Friday Dec 27, 2024

கோயம்பேடு ஸ்ரீ கனகவல்லி தாயார் உடனுறை வைகுண்டவாச பெருமாள் கோவில், சென்னை

முகவரி

கோயம்பேடு ஸ்ரீ கனகவல்லி தாயார் உடனுறை வைகுண்டவாச பெருமாள் கோவில், விருகம்பாக்கம், கோயம்பேடு, சென்னை, தமிழ்நாடு 600107 தொலைபேசி: +91 – 44- 2479 6237, 6569 9626.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் இறைவி: ஸ்ரீ கனகவல்லி தாயார்

அறிமுகம்

சென்னை கோயம்பேடு ஸ்ரீ குருங்காலீஸ்வரர் கோவிலை ஒட்டி அமைந்துள்ளது ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவில். சென்னையில் உள்ள பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. கல்வெட்டுகளின்படி, இது 1500 ஆண்டுகள் பழமையானது. 12ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் மற்றும் விஜயநகர மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டது. பழங்காலத்தில் இத்தலம் கோசை நகர், கொயட்டிபுரம், பிரயச்சித்தபுரம் என்று அழைக்கப்பட்டதாகப் பழங்கால நூல்கள் மூலம் தெரியவருகிறது. தல விருட்சம் : வில்வ மற்றும் வேம்பு தீர்த்தம் : லவகுச தீர்த்தம்

புராண முக்கியத்துவம்

அயோத்தியில் ராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் அவதூறாக பேசினர். சீதையின் கற்பை நிரூபிக்க ராமர் அவளை வனத்திற்கு அனுப்பினார். வனத்திலிருந்து வால்மீகி முனிவர், சீதைக்கு ஆதரவு கொடுத்து தன்னுடன் தங்க வைத்தார். கர்ப்பவதியாக இருந்த அவள், வால்மீகி ஆசிரமத்தில் லவன், குசன் என்னும் இரண்டு மகன்களை பெற்றாள். ராமன் தங்களது தந்தை என தெரியாமலேயே, லவகுசர் வளர்ந்தனர். இச்சமயத்தில் ராமன், அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அஸ்வமேதயாக குதிரை லவகுசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றை கட்டிப்போட்டுவிட்டனர்.குதிரையுடன் வந்த சத்ருக்கனன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. மேலும், சத்ருக்கனனுடன் போரிட்டு வென்றதோடு, குதிரையை மீட்க வந்த லட்சுமணரையும் வென்றனர். இதையறிந்த ராமன், வனத்திற்கு ஒரு ஒற்றனை அனுப்பி சீதையையும், வால்மீகியையும் அழைத்து வரும்படி செய்தார். அப்போது சீதாதேவி, தன் கணவரை மீண்டும் சந்திக்கப்போகும் மகிழ்ச்சியில் இங்கிருந்து கிளம்பிச்சென்றாள். இதனிடையே, வால்மீகி மகரிஷி, லவகுசர்களிடம் ராமனே அவர்களது தந்தை என்பதையும், அவர்களது அன்னையே சீதை என்பதையும், எந்தச் சூழ்நிலையில் சீதாதேவியை ராமபிரான் காட்டுக்கு அனுப்பினார் என்பதையும் விளக்கினார். அப்போது தனது சீடர்களான லவகுசர் அறியாமல் சத்ருக்கனன், லட்சுமணர் மற்றும் தந்தை ராமனையும் எதிர்த்ததற்கு மன்னிக்கும்படி வேண்டினார். திருமால் அவருக்கு வைகுண்டவாசராக காட்சி தந்து அவர்களை மன்னித்தருளினார். வால்மீகியின் வேண்டுதலுக்காக பெருமாள், “வைகுண்டவாசராக’ இங்கே எழுந்தருளினார். பிரகாரத்தில் வைகானஸ ஆகமத்தை உண்டாக்கிய, விகனஸர் இருக்கிறார். கோயில் வளாகத்தில் இரண்டு வில்வ மரங்களுடன், ஒரு வேம்பு மரம் இணைந்திருக்கிறது. இதற்கு, “பார்வதி சுயம்வர விருட்சம்’ என்று பெயர். இவை சிவன், விஷ்ணு மற்றும் அம்பிகையின் அம்சமாக கருதி வழிபடுகின்றனர்.

நம்பிக்கைகள்

திருமணமான பெண்கள் இங்கு வேண்டிக்கொள்ள அறிவான ஆண் குழந்தைகள் பிறக்கும் என்பதும், தெரிந்தே தவறு செய்தவர்கள் வேண்டிக்கொள்ள பிராயச்சித்தம் உண்டாகும் என்பதும் நம்பிக்கை. திருமணதோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்க்கிழமைகளில் இங்குள்ள பார்வதி சுயம்வர விருட்சத்திற்கு தாலி கட்டி வேண்டிக்கொள்கின்றனர்.சீதை தங்கியிருந்த இடமென்பதால் இங்கு வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், பொறுமையும், தியாகம் செய்யும் மனப்பான்மையும் வளரும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

சீதையை, ராவணன் கடத்திச்சென்றபோது அவளை ராமர் மீட்பதற்கு உறுதுணையாக இருந்தவர் ஆஞ்சநேயர். லட்சுமணன், நொடிப்பொழுதுகூட அண்ணன் ராமனை பிரியாதவர். எனவே, ராமபிரான் வீற்றிருக்கும் தலங்களில் அவருடன் ஆஞ்சநேயரும், லட்சுமணரும் இருப்பர். ஆனால், இக்கோயிலில் ராமர், சீதை இருவர் மட்டுமே இருக்கின்றனர். ராமபிரான், அரச கோலத்தில் இல்லாமல் “மரவுரி தரித்த’ கோலத்தில் இருக்கிறார். இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம். ஆஞ்சநேயருக்கு, இக்கோயிலுக்கு வெளியே லவகுச தீர்த்தக்கரையில் பிற்காலத்தில் தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வைகுண்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் அமர்ந்த கோலத்தில்தான் இருப்பார். ஆனால், இங்கு நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இருக்கிறார். முன்மண்டபத்தில் ஒரே கல்லில், வால்மீகி மகரிஷியுடன் லவன், குசன் இருவரும் சேர்ந்த வடிவம் இருக்கிறது. வால்மீகி அமர்ந்திருக்க, அவருக்கு இருபுறமும் லவன், குசன் வணங்கியபடி இருக்கின்றனர். அருகில் சீதாதேவி, கர்ப்பவதி கோலத்தில் இருக்கிறாள். தினசரி வால்மீகிக்கும் பூஜை நடக்கிறது.உற்சவர் பக்தவச்சலர் இடது கரத்தால் பக்தர்களை அழைத்து, வலக்கரத்தால் ஆசிர்வதிக்கும் கோலத்தில் இருக்கிறார். பக்தனுக்கு அருள் செய்பவர் என்பதால் இவருக்கு “பக்தவச்சலர்’ என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள். இக்கோயிலிலுள்ள விமானம் சுவாமியின் நிழல் போல, அவரது வடிவில் இருப்பதாக ஐதீகம். எனவே, இவ்விமானத்திற்கு சாயாவிமானம் (நிழல் விமானம்) என்று பெயர். ராமன், சீதையை அயோத்திக்கு அழைத்தபோது, அவர் இங்கேயே வந்ததாக நினைத்துக்கொண்டாள் சீதை. சீதையின் மனக்கண்ணில் இத்தலத்தில் ராமர் எழுந்தருளியதால் இத்தலத்திற்கு, “ராகவபுரம்’ என்ற பெயரும் உண்டு. வால்மீகி முனிவர் இங்கு தங்கியிருந்ததன் அடையாளமாக பிரகாரத்தில் புற்று இருக்கிறது. லவகுசர்கள் “கோ’ எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை, “அயம்’ என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலமென்பதால் இத்தலம் “கோயம்பேடு’ என பெயர் பெற்றது. “பேடு’ என்றால் “வேலி’ எனப் பொருள்.அருணகிரியார் இத்தலத்தை திருப்புகழில் “கோசைநகர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

திருவிழாக்கள்

ஆனியில் பிரம்மோற்ஸவம், ஆடியில் விகனஸர் உற்ஸவம் 10 நாட்கள், பங்குனி உத்திரத்தில் சுவாமி திருக்கல்யாணம். திருவோண நட்சத்திரத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கோயம்பேடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

கோயம்பேடு மெட்ரோ நிலையம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top