Thursday Dec 26, 2024

வெஞ்சமாக்கூடல் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், கரூர்

முகவரி

அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர்- 639 109. கரூர் மாவட்டம். போன்: +91-4324- 262 010, 238 442, 99435 27792

இறைவன்

இறைவன்: கல்யாண விகிர்தீஸ்வரர், கல்யாண விகிர்தேஸ்வரர் இறைவி: பண்ணேர் மொழியம்மை, மதுரபாஷினி

அறிமுகம்

வெஞ்சமாங்கூடலூர் விகிர்தீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரரால் பாடல் பெற்ற இத்தலம் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுந்தரரின் பாட்டில் மகிழ்ந்த இறைவன் கிழவி வேடம் பூண்டு சுந்தரரின் பிள்ளைகளை ஈடுகாட்டிப் பொன் கொடுத்தார் என்பது தொன்நம்பிக்கை. இந்த கோவில் வெஞ்சமன் எனும் வேட்டுவ மன்னனால் கட்டப்பட்டது.மேலும் இத்தலம், வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும்; அமராவதியின் கிளை நதியான சிற்றாறு, அமராவதியுடன் கூடுமிடத்தில் உள்ளதாலும் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது. இது தேவேந்திரன் வழிபட்ட தலமாகும்.

புராண முக்கியத்துவம்

தேவர்களின் தலைவனான இந்திரன், கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். அவளை அடைவதற்காக சமயம் பார்த்து காத்திருந்த அவன், ஒருநாள் விடியும் முன்பே கவுதமர் ஆசிரமத்திற்கு சென்றான். சேவல் வடிவம் எடுத்து கூவினான். அதைக்கேட்ட கவுதமர் விடிந்து விட்டது என எண்ணி ஆற்றிற்கு நீராடச் சென்றுவிட்டார். அப்போது, இந்திரன் கவுதமரின் வடிவம் எடுத்து ஆசிரமத்திற்குள் புகுந்தான். அவனை, தன் கணவர் என்றெண்ணிய அகலிகை, பணிவிடைகள் செய்தாள். இதனிடையே ஆற்றிற்கு சென்ற கவுதமர் பொழுது சரியாக விடியாமல் இருந்ததைக் கண்டார். ஏதோ சூழ்ச்சி நடந்திருப்பதை உணர்ந்த அவர் வீட்டிற்கு திரும்பினார். கவுதமரைக் கண்ட இந்திரன், பூனை வடிவம் எடுத்து தப்ப முயன்றான். நடந்த நிகழ்ச்சிகளை ஞானதிருஷ்டியில் அறிந்த கவுதமர், அவனது உடல் முழுதும் கண்ணாக மாறும்படி சபித்துவிட்டார். சாபம் பெற்ற இந்திரன் பூலோகத்தில் பல சிவதலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி தான் செய்த பாவத்திற்கு விமோசனம் தேடினான். இத்தலத்திற்கு வந்த இந்திரன், சிவனை வணங்கி தவம் செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தகுந்த காலத்தில் சாபம் நீங்கப்பெறும் என்றார். அவன் தனக்கு காட்சி தந்து அருளியது போலவே, இங்கிருந்து அனைவருக்கும் அருளவேண்டுமென சிவனிடம் வேண்டினான். சிவனும், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.

நம்பிக்கைகள்

திருமண தோஷம், புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக் கொள்ளலாம். குறிப்பாக பெண்களின் கோபத்திற்கு ஆளானவர்கள் அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

சிவத்தல யாத்திரை வந்த சுந்தரர், இத்தலத்திற்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த பொன்னும், பொருளும் தீர்ந்து விட்டது. எனவே, விகிர்தீஸ்வரரை வணங்கி பொன் வேண்டும் எனக்கேட்டார். சிவன் தன்னிடம் “பொன் இல்லை’ என்றார். “உன்னிடம் இல்லாத பொருள் ஏது?’ என்று சொல்லி கட்டாயப்படுத்தி பொன் கேட்டார் சுந்தரர். அப்போதும் சிவன், “”தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. உனக்கு பொன் தரவேண்டுமானால் எந்த பொருளையாவது அடமானம் வைத்துத்தான் தரவேண்டும்,” என்றார். சுந்தரரும் விடுவதாக இல்லை. “எதையாவது வைத்தாவது எனக்கு பொன் தாருங்கள்,’ என்றார். சுந்தரருக்கு உதவி செய்ய எண்ணிய சிவன், பார்வதி தேவியை மூதாட்டியாக மாற்றி அங்கு வரச்செய்தார். அவளிடம் முருகன், விநாயகர் இருவரையும் கொடுத்துவிட்டு, அவர்களுக்கு மாறாக பொன் தரும்படி கேட்டார். அவரும் பொன் தந்தார். அதனை சுந்தரருக்கு கொடுத்தார். நண்பன், உதவி என்று தன்னிடம் வந்தபோது தன் பிள்ளைகளை அடமானம் வைத்து உதவி செய்தார் இத்தலத்து சிவன். இவ்வாறு நட்புக்கு மரியாதை செய்த சிவனாக இவர் இருக்கிறார். இவரிடம் வேண்டிக் கொண்டால் நண்பர்களுக்குள் ஒற்றுமை கூடும், நல்ல நண்பர்கள் கிடைக்கப்பெறுவர் என்கின்றனர். முருகன் சிறப்பு: பிரகாரத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் 6 முகங்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை அருணகிரியார், “”வெஞ்சக்கூடல் பெருமானே!” என்று பதிகம் பாடியிருக்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியர்கள் இவருக்கு திருக்கல்யாணம் செய்து வைத்து வேண்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதால் அவர்கள் மீண்டும் இணைந்து தாம்பத்யம் சிறக்கும் என நம்புகிறார்கள். கருவறையில் “விகிர்தீஸ்வரர்’ நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். விகிர்தீஸ்வரர் என்றால் “நன்மைகள் தருபவர்’ என்று பொருள். இவரை வழிபடுபவர்கள் தங்களது பாவங்கள் அனைத்தும் விலகப்பெற்று, நன்மைகள் கிடைக்கப்பெறுவர் என்பது நம்பிக்கை. அம்பாள் பண்ணேர் மொழியம்மை சுவாமிக்கு இடப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். முன்மண்டபத்தில் நடராஜர் அருளுகிறார். பிரகாரத்தில் நால்வர், அறுபத்து மூவர் மற்றும் பஞ்சலிங்க சன்னதியும் இருக்கிறது. இக்கோயில் சுவாமியை வணங்கிவிட்டு வெளியேறும்போது, படிகளில் ஏறிச்செல்லும்படியாக பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் துன்பப்படுபவர்கள் இங்கு வணங்கிவிட்டு திரும்பும்போதே, வாழ்வில் ஏற்றம் உண்டாகிவிடும் என்பதை இந்த அமைப்பு குறிப்பதாக சொல்கிறார்கள். மணிமுத்தாறு, குடகனாறு ஆகிய இரு ஆறுகள் சேரும் ஊர் என்பதால் இவ்வூருக்கு “”கூடல் ஊர்” என்று பெயர்.

திருவிழாக்கள்

மாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வெஞ்சமாக்கூடல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top