Friday Dec 27, 2024

வெள்ளை விநாயகர்!

கும்பகோணத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஸ்ரீசெஞ்சடைநாதர் சிவன் கோவிலில், திருவலஞ்சுழி எனும் வெள்ளை வாரணப் பிள்ளையார் அருள்புரிகிறார்.

இந்த விநாயகரை இந்திரன் உருவாக்கியதாகப் புராணம் கூறுகிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது பல தடைகள் ஏற்பட்டன. விநாயகரை வழிபடாமல் செயல்பட்டதால்தான் இவ்வாறு நிகழ்கிறது என்பதை உணர்ந்த இந்திரன், உடனே கடல் நுரையால் ஒரு விநாயகரை உருவாக்கி வழிபட்டு பின் முயற்சியைத் தொடர்ந்தான். அதனால் அமிர்தமும் கிடைத்தது.

இந்த விநாயகரை வழிபட அனைவரும் போட்டி போட்டார்கள். இறுதியில் கிருதயுகத்தில் திருக்கயிலையிலும், திரேதாயுகத்தில் வைகுண்டத்திலும், துவாபரயுகத்தில் சத்யலோகத்திலும், கலியுகத்தில் பூலோகத்திலும் வழிபடுவதென தேவர்கள் முடிவெடுத்தார்கள். அதன்படி இந்த விநாயகர் தற்போது இங்கு அருள்புரிகிறார்.

கடல்நுரையாலான இவர் அளவில் சிறியவர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. பச்சைக் கற்பூரம் மட்டுமே சாற்றுவர். இவ்வாலய உற்சவ விநாயகப் பெருமான், வேணி- கமலை எனும் இரு சக்திகளுக்கு மத்தியில் அமர்ந்துள்ளார்.

வடநாட்டில் வெண்பளிங்குக் கல்லாலான விநாயகரை பல இடங்களில் தரிசிக்கலாம். தமிழகத்தில் வெள்ளை நிறத்தில் விநாயகரை தரிசிப்பது அரிது. ஆனால் தற்பொழுது வெள்ளைப் பளிங்குக் கல்லால் உருவாக்கப்பட்ட வெண்விநாயகர், மயிலாடுதுறை கூறைநாடு ஸ்ரீநவசக்தி சாரதாதேவி கோவிலில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். கருங்கல்லாலான விநாயகரை அரசமரத்தடியிலும், பல கோவில்களிலும் தரிசிக்கலாம்.

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top