Sunday Dec 22, 2024

வடபக்கஅக்கிரஹாரம் சிதம்பரேசர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி

வடபக்கஅக்கிரஹாரம் சிதம்பரேசர் சிவன்கோயில். கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 402.

இறைவன்

இறைவன் : சிதம்பரேசர் இறைவி: சிவகாமி

அறிமுகம்

கும்பகோணம் – நாச்சியார்கோவில் வளைவு நெளிவான சாலையில் அரசலாற்றை தாண்டியதும் இடதுபுறம் அழகாபுத்தூர் (அரிசில்கரைபுத்தூர்) கோயிலுக்கு ஒரு ஆர்ச் இருக்கும் அதனை தாண்டி அடுத்த 200மீட்டர் தூரத்தில் வலதுபுறம் கருவளர்ச்சேரி செல்லும் சாலையில் சென்றால் வடபக்கஅக்ரஹாரம் உள்ளது. இங்கு சுமார் 800 ஆண்டு பழமையான ஏனநல்லூர் – வடபக்கஅக்ரஹாரம் சிவன் கோயில் உள்ளது. பழமையான இக்கோவில் 70 ஆண்டாக பூஜை இன்றி சிதிலமடைந்து, பராமரிப்பின்றி கிடந்தது. இக்கோயிலில் இருந்து 13ம் நூற்றாண்டின் கல்வெட்டுக்கள் சில கிடைத்தன. இரண்டு லிங்கங்களை தவிர வேறு சிலைகள் யாவும் களவாடப்பட்ட நிலையில் கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தினர் முயற்சியால் உழவாரப்பணி மற்றும் பிரதோஷம், சிவராத்திரி வழிபாடு தொடங்கப்பட்டது. கோவை வசந்தகுமார், கோமல் சேகர், மற்றும் நல்லோர் பலரின் முயற்சியால் ஏறக்குறைய புதிதாகவே ஒரு ஆலயம் எழுப்பபட்டது. . விநாயகர், முருகன், அம்பாள், நந்தி, சண்டேசுவரர், பலிபீடம் போன்ற திருமேனிகள் மகாபலிபுரத்தில் உருவாக்கப்பட்டு பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு 2010ல் குடமுழுக்கு கண்டது. இறைவன்- சிதம்பரேசர் இறைவி- சிவகாமி. கருவறை கோட்டத்து தெய்வங்கள் ஏதுமில்லை, வழமையான பாகத்தில் சண்டேசர் உள்ளார். கருவறையின் நேர் பின்புறம் பெரிய லிங்கமூர்த்தி உள்ளார். பெயர் அறியமுடியவில்லை. வடகிழக்கு பகுதியில் சில சிதைந்த கற்களுடன் கைகூப்பிய நிலையில் ஒரு அரசரது சிலை உள்ளது. முழுமையாக செதுக்கப்படாததால் அவரை அடையாளம் காண இயலவில்லை. ஆண்டுகள் பத்து கடந்தும் கோயில் எதிர்பார்த்த அளவு வளர்ச்சியடையவில்லை. காரணம் உள்ளூர் அன்பர்களின் ஈடுபாடின்மையும் ஒரு காரணம். இரண்டாவது காரணம் வெளியூர் பக்தர்களான நாம் அனைத்து கிராம சிவாலயங்களையும் தரிசிக்க செல்லாமல் பரிகார கோயில் என சோதிடன் சொன்னதை நம்பி கட்டணம் கட்டி, விலங்கினங்கள் போல் இரும்புக்குழாய் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இறைவன் எல்லைகள் இல்லாதவன், இரும்புகூண்டு கோயில்களில் அவனை காண இயலாது, இரும்புக்குழாய் பாதையின் கடைசியில் அவனுக்கு வடிவம் கொடுத்த கருங்கல் மட்டுமே இருக்கும். ஆத்மார்த்தமாக செய்யப்படும் ஒரே ஒரு கால பூஜையை விரும்பி ஏற்க உயிர்த்தெழுந்த கிராம சிவாலயங்களில் மட்டுமே அவன் உறைகிறான். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

800 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அழகாபுத்தூர் கோயில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top