Monday Dec 23, 2024

அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில் – அஸ்தம் நட்சத்திரம்

முகவரி

அருள்மிகு கிருபாகூபாரேச்சவரர் திருக்கோயில், கோமல், குத்தாலம் தாலுகா, நாகப்பட்டினம் – 609 805. Phone: +91 97519 56198, 98430 55146, 94436 04207, 90478 19574

இறைவன்

இறைவன் – கிருபாகூபாரேச்சவரர் இறைவி – அன்னபூரணி

அறிமுகம்

இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அஸ்தம் நட்சத்திரக்காரர்களின் பொதுகுணம் ஆடை, ஆபரணங்களில் பிரியம் கொண்டவர்கள். கல்வியில் ஆர்வம் காட்டுவர். நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளில் ரசிகத்தன்மை இருக்கும். வாயடித் தனமாகவும், விகடமாகவும் பேசும் இயல்பு கொண்டவர்கள். யாரிடமும் தானாக வலியச் சென்று பழகும் இவர்கள், தாயாரின் மீது அலாதி அன்பு கொண்டிருப்பர். பார்வதி பசுவாக மாறி இங்கு வழிபாடு செய்ததால் இத்தலம் கோபுரி என்றும், கோமல் என்றும் வழங்கப்படுகின்றன.

புராண முக்கியத்துவம்

சிவபெருமான் இந்த உலகத்தை எப்படி இயக்குகிறார் என்பதை அறிய பார்வதி தேவி விரும்பினாள். இது பற்றி அவரிடமே கேட்டாள். அப்போது, சிவன் ஒரு திருவிளையாடல் செய்தார். பார்வதி தன்னை மறந்து விளையாட்டாக தனது கண்களை பொத்தும்படி செய்தார். அந்த நொடியில் உலக இயக்கம் நின்று போனது. இதைக் கண்டு அதிர்ந்து போன பார்வதி, தன்னால் நிகழ்ந்த இந்த தவற்றுக்கு சிவனிடம் மன்னிப்பு கோரினாள். அதற்கு சிவன், “உன் கரத்தினால் என் கண்ணைப் பொத்தி இந்த பிரபஞ்சத்தை இருளாக்கினாய்.இப்போது என் கரத்தில் இருந்து தோன்றும் ஹஸ்தாவர்ண ஜோதியில் நான் மறையப்போகிறேன். நீ பசுவாக மாறி இந்த ஜோதி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து என்னை வந்து சேர்வாய்”, என கூறி மறைந்தார். சிவனைக் காணாத பார்வதி, அவரது ஆணைப்படி பசு உருவம் கொண்டு, தன் சகோதரரான திருமாலுடன், சிவஜோதியைத் தேடி பூமியெங்கும் வலம் வந்தாள். பார்வதி மீது கிருபை கொண்டார் சிவன். ஓர் அஸ்த நட்சத்திர நாளில், ஹஸ்தாவர்ண ஜோதி தோன்றியது. இதை கோமளீய ஜோதி என்றும் சொல்வர். பார்வதி மனம் மகிழ்ந்து அந்த ஜோதியுடன் ஐக்கியமானாள். பார்வதிக்கு கிருபை செய்த, இந்த சம்பவத்தின் அடிப்படையில் கோமலில் ஒரு கோயில் எழுப்பப்பட்டது. கிருபை செய்த சிவனுக்கு, கிருபாகூபாரேச்வரர் என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்பாளுக்கு அன்னபூரணி என பெயர்.

நம்பிக்கைகள்

அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு அதிக அளவில் பிரார்த்தனை செய்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது அஸ்தம் நட்சத்திர நாளிலோ இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. கிருபா கூபாரேச்வரர் எத்தகைய தவறுக்கும் மன்னிப்பு தரக்கூடியவர். சித்தர் களும், முனிவர்களும், மகான்களும் அஸ்த நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தல இறைவனை கைகூப்பி வணங்கிய நிலையில் வலம் வருவதாக ஐதீகம். கலங்கிய மனமுள்ளவர்களும், நல்வாழ்க்கை அமைய ஏங்குபவர்களும் திங்கள், புதன் கிழமைகளில் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை.

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குத்தாலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

குத்தாலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top