அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், சட்டைநாத சுவாமி தேவஸ்தானம் சீர்காழி
முகவரி
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் சட்டைநாத சுவாமி தேவஸ்தானம் சீர்காழி நாகப்பட்டினம் மாவட்டம் PIN – 609110
இறைவன்
இறைவன் :பிரம்மபுரீஸ்வரர் இறைவி: பெரியநாயகி
அறிமுகம்
சீர்காழி பிரம்மபுரீஸ்வரர், சட்டைநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சம்பந்தரின் அவதாரத் தலம் எனப்படுகிறது. சம்பந்தர் ஞானப்பால் உண்டமை, பிரமன் வழிபட்டமை, புறாவடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறுபெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பது தொன்நம்பிக்கை. திருஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்‘ என்று உலகம் உய்யத் திருப்பதிகம் பாடியது இத்தலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 14வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14 வது தேவாரத்தலம் ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும் தேவார முதலிகள் மட்டுமன்றி மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர் ஆகியோரும்கூட இத்தலத்தின் மீது பாடல்கள் பாடியுள்ளனர்.
புராண முக்கியத்துவம்
7-ம் நூற்றாண்டில் சைவம் தழைக்க திருஞானசம்பந்தர் அவதரித்த தலம் என்ற பெருமையை உடையது சீர்காழி என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம். சிவபாத இருதயருக்கும் பகவதியம்மைக்கும் மகனாகப் பிறந்த சம்பந்தருக்கு இக்கோவில் திருக்குளக்கரையில் இறைவன் சிவபெருமான் விரும்பியபடி, உமாதேவி சிவஞானத்தை அமுதமாகக் குழைத்து பாலாகக் கொடுக்க, அதை உண்ட ஞானசம்பந்தர் இறையருள் பெற்றார். குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்ட தந்தை, பால் கொடுத்தது யார் என்று வினவினார். “தோடுடைய செவியன்” என்று தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடி பாலூட்டியது உமாதேவியென்றும் தான் இறையருள் பெற்றதையும் கூறினார். சம்பந்தரின் முதல் தேவாரப் பதிகம் இதுதான். இவர் சீர்காழி இறைவன் மேல் 67 பதிகங்கள் பாடியுள்ளார். சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு, உலகமாதா பெரியநாயகி அம்மை குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவு படுத்தும் விதமாக, சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இரண்டாம் நாள் திருவிழா திருமுலைப்பால் உற்சவம் என்று கொண்டாடப்படுகிறது. சித்திரை பிரம்மோற்சவத்தில் இரண்டாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தன்று இவ்விழா நடைபெறும். ஞானசம்பந்தர் பிறந்தது ஒரு திருவாதிரை நாளில், அவர் ஞானப்பால் உண்டது ஒரு திருவாதிரை நாளில், அவர் முக்தி பெற்று இறைவனுடன் கலந்ததும் ஒரு திருவாதிரை நாளில் தான்.
நம்பிக்கைகள்
இங்குள்ள திருக்குளத்தில சிவ பாத இருதயர் நீராடிய போது சம்பந்தர் தந்தையை காணாது அழுதார். பார்வதியானவள் சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டினார். குழந்தைகளுக்கு அறிவு கிட்டும் . சட்டைநாதர் பெயரிலேயே தேவஸ்தானம் விளங்குகிறது. குறுகலான வழியே நுழைந்து, மரப்படிகளேறித் தரிசிக்க வேண்டும். ஆண்கள் சட்டையைக் கழற்றி விட்டு ஏறிச்சென்று தரிசித்துப் பின்னர் வந்து போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறே, பெண்கள் தலையிலுள்ள பூவையெடுத்து வைத்துக் கொண்டு, சென்று தரிசித்து விட்டுப் பின்பு தலையில் சூடிக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
இந்தக் கோயில் மூன்று பகுதியாக இருக்கிறது. பெரிய பகுதியில் இறைவன் தோணியப்பர், சட்டைநாதர் எல்லாம் உள்ளனர். வட பக்கத்தில் திருநிலை நாயகி கோயில் உள்ளது. அக்கோயிலின் முன் பிரம தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தக் கரையிலேயேதான் திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்டிருக்கிறார். இரண்டு கோயில்களுக்கும் இடையில் மேற்குக் கோடியில் ஞானசம்பந்தருக்குத் தனித்ததொரு கோயில் உள்ளது. கோயிலில் நுழைந்து ஆஸ்தான மண்டபத்தைக் கடந்ததால் கருவறையில் லிங்க உருவில் பிரமபுரி ஈசுவரரை காண இயலும். அவருக்கு வலப்பக்கத்தில் மகா மண்டபத்தில் ஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக இருக்கின்றார். இந்த உற்சவர் சின்னஞ்சிறு குழந்தை வடிவில், பால்வடியும் முகத்தோடு இருப்பார். இவர் கையிலே வழக்கமாக இருக்கும் பொற்றாளம் இராது. இடது கையில் சிறு கிண்ணத்தோடு இருப்பார். வலது கையோ தோடுடைய செவியனாம் தோணி புரத்தானைச் சுட்டிக் காட்டும் வகையில் இருக்கும். கோயிலின் மேற் பிராகாரத்தில் விமானம் வடிவில் உள்ள கட்டு மலைமீது எளிதாக ஏறலாம். அங்கே அந்த மலை மீது குருமூர்த்தமான தோணியப்பர் பெரிய நாயகி உடன் காட்சி அளிக்கிறார். அவருக்கும் மேல் தளத்திலே, மலை உச்சியிலே தென் திசை நோக்கியவராயச் சட்டைநாதர் நிற்கிறார். தோணியப்பரும் சட்டைநாதரும் சுதையாலான திருவுருவங்களே. இங்குள்ள திருஞானசம்பந்தரின் கோயிலில் செய்யப்படும் அர்ச்சனையானது முருகப்பெருமானுக்கு உரிய அஷ்டோத்தரத்தைச் சொல்லி செய்யப்படுகிறது. காரணம் முருகனது அவதார மூர்த்தமே ஞானசம்பந்தர் என்று கருத்து உள்ளதே காரணம்.
திருவிழாக்கள்
சட்டநாதர் திருவிழா திருமுலைப்பால் திருவிழா, சித்திரைப் பெருவிழா, ஆடிப்பூரம், பங்குனி உத்திரம்.
காலம்
1000-2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி