Saturday Jan 11, 2025

இருக்கன்குடி மாரி அம்மன் திருக்கோயில், விருதுநகர்

முகவரி :

இருக்கன்குடி மாரி அம்மன் திருக்கோயில்,

இருக்கன்குடி, சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம்,

தமிழ்நாடு- 626202

தொலைபேசி: +91-4562 259 614, 259 864, 94424 24084

இறைவி:

மாரி அம்மன்

அறிமுகம்:

 சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி (ஜூன்) மாதத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை கோவிலில் மிகவும் புனிதமானது – உற்சவ மூர்த்தி – விருஷப வாகனத்தில் கிராமத்தின் பக்கத்திலிருந்து பிரதான கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

புராண முக்கியத்துவம் :

      மதுரை அருகிலுள்ள சதுரகிரி மலையில் தவமிருந்த சித்தர் ஒருவர், அம்பாள் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அப்போது அசரீரி ஒலித்தது. “”சித்தரே! அர்ஜுனா நதி மற்றும் வைப்பாறுக்கிடையே உள்ள மேட்டுப்பகுதிக்கு வா,” என்றது. அங்கே சென்ற சித்தருக்கு அம்பாள் காட்சி தந்தாள். தான் பார்த்த வடிவத்தை அவர் சிலையாகப் பிரதிஷ்டை செய்தார். பிற்காலத்தில் இந்த சிலை, ஆற்று மண்ணில் புதைந்து போனது. பிற்காலத்தில், இப்பகுதியில் வசித்த சிறுமி பசுஞ்சாணம் சேகரிக்கும் தொழில் செய்தாள். ஒரு சமயம் தரையில் வைத்த சாணக்கூடையை தூக்க முடியவில்லை. பெரியோரை அழைத்து வந்தாள். அப்போது, அந்த சிறுமியின் மூலமாக வெளிப்பட்ட மாரியம்மன், அவ்விடத்தில் தனது சிலை வடிவம் இருப்பதாகக் கூறினாள். அதன்படி அங்கு கிடைத்த சிலையை, பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.     

நம்பிக்கைகள்:

கண் சம்பந்தப்பட்ட நோய், வயிற்றில் தீராத வலி, அம்மை, கை, கால் வலி உள்ளவர்கள் இந்த அம்மனை வணங்கினால் நோய் தீரும்.

சிறப்பு அம்சங்கள்:

      ஒரு கங்கையில் நீராடினாலே மிகவும் புண்ணியம். ஆனால் இங்குள்ள மாரி அர்ச்சுனா, வைப்பாறு என இரு கங்கைகளுக்கு நடுவே குடி கொண்டுள்ளாள். எனவே தான் இங்குள்ள மாரி இருக்கங்(ன்) குடி மாரி ஆனாள். ஆக, அம்மனை தரிசிப்பதுடன் இருகங்கைகளிலும் நீராடி, ஒரே நேரத்தில் முப்பெரும் பலனை அடையலாம். மாரியின் கோயிலுக்கு வடக்கே ஒடும் அர்ச்சுனா நதியானது, வத்திராயிருப்பிலுள்ள மகாலிங்க மலையில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த அர்ச்சுனா நதிக்கு ஒரு புராணக் கதை உண்டு. முன்னொரு காலத்தில் பஞ்சபாண்டவர்கள் காடுகளில் சுற்றித் திரிந்து பின் இந்த மலையடிவாரத்திற்கு வந்து குளிக்க நினைத்தார்கள். ஆனால், அவர்கள் குளிப்பதற்குரிய இடம் இல்லாததால் அர்ச்சுணன் கங்கா தேவியை வணங்கி, தன் அம்பால் பூமியை பிளந்தான். அந்த பிளவிலிருந்து தோன்றிய ஆறே அர்ச்சுணன் ஆறு எனப்பட்டது. இந்த ஆற்றுநீரில் பஞ்சபாண்டவர்கள் திரவுபதியுடன் நீராடி மகிழ்ந்தனர்.

அம்மன் கோயிலுக்கு தெற்கே ஓடுவது வைப்பாறு எனப்படும். இந்த வைப்பாற்றுக்கும் ஒரு தனி புராணக்கதை உண்டு. ஒரு சமயம் பொதிகை மலையின் அடிவாரத்தில் சிவசைலத்துக்கு வடக்கே சம்புகன் என்ற வேடன் தீயின் நடுவிலிருந்து கடும் தவம் புரிந்தான். இவனது இந்த செயலால் அயோத்தியில் ஒருவன் இறந்தான். அப்போது அயோத்தியை ஆண்ட ராமன் இந்த இறப்பை கேள்விப்பட்டு, தன் சேனைகளுடன் கிளம்பி சம்புகனை கொன்றார். அத்துடன் தன் நாட்டில் இறந்தவனையும் உயிர்ப்பித்தார். (இது ராமாயண உத்திரகாண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது).

தவம் செய்த சம்புகனை கொன்ற பாவத்தால் பீடிக்கப் பெற்ற ராமன் பாவ விமோசனத்திற்காக சிவமலையில் சிவபெருமானை நிலை நிறுத்தி, வணங்கி தவம் செய்து பாவ விமோசனம் பெற்றார். அதன் பின் ராமன் தன் பரிவாரத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வந்து சேர்ந்தார். இங்கு வந்து ராமன், தன் மாலைக்கடனை முடிக்க தண்ணீர் தேடி கிடைக்காததால் வருந்தினார். அப்போது ராமனுடன் வந்த சாம்பவன் என்பவன், உலகிலுள்ள புண்ணிய தீர்த்தங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒரே குடத்தில் நிரப்பி, அந்தக் குடத்தை அகத்தியர் இங்கு புதைத்து வைத்திருப்பதாக கூறினான். இதைக்கேட்டு மகிழ்ந்த ராமன் தன் அம்பால் புதைத்து வைத்திருந்த குடத்தை உடைத்தார். இப்படி வைப்பி (புதையலில்)லிருந்து தோன்றிய ஆறுதான் வைப்பாறு எனப்பட்டது. இந்த வைப்பாறு கரிவலம் வந்த நல்லூர், சாத்தூர், கொல்லாம்பட்டி வழியாக பாய்ந்து இருக்கன்குடி அடைந்து, அங்கு ஏற்கெனவே ஒடிக்கொண்டிருக்கும் அர்ச்சுணா நதியுடன் கலந்து முத்துலாபுரம், விளாத்திகுளம் வழியாக சென்று கடலில் கலக்கிறது.

இரட்டை தீர்த்தம்: வனவாசம் சென்ற அர்ஜுனன் தன் தாகம் தீர, மேற்கு மலைத்தொடர்ச்சி மீது பாணம் எய்தான். அதிலிருந்து பொங்கிய நீர், நதியாக பெருக்கெடுத்தது. இந்நதி அவனது பெயராலேயே அழைக்கப்பெற்றது. இதேபோல், இலங்கை சென்ற ராமபிரான், பூஜைக்காக அந்த மலை மீது அம்பெய்தார். அப்போது பிறந்த நதி வைப்பாறு எனப்பட்டது. இவ்விரு நதிகளும் கங்கைக்கு ஒப்பானது என்பதால், இரு கங்கைக்கும் நடுவில் அமைந்த கோயில் என்பதை உணர்த்தும்விதமாக “இருகங்கைக்குடி’ எனப்பட்ட ஊர் “இருக்கன்குடி’ என மருவியது. பக்தர்கள் இரண்டு தீர்த்தங்களிலும் நீராடி அம்பிகையை வழிபட்டு வரலாம்.

ஆதி அம்பிகை: அம்பாள், இங்கு சிவ அம்சமாக இருப்பதால், சன்னதி எதிரே நந்தி இருக்கிறது. தினமும் அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கும் போது திரை போடப்பட்டு விடும். ஆனால், பவுர்ணமியன்று நடக்கும் அபிஷேகத்தை பக்தர்கள் காணலாம். கோயிலில் இருந்து சற்று தூரத்தில், அம்பாள் கிடைத்த இடத்தில், ஆதி அம்பாள் சன்னதி உள்ளது. இங்கு அம்பாள் உருவம் பொறித்த சூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் உற்சவ அம்பிகைக்கு கோயில் உள்ளது. ஆடி வெள்ளியன்று, இவள் பிரதான கோயிலுக்குள் வருவாள்.

கரும்புத் தொட்டில்: குழந்தை இல்லாதவர்கள் அம்பாளுக்கு கரும்புத்தொட்டில் நேர்ச்சை (நேர்த்திக்கடன்) செய்வதாக வேண்டுகின்றனர். கரும்பில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து சன்னதியை வலம் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அக்னிச்சட்டி, அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வயிற்று வலி தீர மாவிளக்கு தீபமேற்றுகின்றனர். இதற்காக தனி மண்டபம் உள்ளது. பிரகாரத்தில் வடக்குவாசல் செல்வி, வெயிலுகந்தம்மன், வீரபவீ த்திரர், பைரவர், காத்தவராயர், பேச்சியம்மன், முப்பிடாதி உள்ளனர்.

பிரார்த்தனை தலம்: பக்தர்களின் குறை தீர்க்கும் பிரதான பிரார்த்தனை தலம் இது. கண் நோய் உள்ளவர்கள், “வயனம் இருத்தல்’ என்ற விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். ஒரு சிலர் நோய் தீரும் வரை இங்கேயே இருந்து விடுகின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து தங்கிவிட்டு மறுநாள் செல்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு கோயிலில் மண்டபம் உள்ளது. இவர்கள் அம்பாளின் அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் விட்டுக்கொள்ள, நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. விவசாயிகள் இந்த தீர்த்தத்தை நிலத்தில் தெளிக்கின்றனர். அறுவடையானதும் அம்பிகைக்கு நவதானியம், நெல், காய்கறி காணிக்கை கொடுக்கின்றனர். கால்நடைகள் நோயின்றி இருக்கவும் இத்தீர்த்தம் கொடுப்பதுண்டு. அம்மை நோய் உள்ளவர்கள், அம்பிகைக்கு ஆமணக்கு விதையைக் காணிக்கையாக்கி வழிபடுகின்றனர். அம்பாளுக்கு உருவ காணிக்கை, கண்மலர் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

திருவிழாக்கள்:

ஆடி, தை, பங்குனி கடைசி வெள்ளிக்கிழமைகள்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இருக்கன்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

சாத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top