Tuesday Jan 07, 2025

கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், சேலம்

முகவரி

கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், கூகையூர், சேலம் மாவட்டம் – 606301. தொலைபேசி எண்: 0427-2400415 / 9345065727

இறைவன்

இறைவன்: சொர்ணபுரீஸ்வரர் இறைவி: பெரியநாயகி

அறிமுகம்

சேலம்-விழுப்புரம் மாவட்ட எல்லையில், வசிஷ்ட நதியின் வடகரையில் அமைந்திருக்கிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில். இந்தக் கோவில் ஆகாய தலமாக போற்றப்படுகிறது. நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலத்தை இன்னொரு ‘சிதம்பரம்’ என்கிறார்கள். கூகை என்னும் குறுநில மன்னன் ஆண்டதால், இந்தப் பகுதி ‘கூகையூர்’ என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருநாவுக்கரசர் தனது ஷேத்திர கோவையில் ‘கூழையூர்’ என்று பாடி வழிபட்டதால் ‘கூழையூர்’ என்றும், திருமூலர் இப்பகுதியில் உள்ள குகையில் தங்கி யோகத்தில் ஆழ்ந்ததால் ‘குகையூர்’ என்றும், வியாழ பகவான் வழிபட்டதால் ‘சொர்ணபுரி’ என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டது.

புராண முக்கியத்துவம்

கி.பி. 7-ம் நூற்றாண்டில் செங்கற்களால் கட்டப்பட்ட சொர்ணபுரீஸ்வரர் கோவிலை, மூன்றாம் குலோத்துங்க சோழன் உத்தரவின் படி கி.பி.1184-ம் ஆண்டு குறுநில மன்னன் பொன்பரப்பின ராஜராஜ கோவலராயன் கற்கோவிலாக மாற்றிக் கட்டினான். இந்த தலத்தில், உயிர்கள் அனைத்தும் உய்யும் பொருட்டு போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் ஆகிய மூன்று நிலைகளையும் ஒரே திருமேனியில் தாங்கியபடி, ஆகாயலிங்கமாக இறைவன் எழுந்தருளியுள்ளார். சிவபெருமானை மதிக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அவன் நடத்திய யாகத்தில் தேவர்கள், சப்த ரிஷிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளான ரிஷிகள் அனைவரும், தங்கள் ரிஷி பதவியை இழந்து, வேதங்களை மறந்து நைமிசாரண்யத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பிறகு சுக பிரம்ம மகரிஷியின் ஆலோசனைப்படி, வசிஷ்டர் முதலான சப்த ரிஷிகள், வசிஷ்ட நதிக்கரையோரம் 5 இடங் களில் சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த 5 தலங்களே வசிஷ்ட நதிக்கரையோர பஞ்சபூத தலங்கள் என்று போற்றப்படுகிறது. இவற்றுள் ஆகாய தலமாக விளங்குகிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில். ஆலய அமைப்பு : கூகையூரின் வடகிழக்கு பகுதியில் பரந்த நிலப்பரப்பில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது சொர்ணபுரீஸ்வரர் கோவில். மூலவர் சொர்ணபுரீஸ்வரர். அம்பாள் திருநாமம் பெரியநாயகி. தலவிருட்சம் நெல்லிமரம், தீர்த்தம் வசிஷ்டநதி. இந்தக் கோவிலின் பிரதான வாசல் மேற்கு முகமாக ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கூடியது. இதையடுத்து வலப்பக்கம் 12 தூண்களுடன் கூடிய பெரிய வசந்த மண்டபம் உள்ளது. தொடர்ந்து பலிபீடம் மற்றும் பெரிய அதிகார நந்தி, பந்தல் மண்டபத்தைக் கடந்தால் கருவறையை அடையலாம். கருவறையில் கிழக்கு நோக்கியபடி சொர்ணபுரீஸ்வரர் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மூலவரின் கருவறை பிரகாரத்தில் தென்புறம் நர்த்தன கணபதி, சூரியன், சந்திரர்கள் மற்றும் நாயன்மார்கள், தெற்கு நோக்கிய தட்சிணாமூர்த்தி, மேற்கில் அண்ணாமலையார், வடக்கில் பிரம்மா, விஷ்ணு, சொர்ண துர்க்கை விக்கிரகங்கள் உள்ளன. பிரகார வலத்தில் கற்பக விநாயகர், அழகிய வேலைப்பாடு கொண்ட சுப்ரமணியர், சொக்க நாதர், சண்டிகேசுவரர் ஆகியோரை தரிசிக்கலாம். ஆரம்ப கால கட்டத்தில் இருந்த அம்மன் சன்னிதி முதல் பிரகாரத்தின் திருச்சுற்றில் வடமேற்கு மூலையில் அமைந் திருந்தது. தற்போது இந்த இடத்தில் ஆதி அம்மன் எழில்மிகு தோற்றத்துடன் அருள்பாலிக்கிறாள். அதன்பிறகு குலோத்துங்க சோழன் காலத்தில் அம்மனுக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டது. அதில் உள்ள அம்மன் பெரியநாயகி என்ற பெயருடன் வீற்றிருக்கிறாள். மேலும் ஆலயத்தில் பைரவர் சன்னிதி, நவக்கிரகங்களும் இருக்கின்றன. கோவிலின் மேற்கு திருச்சுற்று மண்டபத்தில் விநாயகர், ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், ஸ்ரீதேவி- பூதேவி சமேத திருமால், ஆதி மகாவிஷ்ணு, ஜேஷ்டாதேவி ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். தென்புறம் பிரதோஷ நாயகர், நடராஜர் மூர்த்தங்கள் உள்ளன. கூகையூர் குடங்கையழகு : பெரியநாயகி அம்மன் கருவறை முன்புறம் உள்ளது, ‘கூகையூர் குடங்கையழகு’ எனப்போற்றப்படும் குபேரஸ்தான மண்டபம். இந்த குடங்கையை (மண்டபத்தை) தாங்கி நிற்பது நான்கு இசைத்தூண்கள். இவை சிற்பக்கலையில் வல்லுனர்களான தேவ சிற்பிகளால் வடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த தூண்கள் கல்நாண்களுடன் கூடிய ஏழு ஸ்வரங்களை உள்ளடக்கிய வீணைகளாக செதுக்கப்பட்டவை. இவை ஏழு ஸ்வரங்களின் ராகங்களை வெளிப்படுத்துகின்றன. இதன் விதானத்தில் எழில்மிகு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவில் 9 சதுரங்களை உள்ளடக்கிய தாமரை மொட்டு வடிக்கப்பட்டு இருக்கிறது. இதில் சோழர்கால சிற்பக்கலை காணப்படுகிறது. இந்த குடங்கையழகையும், விதான சிற்ப எழிலையும் மற்றும் இசைத்தூண் களையும் உலகத்தரம் வாய்ந்த கலைக்கு ஒப்பிடுகிறார்கள் சிற்ப வல்லுனர்கள். முகூர்த்த நாட்களின் போது இந்த மண்டபத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இங்கு மணமுடிக்கும் மணமக்கள் வாழ்க்கையில் சகல ஐஸ்வரியங்களும் பெற்று வளமுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

நம்பிக்கைகள்

தீவினை அகற்றும் காலபைரவர் : இந்த கோவிலில் காலபைரவர் சேத்திரபாலகராகவும், சொர்ணஆகர்ஷண பைரவராகவும் வேண்டுவன எல்லாம் அருளுகிறார். அவரை வழிபட பகை, பயம், வறுமை நீங்கி இழந்தவற்றை மீண்டும் பெற்று வளமுடன் வாழ்வார்கள். அஷ்டமியில் நெய்விளக்குடன் முந்திரி மாலை அணிவித்து, அபிஷேகம் செய்து அன்னதானம் செய்தால் குழந்தை பேறு கிடைக்கும். தீவினைகள் அகலும். நல் வினைகள் சேரும். 108 சிவலிங்க வழிபாடு : சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் உள்ள அம்பாள் பெரிய நாயகி, பக்தர்களுக்காக 108 சிவலிங்கங்களை தனது சன்னிதியில் நிறுவி வழிபடுவது இங்கே விசேஷமான ஒன்று. இந்தக் கோவிலில் திருமண வயதை எட்டிய கன்னியர்களும், காளையர்களும் இங்கு வழிபட்டு வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் துர்க்கை தேவிக்கு கால் மண்டலம் திருவிளக்கு ஏற்றி வழிபட விரைவில் திருமணம் நடை பெறும். இங்கு மணம் செய்துக்கொண்டால் நன்மக்கட்பேறு பெறுவதுடன், இல்லறவாழ்வில் பிரிவே வராது என்பது பக்தர்கள் நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

வியாழ பகவானுக்கு தரிசனம் : ஒரு முறை இந்திரன், தேவலோகத்தில் தனது சிம்மாசனத்தில் தேவர்கள் சூழ அமர்ந்திருந்தான். அப்போது தேவர் களின் குருவான வியாழ பகவான் அங்கு வந்தார். மாயையால் செல்வச் செருக்கும், அதிகார ஆணவமும் இந்திரனின் கண்களை மறைத்த காரணத்தால், தன்னுடைய குருவுக்கு அவன் எழுந்து நின்று மதிப்பளிக்க தவறினான். இதனால் கோபம் கொண்ட வியாழ பகவான் அங்கிருந்து வெளியேறினார். தேவகுரு இல்லாததாலும், அவரது சாபத்தாலும் இந்திரசபை பொலிவிழந்தது. தனது தவறை உணர்ந்த இந்திரன் வியாழ பகவானை பல இடங்களிலும் தேடினான். ஆனால் அவரோ தன்னை யார் கண்ணுக்கும் தெரியாத அரூபியாக மாற்றிக்கொண்டு, தனது கவுரவத்தை இழந்த வருத்தத்தில் வனாந்தரத்தில் வாசம் செய்தார். அப்போது கூகையூரில் நெல்லி வனத்தில் எழுந்தருளி இருந்த இறைவனை, மலர் தூவி, வேதங்கள் ஓதி தம் குறை தீர்க்க வேண்டினார். அவருக்கு சிவபெருமான் தரிசனம் தந்தருளினார். அப்போது சாபம் பெற்ற இந்திரனும் தமது தவறை உணர்ந்து, இங்கு வந்து வியாழ பகவானை வணங்கினான். அதன்பிறகு மீண்டும் தேவகுருவாக வியாழ பகவான் புகழுடன் வீற்றிருந்தார். வியாழ பகவானுக்கு அருளாசி புரிந்ததால் பொன்பரப்பின ஈஸ்வரன் (சொர்ணபுரீஸ்வரர்) எனும் திருநாமம் இங்குள்ள இறைவனுக்கு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். இந்த திருத்தலத்தில் உள்ள சொர்ண புரீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு கல்வியும், தொழிலும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இத்தல இறைவனை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

திருவிழாக்கள்

இந்தக் கோவிலில் சித்ரா பவுர்ணமி தேர்த் திருவிழா, ஆடிப்பூரம், ஆடிக் கிருத்திகை, ஆவணி சதுர்த்தி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கந்தசஷ்டி விழா, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, ஆருத்ரா தரிசனம், மகர சங்கராந்தி, தமிழ் புத்தாண்டு, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

காலம்

7 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கூகையூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சின்னசேலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top