எருமனூர் வாயுலிங்கேஸ்வரர் சிவன்கோயில், கடலூர்
முகவரி
எருமனூர் வாயுலிங்கேஸ்வரர் சிவன்கோயில், எருமனூர், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் – 606 003.
இறைவன்
இறைவன்: வாயுலிங்கேஸ்வரர்
அறிமுகம்
விருத்தாசலம் பெரியகோயிலின் மேற்கில் செல்லும் கொளஞ்சியப்பர் கோயில் சாலையில் உள்ள தொடர்வண்டி மேம்பாலத்தினை தாண்டியவுடன் வலதுபுறம் மணிமுத்தாற்றினை கடந்து செல்லும் பாலம் வழியாக இரண்டு கிமி சென்றால் எருமனூர் கிராமம் உள்ளது, அதற்கு சற்று முன்னதாக சாலை இடது ஓரத்தில் CSMகல்லூரி உள்ளது அக்கல்லூரியின் வாயிலில் இருந்து சரியாக 200மீட்டர் எருமனூர் சாலையில் சென்றால் வலது புறத்தில் சிறிய வீட்டுடன் ஒரு பெரிய வாழைதோப்பு உள்ளது அதில் தான் நாம் காணவிருக்கும் இறைவன் வாயுலிங்கமாக வீற்றிருக்கிறார். இந்த எருமனூர் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட இடம் என்ற சிறப்பும் உடையது. எருமன் என்போர் யாதவகுலத்தின் உட்பிரிவுகளில் ஒருவர்களாவர், அவர்கள் வாழ்ந்த பகுதியாக இருந்திருக்கலாம் இந்த எருமனூர். ஓர் வன்னி மரத்தின் கீழ் நீண்ட தகர கொட்டகை ஒன்றில் எம்பெருமான் கிழக்கு நோக்கிய வாயுலிங்க மூர்த்தியாக காட்சி தருகிறார். வாயுவால் பூஜிக்கப்பட்டதால் வாயுலிங்கேஸ்வரர் எனப்படுகிறார். இறைவனின் இடதுபுறத்தில் சிறிதாய் ஓர் அம்பிகை, இறைவன் எதிரில் இருபுறமும் விநாயகரும் சுப்ரமணியரும் உள்ளனர். இவரை வழிபட்டால் நீண்ட ஆயுளையும் பலத்தையும் பெறலாம்.
புராண முக்கியத்துவம்
அஷ்டம் என்றால் எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும். கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவை எண்திசைகள் ஆகும். இந்த எண் திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், யமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர். விருத்தாசலம் பழமலை நாதர் கோயிலை சுற்றிலும் எட்டு லிங்கங்கள் உள்ளன. அவை அஷ்ட திக்கு பாலகர்கள் வழிபட்டவை ஆகும். கிழக்கில் பூதாமூரில் சுவர்ணகடேஸ்வரர் எனும் பெயரிலும் , தென்கிழக்கில் ஏகநாயகர் எனும் பெயரில் பூதாமூர் தெற்கிலும் , தெற்கு திசையில் பெண்ணாடம் சாலையில் எமலிங்கமும் , தென்மேற்கு திசையில் ஆலிச்சிகுடியிலும், மேற்குதிசையில் மணவாளநல்லூரிலும் , வடமேற்குதிசையில் நாம் காணவிருக்கும் வாயு லிங்கமும் , வடக்குதிக்கில் வயலூரிலும், வடகிழக்குதிக்கில் குப்பநத்தம் கிராமத்திலும் லிங்க மூர்த்திகள் உள்ளன. எருமனூர் வாழை தோப்பினுள் பலவகை மரங்களும், செடி வகைகளும் விளைந்து நிற்கின்றன. கத்தரி, வெண்டை, பருத்தி,கரும்பு, பாக்கு, மிளகு வாழை,மா, பலா கொய்யா பப்பாளி தோட்டம் உள்ளது. தேனீக்கள் ஒவ்வொரு பழ சீசனிலும் பழங்களை நுகர்ந்த வாயால் இறைவன் திருமேனியை தீண்டி தழுவுவதால் இங்கு விளையும் பழங்கள் காய்கறிகள் அனைத்துமே இறைவன் பிரசாதமாகி விட்டன. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
திருவிழாக்கள்
பிரதோஷம் சிவராத்திரி, அன்னாபிஷேகம் போன்ற விசேஷ நாட்களில் மக்கள் ஒன்று கூடி வழிபடுவதை காணலாம்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
எருமனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிசேரி