Sunday Dec 22, 2024

ஆவணியாபுரம் நவ நரசிம்மர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி :

அருள்மிகு நவ நரசிம்மர் திருக்கோயில்,

ஆவணியாபுரம்,

திருவண்ணாமலை மாவட்டம் – 604503.

மொபைல்: +91 9629540448 / 9941756271

இறைவன்:

நவ நரசிம்மர்

அறிமுகம்:

திருமகளும் கருடாழ்வாரும் சிம்ம முகத்துடன் காட்சி தரும் திருத்தலம். நவ நரசிம்மர்கள் அருளாட்சி செய்வதால், ‘தட்சிண அஹோபிலம்’ என்று போற்றப்படும் திருத்தலம்.  பிருகு மகரிஷியின் பிரார்த்தனைக்கு இரங்கி, ஐந்து திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் திருக்கோலங்களில் பெருமாள் திருக்காட்சி அருளிய அற்புதத் தலம்…  இத்தனை மகிமைகளுக்கும் உரிய தலம் ஆவணி நாராயணபுரம். தற்போது ஆவணியாபுரம் என்று வழங்கப்படுகிறது.  

                    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி – ஆரணி சாலையில், வந்தவாசியிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவிலுள்ளது ஆவணியாபுரம். இங்கு பிரதான சாலையிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவிலுள்ளது நவ நரசிம்மர் ஆலயம். ஷேர் ஆட்டோ வசதி உண்டு.

புராண முக்கியத்துவம் :

                             மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் அலங்கார வளைவில், சிம்ம முகத்துடன் கூடிய திருமகளை மடியில் இருத்திய கோலத்தில் சுதைச் சிற்பமாகக் காட்சி தருகிறார் நரசிம்மர். அங்கிருந்து மலைக்குச் செல்லும் படிகள் தொடங்குகின்றன. 30 படிகளைக் கடந்ததும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தரிசிக்கலாம். மலையின் இடுக்கில் அமைந்திருக்கும் கருவறையில் மடியில் மகாலட்சுமி தாயாரை இருத்தியபடி காட்சி தருகிறார் ஸ்ரீலட்சுமி நரசிம்மர்.


ஸ்ரீநரசிம்மரின் திருமுக தரிசனம் குறித்தும்,  தாயாரின் திருமுகம் சிம்ம முகத்துடன் காட்சி தருவதற்கும் காரணமான ஒரு புராண நிகழ்ச்சி ஒன்றுள்ளது. “நரசிம்ம அவதாரம் நடைபெற்று அசுர சம்ஹாரம் முடிந்தபிறகு, தட்சிணப் பகுதியில் இந்த மலையில், இதோ இந்தக் குகையில்தான் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றினார் பெருமாள். அவரே இப்போது மூலவராக உள்ளார். புராண காலத்தில் இந்தத் தலத்தில் ஸ்ரீநரசிம்மர் உக்கிரமாக இருந்தார். அவரின் சினத்தைக் குளிர்விக்க பிரம்மா இங்கே யாகம் செய்தார்.

அப்போது, யாகத் தீயால் பெருமாளின் திருமுகம் பின்னமானது. இதனால் பதறிப்போன திருமகள், நரசிம்மரின் திருமுகத்தை தான்   ஏற்று ஸ்வாமியின் மடியில் அமர்ந்து அருள் செய்யத் தொடங்கினாள். பெருமாளுக்காக அவரின் முதல் அடியாரான கருடாழ்வாரும் சிம்ம முகம் தாங்கி சேவை புரிந்தார்’’ என்றார்.

மூலவருக்கு முன்பு இடப்புறத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக ஒரு நரசிம்ம மூர்த்தியும், அவருக்கு முன்பாக சிம்ம முக பிராட்டியை மடியில் இருத்தியபடி அமர்ந்த நிலையில் ஒரு நரசிம்மரும் காட்சி அருள்கின்றனர். கருவறையில் மூன்று நரசிம்ம மூர்த்திகள் உள்ளனர். மூலவருக்கு எதிரில் கருடாழ்வார் சிம்ம முகத்துடன் காட்சி தருகிறார். மற்றொரு கருடாழ்வார் வழக்கமான திருவடிவத்துடன் காட்சி தருகிறார். 

கருவறையை வலம் வரும்போது, தனிச் சந்நிதியில் அலர்மேல் மங்கை தாயாரை தரிசிக்கலாம். தாயார் சந்நிதிக்கு அடுத்தாற்போல் ஒரே சந்நிதியில் வீர நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், உக்கிர நரசிம்மர், பிரகலாத நரசிம்மர், மங்கள நரசிம்மர் என்று பஞ்ச நரசிம்ம மூர்த்திகள் தெற்கு நோக்கி அருள்காட்சி தருகின்றனர்.

அவர்களுக்கு அருகில் இரண்டு நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களை வழிபட்டால் ராகு, கேது தோஷம் விலகும் என்பது ஐதீகம். அடுத்துள்ள சந்நிதியில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் மற்றும் சுதர்சன மூர்த்தி ஆகியோரின் உற்சவ மூர்த்திகளையும் தரிசிக்கலாம். கருவறை வெளிச்சுற்றில் கருவறையை ஒட்டிய சிறிய பாதையில் சென்றால், வசிஷ்ட மகரிஷி பாறையில் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.

நம்பிக்கைகள்:

இந்தக் கோயிலின் விசேஷம் துலாபாரம். குழந்தை இல்லாத தம்பதியினர் இந்தத் தலத்துக்கு வந்து லட்சுமி நரசிம்மரை வேண்டிக்கொண்டால், விரைவி சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஸ்வாமியின் திருவருளால் பிள்ளை வரம் பெற்றவர்கள், தங்கள் குழந்தையைக் கொண்டு வந்து எடைக்கு எடை துலாபாரம் அளிக்கிறார்கள். அதேபோல், சுவாதி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபடுவதால். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்; திருமணத் தடைகள் நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். மேலும் பித்ரு தோஷம் போன்ற தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

சிறப்பு அம்சங்கள்:

                     பஞ்ச க்ஷேத்திர ஆலயம்: ‘`ஹிரண்யனை அழித்து தங்களைக் காத்த சிம்ம விஷ்ணுவை இங்கே தேவர்கள் வேதம் சொல்லி வழிபட்டார்கள். கலி காலத்தில் தேவர்கள் அனைவரும் வெப்பாலை மரங்களாக உருமாறி இன்றும் இந்த மலையில் நின்று வழிபட்டு வருகிறார்கள்.

பாரத தேசமெங்கும் முக்தி வேண்டி சுற்றித் திரிந்த பிருகு முனிவர் இங்கு வந்து தவமிருந்து வேண்டினார். அப்போது நரசிம்ம மூர்த்தி அவருக்குக் காட்சியளித்து முக்தி அளிக்க விழைந்தார்.

முக்திக்கு முன்னர் திருமாலின் ஐந்து வடிவங் களைத் தரிசிக்க விரும்பிய பிருகு முனிவருக்கு அருள் செய்ய, மலையின் மத்தியில் லட்சுமி நரசிம்மரா கவும், மலையின் மீது யோக நரசிம்மராகவும், நின்ற நெடிய ஸ்ரீநிவாஸ பெருமாளாகவும், சயனக்கோலத்தில் ஸ்ரீரங்கநாதராகவும், அழகே வடிவான ஸ்ரீவரதராஜராகவும் காட்சியளித்தார் இறைவன். இதனால் இந்த ஆலயம் பஞ்சக்ஷேத்திர ஆலயமாகப் போற்றப்படுகிறது.

இந்த ஆலயத்தின் விமானம் – புண்ணியகோடி விமானம்; தீர்த்தம் – ஆனந்த புஷ்கரணி. ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், அகோபிலம், சோளிங்கர் ஆகிய ஐந்து தலங்களையும் தரிசித்த புண்ணியம், இந்த ஆவணியாபுரம் தலத்துக்கு வந்து தரிசித்தால் கிடைக்கும். மலையின் மத்தியபாகத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் (இவர்தான் பிருகு முனிவருக்கு அஹோபில திவ்ய தேச திருக்காட்சி அருளியவர்), அவருக்கு முன்னால் உற்சவராக இரு நரசிம்மர்கள், பின்னர் தனிச் சந்நிதியில் ஐந்து நரசிம்மர்கள், மலையின் மீது யோக நரசிம்மர் என இங்கு ஒன்பது நரசிம்மர்களை சேவிக்கலாம் என்பதும் சிறப்பு’’

முப்பது படிகள் ஏறி ஸ்ரீலட்சுமி நரசிம்மரையும் மற்ற தெய்வங்களையும் தரிசித்ததும் அடுத்துள்ள 60 படிகளைக் கடந்து உச்சியில் திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாளை தரிசிக்கலாம். அவரை வலம் வரும்போது, வெளிச் சுற்றில் சோளிங்கர் ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆகியோர் தனித் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். மேலும் அமிர்த வல்லித் தாயாரும் தனிச் சந்நிதியில் அருள்கிறார்.

சத்ரு பயம் நீங்கும் சந்தோஷம் நிலைக்கும்: இந்த ஆலயத்தைச் சுற்றியுள்ள 27 கிராமங்களுக்கும் நரசிம்மரே காவல் தெய்வமாக இருந்து அருள்புரிகிறார். விளையாத வயலைக்கூட விளையவைக்கும் பெருமாள் என்பதால், இவரை வணங்கிய பிறகே, இங்குள்ள மக்கள் வேளாண் மையைத் தொடங்குகிறார்கள். அதன் பலனாக நல்ல விளைச்சல் ஏற்படுவதாக மனப்பூர்வமாக நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கைக்கு ஏற்ற பலனும் கிடைக்கவே செய்கிறது. விளைந்து வந்த தானியத்தில் சிறு பகுதியை கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். 

திருவிழாக்கள்:

திருப்பதியைப் போலவே சித்திரை, புரட்டாசி ஆகிய இரண்டு மாதங்களில் பிரம்மோற்சவம்; வைகாசி மாதம் நரசிம்ம ஜயந்தி; ஆடிப் பூரம்; கிருஷ்ண ஜயந்தி; திருக்கார்த்திகை; வைகுண்ட ஏகாதசி; மாசி மகம் ஆகிய விழாக்கள் நடைபெறுகின்றன.   

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆவணியாபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை, பாண்டிச்சேரி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top