Tuesday Dec 24, 2024

பிரதாப வீரஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி :

அருள்மிகு பிரதாப வீரஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில், மேலராஜவீதி,

தஞ்சாவூர் மாவட்டம் – 613008.

போன்: +91 99433 81527

இறைவன்:

பிரதாப வீரஆஞ்சநேயர் (மூலை அனுமார்)

அறிமுகம்:

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆஞ்சநேயர் திருக்கோயில். அதாவது, மேலவீதியும் வடக்கு ராஜவீதியும் இணையும் இடத்தில் கோயில் கொண்டிருக்கிறார் அனுமன். மேலவீதியும் வடக்கு ராஜவீதியும் இணையும் இந்த இடம், வடமேற்கு வாயுமூலை என்று சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். வாயுவின் மைந்தன் அனுமன், வாயுமூலையில் கோயில் கொண்டு அருள்பாலிப்பது இன்னும் வீர்யம் மிக்கது என்று போற்றுகிறார்கள்.

தஞ்சை பெரியகோயிலில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனுமன் கோயிலுக்கு நடந்தே சென்றுவிடலாம். வடமேற்கு வாயுமூலையில் நின்றபடி அருள்பாலிப்பதால், இந்த அனுமனை மூலை அனுமார் என்றும் மூலை அனுமார் கோயில் என்றும் சொல்கிறார்கள் பக்தர்கள். பிரதாப வீர அனுமன் என்றும் போற்றுகின்றனர். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். மராட்டிய மன்னர் பிரதாப சிம்மனின் (கி.பி.1739-1763) காலத்தில் தஞ்சாவூர் இருந்தபோது அவரால் இக்கோயில் கட்டப்பட்டது.

புராண முக்கியத்துவம் :

 பிரதாபசிம்மன் என்ற மன்னன் பிரதாப வீரஆஞ்சநேயரை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தான். ஒருமுறை எதிரிப்படையினர் நாட்டை முற்றுகையிட்டபோது, பிரதாப சிம்மராஜா மூலை அனுமாரை வேண்டினார். ஆஞ்சநேயர் வானர சேனைகளை உருவாக்கி எதிரிநாட்டு படையை ஓட ஓட விரட்டினார். தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் பிரதாபசிம்மன் ஆஞ்சநேயருடன் ஐக்கியமானதாக கர்ண பரம்பரை கதை வாயிலாக அறிய முடிகிறது. எனவே தான் இவருக்கு பிரதாப வீரஆஞ்சநேயர் என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்கு மூலை அனுமார் என்று பெயர் வர ஒரு காரணம் உண்டு.தஞ்சாவூரில் நான்கு ராஜ வீதிகள் உள்ளது. மூலை அனுமார் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி தனக்கு கோயில் எழுப்பும்படி தஞ்சை மன்னனுக்கு ஆணையிட்டார். எனவே பக்தர்களால் மூலை அனுமார் என பெயர் சூட்டப்பட்டு அதுவே நிலைத்து விட்டது.

நம்பிக்கைகள்:

குழந்தைப் பேறுக்காக வேண்டுபவர்களும், புதுமணத் தம்பதிகளும் இவர்களை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் கிட்டும் என்பது நம்பிக்கை. படிப்பில் தடை, திருமணத்தடை, வியாதிகள், தொடர்ந்து துன்பங்கள் நேர்ந்தால் மூலை அனுமாரை மூல நட்சத்திர நாட்களில் வழிபடுவது சிறப்பு.

சிறப்பு அம்சங்கள்:

முகலாய படையெடுப்பின் போது காஞ்சிபுரத்தில் இருந்த பங்காரு காமாட்சி அம்மன் சிலை தஞ்சைக்கு எடுத்து வரப்பட்டது. சிலைக்கு அடைக்கலம் தர அனைவரும் பயந்தபோது இந்த தலத்திலேயே சிலையை மறைத்து வைத்திருந்தனர். ராம பக்தர்களின் கனவில் தோன்றிய அனுமான் பங்காரு காமாட்சி அம்மனுக்கு தன் கோயில் அருகிலேயே கோயில் அமைக்கும்படி ஆணையிட்டார். ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்த போது, தன் தாயின் மடியில் அமர்ந்திருந்த சிற்பம் புகழ் பெற்றது. குழந்தைப் பேறுக்காக வேண்டுபவர்களும், புதுமணத் தம்பதிகளும் இவர்களை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் கிட்டும் என்பது நம்பிக்கை. பாம்பு, நிலவை கவ்வி பிடிக்க வருவது போன்ற சிற்பமும் இங்கு உள்ளது. இதை கண்டவர்களுக்கு ராகு,கேது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இங்குள்ள வேப்பமரத்தை அம்பாளாகக் கருதுகின்றனர். அம்பாள் ராம நாமத்தை வேப்பமர வடிவத்தில் நின்று கேட்பதாக நம்பிக்கை.

தோஷ வழிபாடு: படிப்பில் தடை, திருமணத்தடை, வியாதிகள், தொடர்ந்து துன்பங்கள் நேர்ந்தால் மூலை அனுமாரை மூல நட்சத்திர நாட்களில் வழிபடுவது சிறப்பு. அன்று 18 அகல் விளக்குகள் ஏற்றி 18 முறை மவுனமாக கோயிலை வலம் வருவார்கள். 18 நாட்கள் முதல் 18 ஆண்டுகள் வரை இந்த பிரார்த்தனையைச் செய்யலாம். மார்கழி மாதத்தில் ஏதாவது ஒரு நாளில் 1008 ராமநாமம் எழுதுகின்றனர். ஒரு முறை வலம் வரும்போது 56 முறை ராம என்ற மந்திரத்தை எழுதினால், 18 முறை வலம் வந்தால் 1008 ராம ஜெபம் நிறைவுபெற்று விடும். மூலநட்சத்திரத்தன்று வழிபாடு செய்ய விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இக்கோயிலில் சீதையுடன் பட்டாபிஷேக ராமர், ருக்மணி, பாமா சமேதராக கிருஷ்ண பகவான், லட்சுமி நரசிம்மர், சங்கரநாராயணர், ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் தியானம் செய்யும் கற்சிற்பம் ஆகியவை உள்ளன. பத்து தலை ராவணன் சிலையும், வாலை சுருட்டி ஆஞ்சநேயர் அமர்ந்துள்ள சிற்பமும் இங்குள்ளன. இது தவிர, 12 ராசிகள் அடங்கிய ராசி மண்டல சிற்பமும் இருக்கிறது. அவரவர் ராசி முன்பு நின்று மூலை அனுமாரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

திருவிழாக்கள்:

ராம நவமி, அனுமன் ஜெயந்தி.

காலம்

கி.பி.1739-1763 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top