Thursday Dec 26, 2024

ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் திருக்கோயில், சேலம்

முகவரி

அருள்மிகு காயநிர்மலேஸ்வரர் திருக்கோயில், ஆத்தூர், சேலம் மாவட்டம் – 636108.

இறைவன்

இறைவன்: காய நிர்மலேஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி

அறிமுகம்

ஸ்ரீ காய நிர்மலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் நகருக்கு அருகில் உள்ள ஆத்தூர் கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. நெருப்பு (அக்னி) மூலகத்தைக் குறிக்கும் வசிஷ்ட நதிக்கரையில் வசிஷ்டரால் நிறுவப்பட்ட பஞ்ச பூத ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலின் மூலவராக காய நிர்மலேஸ்வரர் உள்ளார். இறைவி அகிலாண்டேஸ்வரி ஆவார். பிரதோஷம், சிவராத்திரி, சோம வார விரதங்கள் உள்ளிட்ட பல விழாக்கள் நடத்தப்படுகின்றன.

புராண முக்கியத்துவம்

ராமபிரானின் குலகுருவான வசிஷ்டர், ஒரு சமயம் இப்பகுதியில் தவம் செய்தார். அப்போது அவரது தவத்திற்குப் பல இடையூறுகள் வந்தன. என்ன செய்வது என்று அவர் யோசித்தபோது, பூவும் நீரும் கொண்டு சிவபூஜை செய்தால், தீரும் இடர் யாவும் என்று யோசனை சொன்னார், நாரதர். அப்படியே சிவபூஜை செய்ய எண்ணிய வசிஷ்டர், தனது பெயரால் வசிஷ்டநதி எனும் தீர்த்தத்தினை உண்டாக்கிய பின், பூஜை செய்யத் தகுந்த இடம் தேடினார். அப்போது மேடான ஓரிடத்தில் அவரது கால் தடுக்கியது. திடுக்கிட்டுப் பார்த்த வசிஷ்டர், மேடான இடம் அந்த இடத்தில் பூமியில் இருந்து முளைத்த சிவலிங்கம் போல இருப்பதைக் கண்டார். அதுவே சிவ வழிபாட்டிற்கு ஏற்ற இடம் என உணர்ந்து அங்கேயே அமர்ந்தார். பூஜைகளை ஆரம்பித்தவர், தமது கால் இடறியதால் சிவலிங்க வடிவில் சற்று பின்னம் ஏற்பட்டிருப்பதைப் பார்த்தார். பழுதான திருவடிவை பூஜிக்கலாமா? அவர் தயங்க, ஓர் அசரீரி எழுந்தது. வசிஷ்ட மாமுனிவரே, நீர் தயங்காமல் பூஜை செய்யும். நிறைவாக நீர் தீபம் காட்டுகையில் ஓர் அதிசயம் நிகழும்..! அசரீரி சொன்னதை அரன் சொன்ன தாகக் கருதி ஆராதனைகளை ஆரம்பித்தார் முனிவர். சிவலிங்கத் திருமேனிக்கு அர்ச்சனை, ஆராதனைகளை முடித்து கடைசியாக தீப ஆராதனை காட்டிய வசிஷ்டர், அப்போது எழுந்த பிரகாசமான ஒளியால் ஒரு விநாடி கண்களை மூடினார். அவர் கண்களைத் திறந்தபோது பளீர் என்று ஓர் ஒளி நிறைந்திருந்தது அங்கே. பழுதடைந்த லிங்கத் திருமேனி இருந்த இடத்தில் குறை ஏதும் இல்லாத பளபளப்பான லிங்கத் திருமேனி இருந்தது. வசிஷ்டர், தாம் ஏற்றிவைத்த தீபத்தின் ஒளியே அந்த லிங்கத் திருமேனியில் பட்டு பிரதிபலித்து பேரொளியாகத் திகழ்வதைக் கண்டார். அந்த ஒளியே வசிஷ்டரின் தவத்திற்கு இடையூறாக வந்த அரக்கர்களின் மாயை இருளை ஓட்டியது. இன்னல் இருள் ஓட்ட ஜோதி வடிவாக வந்த இடப வாகனனை வணங்கினார் வசிஷ்டர். அந்தத் தலத்திலேயே கோயில்கொள்ளவும் வருவோர் வாழ்வில் வளம் சேர்க்கவும் வேண்டினார். அன்று வசிஷ்டரால் வழிபடப்பட்டவரே இந்த காயநிர்மலேஸ்வரர். காயம் என்றால், உடல். சிவபிரானின் உருவாகத் திகழ்வது சிவலிங்கம். நிர்மலம் என்றால் பழுது இல்லாதது என்று பொருள். தமது லிங்கத் திருவடிவில் இருந்த குறையை நீக்கி வசிஷ்டருக்குக் காட்சிதந்ததால், காயநிர்மலேஸ்வரர் ஆனார் இறைவன். கோயிலும் எழுந்தது. காலமாற்றத்தில் மன்னர்கள், சிற்றரசர்கள் என்று பலரால் புனரமைக்கப்பட்டும், சன்னதிகள் பல எழுப்பப்பட்டும் இன்று கம்பீரமாகக் காட்சிதருகிறது கோயில்.

நம்பிக்கைகள்

திருமண பாக்கியம் கிடைக்கவும், பிள்ளை வரம் பெறவும் பக்தர்கள் இங்குள்ள காயநிர்மலேஸ்வரரை மனதார தரிசித்துச் செல்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

கிழக்கு நோக்கிய ஐந்துநிலை ராஜ கோபுரம், சிவநாமம் தரித்து உயர்ந்து நிற்கிறது. கடந்து உட்சென்று முகப்பு மண்டபம் கடந்து நந்தி தரிசனம் செய்து, கருவறை முன் சென்றால், மங்கலான வெளிச்சத்திலும் பிரகாசம் பொருந்தியவராகக் காட்சி தருகிறார், இறைவன். அபிஷேகத்திற்குப்பின் அர்ச்சகர் தீபாராதனை காட்டும் போது அந்த தீபத்தின் ஒளி கண்ணாடிபோல் லிங்கத் திருமேனியில் எதிரொளிப்பதைக் பார்க்கலாம். சிந்தையுள் நினைத்து எந்தை சிவனை முந்தை வினைதீர வணங்குகிறார்கள் பக்தர்கள். அவர்களின் வாழ்வில் இருள் நீங்கி ஒளி நிறைவது நிச்சயம் என்பது அசைக்க இயலாத நம்பிக்கையாக இருக்கிறது. இறைவன் இருளை நீக்கிடும்போது அங்கே அம்பிகையே பிரகாசமாகத் தோன்றுவதாகச் சொல்வர். இங்கே அம்பிகை அகிலாண்ட ஈஸ்வரியாக, உலக உயிர்களைக் காக்கும் உத்தம நோக்குடன் கருணை மிளிரக் காட்சியளிக்கிறாள். நான்கு திருக்கரங்களுடன் காட்சிதரும் அவளை நாள்முழுதும் பார்த்தாலும் அலுக்காது. மணமாலையும் பிள்ளை வரமும் வேண்டி இவளை வணங்குவது தவறாமல் பலனளிப்பதாகச் சொல்கிறார்கள். வசிஷ்டருக்கு ஜோதிவடிவாகக் காட்சியளித்ததால் இத்தலத்தினை அக்னி ஸ்தலம் என்கிறார்கள். பஞ்சபூத வடிவில் மற்ற வடிவங்களை பரமன் வசிஷ்டருக்குக் காட்டியருளிய மற்ற தலங்கள், சுற்றுவட்டாரத்தில் இருக்கின்றன. இறைவனையும் இறைவியையும் வழிபட்டு பிராகாரத்தில் வலம் வந்தால், விதவிதமான பெயர்களுடன் காட்சிதரும் விநாயகர்கள்; பஞ்சபூத தலங்களில் அருளும் சிவ-பார்வதியார்; பாலனாக வள்ளி தேவசேனாபதியாக இருவடிவில் இருக்கும் முருகன்; சதுர்புஜ பைரவர், அஷ்டபுஜ பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் வடிவங்கள் என ஒரே கடவுளரின் வெவ்வேறு வடிவங்கள் அமைந்திருப்பது வித்தியாசமானதாக இருக்கிறது. மகாலட்சுமி, மகாசரஸ்வதி, தென்முகக் கடவுள், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, ஐயப்பன், சூரியன், சனிபகவான், நாகர்கள், நாககன்னி தரிசனமும் கிடைக்கிறது. வரம் அருளும் பாவனையில் காட்சிதரும் அனுமன் சன்னதியும் இருக்கிறது.

திருவிழாக்கள்

பிரதோஷம், சிவராத்திரி, சோம வார விரதங்கள்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஆத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top