அருள்மிகு பிரம்மநந்தீஸ்வரர் கோயில், திருமேற்றளி
முகவரி
அருள்மிகு பிரம்மநந்தீஸ்வரர் கோயில், திருமேற்றளி, பட்டீஸ்வரம், தமிழ் நாடு- 612703
இறைவன்
இறைவன்: பிரம்மநந்தீஸ்வரர், இறைவி: பிரம்மாம்பிகை
அறிமுகம்
பிரம்மநந்தீஸ்வரர் கோயில், பட்டீஸ்வரம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் அருகே அமைந்துள்ளது. இக்கோயில் பட்டீஸ்வரத்திற்கு அருகில் சுமார் 500 மீ தொலைவில் திருமலைராஜன் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.பட்டீஸ்வரத்திலுள்ள கோயிலின் வடக்கு வீதியில் தொடர்ந்து மேற்கு நோக்கி சென்றால் இரும்பு வளைவு காணப்படும். அதன் இடது புறத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக் கோயில் ஒரு செங்கற் கோயிலாகும்.கருவறையில் மூலவர் பிரம்மநந்தீஸ்வரர் லிங்கத்திருமேனியாகக் காட்சியளிக்கிறார். இடிந்த நிலையில் உள்ள இரு சுவர்களைக் கடந்து உள்ளே சென்றால் பெரிய முகப்பு மண்டபத்தைக் காணலாம். அதற்கு அடுத்துச் சென்றால் கருவறையில் பெரிய அகன்ற நான்கிற்கு நான்கு என சதுரமான ஆவுடையுடன் பிரம்மநந்தீஸ்வரர் காணப்படுகின்றார். இந்தப் பகுதியில் காணப்படும் கோயில்களில் இந்த லிங்கத் திருமேனி மிகவும் பெரிதானது என்று கூறப்படுகிறது. அதன் வழுவழுப்பான பாணப்பகுதி பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும்படி காணப்படுகிறது. இக்கோயிலில் உள்ள இறைவி தெற்கு நோக்கிய நிலையில் காட்சி அளிக்கின்றார். அவர் பிரம்மாம்பிகை என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார்
புராண முக்கியத்துவம்
கோயிலைச் சுற்றி வரும்போது அங்கே 10ஆம் நூற்றாண்டு மற்றும் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகக்கன்னி, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை பழமை மாறாமல் அப்படியே உள்ளன. நாக கன்னி இயல்பாக அமர்ந்திருக்கும் கோலத்தில் காணப்படுகிறார். பிரம்மன் பூசித்த தலம் என்ற பெருமையினை இக்கோயில் கொண்டுள்ளது. மேலும் நாக கன்னி பூசித்து பேறு பெற்ற தலம் என்ற சிறப்பையும் கொண்டுள்ளது. நாக தோஷமுடையோர் வணங்கி தோஷ பரிகாரம் செய்து கொள்கின்றனர். அடுத்து தட்சணாமூர்த்தி தென்புறம் நோக்கிய நிலையில் காணப்படுகிறார். அகன்று விரிந்த முகப்பு மண்டபத்துடன் கூடிய துவிதள கருவறையைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. சில படிகள் ஏறிச் சென்றால் கருவறையினை அடையலாம். கருவறை கோஷ்டத்தில் அமைந்துள்ள நாகக்கன்னி இயல்பாக அமர்ந்த நிலையில் உள்ள கோலமானது இக்கோயிலுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
சுமார் 1300 ஆண்டுகள் பழமையினைக் கொண்டுள்ள இக்கோயில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. முதலாம் ஆதித்த சோழனின் மனைவியான அழிசி காட்டடிகள் வணங்கி போற்றி கொடையாக அளிக்கப்பட்ட கோயில் என்ற சிறப்பினை இக்கோயில் பெறுகிறது. ஒரு முறை சோழ மன்னர்கள் தம் பெருமையை இழந்து சிற்றரசர்களாக வாழ்ந்து வந்தனர். அக்காலகட்டத்தில் அந்த நிலையைப் போக்கி அமைத்து, மீண்டும் சோழர்களின் பெருமையை நிலைநாட்டிய பெருமையை உடையவர் விஜயாலய சோழன் ஆவார். அந்த மன்னனுக்குப் பின்னர் ஆதித்த சோழன் பட்டத்திற்கு வந்தார். அவரும் விஜயாலய சோழனைப் போலவே பெருமையுடன் விளங்கியவர் ஆவார். அந்த மன்னர் இந்தக் கோயிலை வழிபட்டு இறையருள் பெற்றுள்ளார். அவர் இந்தக் கோயிலுக்கு விளக்கேற்றுவதற்காக கொடை வழங்கியது தொடர்பான கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் காணப்படுகின்றன. முன்பு ஒரு காலத்தில் இக்கோயிலில் மூன்று நிலையினைக் கொண்ட ராஜகோபுரம் இருந்ததற்கான அமைப்பை இங்கு காணலாம்
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பட்டீஸ்வரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி