண்டுள்ளார். இது ஒரு அற்புதமான காட்சியாகும், இறைவன் இறைவி திருமணக்காட்சி என்றும் சொல்வர். இதனால் திருமணக்கோலத்தில் உள்ள இந்த இறைவன் இறைவியை வேண்டினால் திருமண வரம் உடனே கிடைக்கும் என்பது திண்ணம். தம்பதிகளிடையே பிணக்கு தீர வரவேண்டிய ஒரு தலமும் ஆகும். இறைவன் கருவறை முகப்பில் ஒரு மண்டபம் உள்ளது, அதில் கருவறை வாயிலில் ஒரு விநாயகர் உள்ளார். இறைவன் கருவறை வடக்கில் சண்டேசர் சன்னதி உள்ளது. தென் புறம் கருவறை கோட்டத்து தெய்வமாக தென்முகன் உள்ளார். தென்மேற்கில் கிழக்கு நோக்கிய விநாயகர் சிற்றாலயமும், வடமேற்கில் முருகனுக்கு ஒரு சிற்றாலயமும் உள்ளது. கோயிலின் வாயில் ஓரமாக உயர்ந்தோங்கிய ஒரு வில்வமரமொன்று பட்டுபோய் நிற்கிறது. கோயில் பெரிதாய் பழுதொன்றும் இல்லாமல் இருந்தாலும் பல ஆண்டுகளாக குடமுழுக்கு காணமல் உள்ளது. பூஜையும் ஒரு கால பூஜையாகவே உள்ளது.
புராண முக்கியத்துவம்
1.உப்பு விற்கச் செல்லும் உமணர் வண்டியில் பல எருதுகளைப் பூட்டி ஓட்டிச்செல்வர். உப்புவண்டிகள் பல ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கும். இதற்கு ‘ஒழுகை’ என்று பெயர். கொள்ளிட கரையில் அக்காலத்தில் மரக்கலங்கள் வந்து செல்வதுண்டு. இவ்வூர் கொள்ளிட கரையில் உள்ளதால், இங்கிருந்து உப்பு ஏற்றுமதி நடைபெற்றிருக்கலாம் அதனால் இவ்வூர் ஒழுகை சேரி என அழைக்கப்பட்டிருக்கலாம். 2.வண்டிப் பாதை, மணல் பாதை, ஒற்றையடிப் பாதை, இப்படியாக பல விரிவுகள் உள்ளன ஒழுங்கை என்ற சொல்லுக்கு. இப்படிப்பட்ட ஒழுங்கைகளுக்குப் பெயர்போனது கொள்ளிடத்து கரை, இதனால் ஒழுங்கை சேரி என வந்திருக்கலாம். 3.சோழ மன்னர் அதிராஜேந்திரனின் மனைவியின் பெயர் உலகமுழுதுடையாள் என்பதாகும். இவர் கொடைஅளித்த கிராமம் உலகமுழுதுடையாள் சேரி எனப்பட்டு பின்னர் ஒழுகச்சேரி ஆனது எனவும் ஒரு வரலாறு உண்டு. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஒழுகச்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவிடைமருதூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி