Monday Dec 23, 2024

அருள்மிகு மகாகாலேஸ்வரர் (ஜோதிர்லிங்கம்) கோயில், உஜ்ஜைன்

முகவரி

அருள்மிகு மகாகலேஷ்வர் ஜோதிர்லிங்கா, ஜெய்சிங்புரா, உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்,456006

இறைவன்

இறைவன்: மகாகாலேஸ்வரர்(சிவன்)

அறிமுகம்

மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வரர் ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற சிவன் கோயில் ஆகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ளது. இது சிப்ரா ஆற்றாங்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். சடங்குகள் மூலம் சக்தி கொடுக்கப்பட்டு நிறுவப்படும் படிமங்கள் போலன்றி, இங்குள்ள முதன்மைக் கடவுளான, சிவனின் லிங்க வடிவம் தன்னுள்ளேயே சக்தியோட்டத்தை உள்வாங்கித் தானாகத் தோன்றியதாகக் நம்பப்படுகிறது. மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும். தந்திர மரபுகளில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தனித்துவமான அம்சம் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இங்கு மட்டுமே காணப்படுகின்றது.

புராண முக்கியத்துவம்

மகாகாளர் என்ற ஜோதிர்லிங்கத்தைப் பற்றிச் சிவபுராணத்தில் கூறியுள்ள கதை இது- அவந்திமாநகரில் விலாசன் என்ற அந்தணன் இருந்தான். சிறந்த சிவபக்தன். அவனுக்கு நான்கு பிள்ளைகள். இரத்தின மாலை என்ற மலையில் வாழ்ந்த தூஷணன் என்ற அரக்கன், இந்த நகரைச் சூறையாடி, மக்களைத் துன்புறுத்தினான். குடிகள் விலாசனை அணுகி, தங்களைக் காக்கும்படி வேண்டினர். சிவலிங்கம் பிடித்து வைத்து அன்றாடம் பூசை செய்வது அந்தணர் வழக்கம். ஒரு நாள் அவர் அப்படிச் செய்யத் தொடங்கிய போது, அந்த அரக்கன் வந்து, பூஜைப் பொருள்களைத் தூக்கி எறிந்து, சிவலிங்கத்தையும் அழித்தான். அந்தக் கணத்தில் பெருத்த சப்தம் எழுந்தது. எல்லாரும் திடுக்கிட்டனர். அந்த லிங்கத்திலிருந்து வெடித்துப் பிளந்து கொண்டு மகாகாளர் தோன்றி, தூஷணை அழித்தார். அரக்கன் அழிந்த மகிழ்ச்சியில் மக்கள், மகாகாளரை அங்கேயே தங்கி, தங்களைக் காக்கும்படி வேண்டினர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, மகாகாளர் லிங்க உருவில் ஆவிர்ப்பவித்தார். தேவகிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்த கண்ணனை யசோதையின் வீட்வீ டில் விட்டு, அங்கே பிறந்திருந்த பெண்ணை வசுதேவர் தூக்கி வந்தார். அந்தப் பெண்ணைக் கம்ஸன் விண்ணில் தூக்கி எறிந்து வாளால் வெட்டப் போனான். ஆனால் அந்தக் குழந்தை காளி உருக்கொண்டு இங்கே தங்கி விட்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. காளிதாசருக்கு அருள் புரிந்த காளி மாதா இவள்தான மகாகாளி வரலாறு : உஜ்ஜயினியில் மகாகாளர் கோயில் இருப்பது போலவே, மகாகாளி கோயிலும் சிப்ர நதிக்கரையில் உள்ளது. இக்காளி கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. விக்கிரமாதித்திய மன்னனும், பட்டியும் இந்த மகா காளியிடம் வரம் பெற்றுத்தான், பல வருடங்கள் ஆட்சி புரிந்து பல சாகசங்கள் செய்ததாகக் கூறப்படுகின்றன. இந்த மகா காளிக்குஹரசித்திதேவி என்ற வேறு பெயரும் உண்டு. இப்பெயருக்கு ஒரு புராணக்கதை கூறுகின்றனர். ஒரு சமயம் கயிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியும் வெகு உல்லாசமாகக் சொக்கட்டான் ஆடிக்கொண்டு இருந்தனர். அப்போது சண்டன், பிரசண்டன் என்ற இரண்டு அசுரர்கள் அங்கே வந்தனர். அவர்களிருவரும் தவமிருந்து மும்மூர்த்திகளாலும் வெல்ல முடியாத வரம் பெற்றிருந்தனர். வரத்தின் பலத்தினால் ஆணவம் கொண்ட அவ்விரு அரக்கர்களும் தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களை அடிமை ஆக்கினர். தேவர், முனிவர், மக்கள் யாவரையும் துன்பப்படுத்தினர். கயிலாயம் வந்து அங்கும் அமைதியைக் குலைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல் புரிந்து வந்த நந்தி தேவரை அடித்து இம்சை செய்தனர். சிவபெருமானும் பார்வதி தேவியும் ஆடும் சொக்கட்டான் ஆட்டத்திற்கு இடையூறு செய்தனர். சிவபெருமானைப் போருக்கும் அழைத்தனர். சிவபெருமான் பார்வதி தேவியிடம், சண்டன் பிரசண்டன் பெற்ற வரம் பற்றிக் கூறினார். அவர்களை அழைக்கும் வல்லமை பார்வதி தேவிக்கே உள்ளது என்றும் கூறினார். எனவே அவ்விரு அசுரர்களையும் அழித்து விடக் கூறினார். பார்வதி தேவியும் தன்பதியான அரனுடைய சித்தம் அறிந்து, தமது உல்லாசத்திற்குக் கேடு உண்டாக்கிய அசுரர்கள் மீது கடுங்கோபம் கொண்டு மகாகாளியாக மாறினார். நவசக்தி தேவிமார்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு, மிகுந்த கோபத்துடன் அசுரர்களுடன் போருக்குச் சென்றார். மகாகாளியின் உருவத்தைக் கண்ட அசுரர்கள் இருவரும் பயந்து போய், உஜ்ஜயினி காட்டுக்குள் ஓடி ஒளிந்தனர். மகாகாளி அவர்களை விடாமல் பின்தொடர்ந்து வந்து போரிட்டார். அரக்கரிருவரும் எருமைக்கடா உருவம் எடுத்து தேவியைப் பலமாகத் தாக்கினர். நவசக்தியுடன் தேவி சிங்கவாகனம் ஏறிவந்து, அவ்வரக்கர்களை வதம் செய்தார். அரன் என்னும் சிவபெருமான் சித்தத்தைப் பூர்த்தி செய்தமையால், மகாகாளிக்கு அரசித்தி தேவி எனப்பெயர் வழங்கலாயிற்று. அரசித்தி தேவியாக மகாகாளி தோன்றிய இடத்தில் ஒரு கோயில் கட்டி மக்கள் வழிபட்டு வருகின்றனர். மகா காளிக்கு எருமைக்கடா பலியிடும் வழக்கமும் ஏற்பட்டது. சிப்ரா நதிக்கரையில் அரசித்திதேவி கோயில் இன்றும் உள்ளது. விக்ரமாதித்தியன் குலதெய்வம் இந்தத் தேவியே ஆகும். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவராகவும் வரப்பிரசாதியாகவும் இன்றும் விளங்கி வருகின்றார்.

நம்பிக்கைகள்

அசுரகுணம் மறைய, கல்வியில் சிறந்து விளங்க இங்குள்ள சிப்ரா நதியில் நீராடி வழிபாடு செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

ஒரு தடவை பூஜித்த பொருள்களை நிர்மால்யம் என்பார்கள். நிர்மால்யத்தைக் களைந்து புதிததாக அலங்கரிப்பது மரபு. ஆனால், இந்த வழக்கத்தை இந்த ஜோதிர்லிங்கத்தைப் பொறுத்தவரை அநுஷ்டிப்பதில்லை. பிரசாதத்தையும், வில்வம் போன்ற தளிர்களையும் மீண்டும் உபயோகிப்பது வழக்கமாக இருக்கிறது. மகாகாளவனம் என்று இந்தத் தலத்தை ஸ்கந்தபுராணம் கூறுகிறது. சிப்ரா நதி, புண்ணிய தீர்த்தங்களில் மிகவும் முக்கியமானது என்று அக்கினி புராணம் குறிக்கிறது. இந்த நதியில் மூழ்கி மகாகாளரை வணங்கி, காளி தரிசனம் செய்தால், கல்வியும் அறிவும் பெருகும், அசுர குணம் மறையும் என்பது அனுபவ உண்மை. உஜ்ஜயினியை உத்+ஜைன = ஜைன சமயத்தை உச்ச நிலைக்கு கொண்டு வந்த நகரம் என்பது பொருள். மாமன்னர் விக்ரமாதித்தன் அரசாண்டு வெற்றியை தந்த மாநகர். தேவாமிர்தம் சிந்திய நான்கு புண்ணிய ஊர்களில் இதுவும் ஒரு புனித தலமாகும். பல மன்னர்கள் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த தலம். உஜ்ஜயினி காலம் காலமாகப் பல சிறப்பம்சங்கள் கொண்ட நகரம். புராண காலம், சரித்திர காலம், இராமாயண, மகாபாரத இதிகாசங்கள் காலம் ஆகிய கால கட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த தலம். கிருஷ்ணர், பலராமர், சுதாமர் ஆகியோர் உஜ்ஜயினியில் தான் சாந்தீப முனிவரிடம் கல்வி பயின்றுள்ளார்கள். கிருஷ்ணர் இங்கே வானசாத்திரம் கற்றதாகவும் கூறுகின்றனர். இப்பிரதேசத்தில் முன்னொரு காலத்தில் அசுரர்களும், வேதாளங்களும் நிறைந்திருந்தமையால், பக்தர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் கயிலையை விட்டு இங்கே சதா எழுந்தருள வேண்டியது ஆகிவிட்டது. முன்காலத்தில் மாளவதேசத்தின் தலைநகராகவும், விக்கிர மாதித்திய மகாராஜாவின் தலை நகரமாகவும் விளங்கியது. இந்துக்கள், பவுத்தர்கள், ஜைனர்கள் ஆகிய மதத்தினரின் முக்கிய யாத்திரை தலமாகும். தேவாமிர்தம் சிந்திய நான்கு புண்ணிய ஊர்களில் இதுவும் ஒரு சிறந்த புனிதத் தலமாகும். அசோகச் சக்ரவர்த்தி உஜ்ஜயினி வர்த்தகர் மகளையே மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். மவுரியப் பேரரசின் கிளைத் தலைமைப் பீடம் இங்கே இருந்திருக்கிறது. அசோகருடைய கல்வெட்டுகளில் உஜ்ஜயினி பேசப்படுகிறது. பாணினி, பெரிபுளூசு, ஹியான்சான் போன்ற வெளிநாட்டுத் தூதர்கள் உஜ்ஜயினி வந்து இத்தலத்தைப் புகழ்ந்து எழுதியுள்ளார்கள். பதஞ்சலி, காளிதாசன், திருமங்கை ஆழ்வார் ஆகியோர் தமது இலக்கியப் படைப்பில் புகழ்ந்து பாடல்கள் பாடியுள்ளார்கள். திரிபுர அசுரர்களைச் சிவபெருமான் வெற்றி கொண்ட புனிதத்தலம் உஜ்ஜயினி ஆகும். மகாபாரத காலத்தில் அவந்தி இளவரசர்கள், கவுரவர்கள் பக்கம் நின்று மகாபாரதப்போரில் யுத்தம் புரிந்தனர் என்றும் கூறப்படுகிறது. உஜ்ஜயினியில் சித்திவடம் என்ற அதிசய ஆலமரம் ஒன்று உள்ளது. அது பல நூறு வருடங்களாகச் சிறிய அளவிலேயே இருந்து வருகிறது. அக்கினித் தீர்த்தமெனும் புனித சிப்ராநதி தீர்த்தம் நல்ல முறையில் வைத்துள்ளார்கள். இங்கே இராமாயண காலத்தில் இராமர் வந்து நீராடியதால், ராமர் காட் என்னும் குளியல் கட்டம் ஏற்பட்டு உள்ளது. இங்கே மீன்களை கடவுளாக வழிபடுகின்றனர்.

திருவிழாக்கள்

கார்த்திகை மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தலத்தில் கும்பமேளா விழா கொண்டாடப்படும் புனிதத் தலம்.

காலம்

2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

உஜ்ஜைன்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஜெய்சிங்புரா

அருகிலுள்ள இரயில் நிலையம்

உஜ்ஜைன்

அருகிலுள்ள விமான நிலையம்

இந்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top