Monday Dec 23, 2024

முத்துதேவன்பட்டி நாககாளியம்மன் திருக்கோயில், தேனி

முகவரி :

அருள்மிகு நாககாளியம்மன் திருக்கோயில்,

முத்துதேவன்பட்டி,

தேனி மாவட்டம் – 625 531.

போன்: +91- 97889 31246, 96779 91616.

இறைவி:

நாககாளியம்மன்

அறிமுகம்:

 முத்துதேவன்பட்டியில் நாககாளியம்மன் கோயில் உள்ளது. முல்லை ஆற்றின் மேற்குக் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. அன்னை அம்பிகை திரிசூலம், பாம்பு மற்றும் உடுக்கை, குங்குமம் ஆகியவற்றை தாங்கி நிற்கிறாள். இது 800 ஆண்டுகள் பழமையான கோவில். நாககாளியம்மன் அம்மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கடைபிடிக்கப்படும் ஆடை அலங்காரத்தை போன்று பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ காமாட்சி அம்மன் தனி சன்னதியில் பனை கூரையுடன் உள்ளார்.

புராண முக்கியத்துவம் :

       திருமண பாக்கியத்தை வழங்கும் நாக காளியம்மன் முத்துதேவன்பட்டியில் அருள்பாலிக்கிறாள். இவளுக்கு மாதம் ஒருமுறை, பிரபல கோயில்களில் அம்பாள் அலங்காரம் செய்யப்படுவதும், அதை மாதம் முழுவதும் கலைக்காமல் வைத்திருப்பதும் விசேஷம். முற்காலத்தில் இப்பகுதியில் சங்குப்பூ செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்த பகுதியில் ஒரு புற்று இருந்தது. அவ்வூர் சிவபக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்பிகை, தான் புற்றுக்குள் இருப்பதாக உணர்த்தினாள். அதன்படி புற்றைப் பார்த்த போது, அதற்குள் அம்பாளின் சுயம்பு வடிவம் இருந்ததைக் கண்டனர். பின், அம்பிகைக்கு சிலை வடித்து, புற்றுக்கு மேலேயே பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர். புற்றில் தானாகத் தோன்றியதால் அம்பிகைக்கு “சுயம்பு நாககாளியம்மன்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

நம்பிக்கைகள்:

திருமணத்தில் தடை உள்ளவர்கள், நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

மாதம் ஒரு அலங்காரம்: பவுர்ணமி, அமாவாசை நாட்களில் இரவில் ஹோமத்துடன், நாககாளியம்மனுக்கு பூஜை நடக்கும். பவுர்ணமி இரவு பூஜைக்குப்பின், அம்பிகைக்கு பிரசித்தி பெற்ற 108 அம்பிகையரில் ஒருவரைப்போல அலங்காரம் செய்கின்றனர். உதாரணமாக சமயபுரம் மாரியம்மன், மதுரை மீனாட்சியம்மன் போன்ற அலங்காரங்கள் செய்யப்படும். மார்கழியில் ஆண்டாள் அலங்காரம் செய்யப்படுவது விசேஷம். சரஸ்வதி பூஜையன்று அம்பிகை வெண்ணிற பட்டு அணிந்து சரஸ்வதியாக காட்சி தருவாள். அன்று, தாமரை மொட்டால் குழந்தைகள் நாக்கில் எழுதி அட்சராப்பியாசம் செய்கின்றனர். அந்தந்த ஊர்களிலுள்ள அம்பிகைக்கு எந்த முறைப்படி பூஜை நடக்குமோ, அதே போல இங்கும் பூஜை நடக்கும். நைவேத்யமும் மாறுபடும். அடுத்த பவுர்ணமி வரையில் அம்பிகை இதே அலங்காரத்தில் காட்சி தருவது இன்னும் விசேஷம்.

திருமண பிரார்த்தனை: இங்குள்ள சொர்ணலிங்கேஸ்வரர் அஷ்டோத்ர லிங்கமாக (ஒரு பெரிய லிங்கத்தில் 108 லிங்கம் வடிப்பது) காட்சி தருகிறார். ஆவுடையாருக்கு கீழுள்ள பீடபீ த்தில் நந்தி இருக்கிறது. திருமணத்தடை உள்ளோர் சொர்ணலிங்கேஸ்வரர் மற்றும் அம்பிகைக்கு விரலி மஞ்சள் மாலை அணிவிக்கின்றனர். அதை மீண்டும் பெற்று வீட்டில் வைத்து பூஜிக்கிறார்கள். இதனால், விரைவில் நல்ல வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை. ஜாதகரீதியாக ஆண்களுக்கு 7ம் இடமும் (களத்திர ஸ்தானம்), பெண்ணுக்கு 8ம் இடமும் (மாங்கல்ய ஸ்தானம்) திருமண பாக்கியத்தை நிர்ணயிக்கும் இடங்களாகும். இதனடிப்படையில் இம்மரத்தை 7 அல்லது 8 முறை வலமாகவும், மீண்டும் இடமாகவும் சுற்றுகின்றனர்.

கரும்புபால் பொங்கல்: முல்லையாற்றின் மேற்கு கரையில் கோயில் அமைந்துள்ளது. அம்பிகையின் கைகளில் உடுக்கை, நாகம், திரிசூலம் மற்றும் குங்குமம் இருக்கிறது. சிம்ம வாகனத்தின் மீது வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள். நவராத்திரியை ஒட்டி வரும் செவ்வாய்க்கிழமை துவங்கி மூன்று நாள் விழா நடக்கும். இவ்வேளையில் பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அம்பிகைக்கு கூழ் படைத்து பூஜை நடக்கும்.

திருவிழாக்கள்:

பவுர்ணமி, அமாவாசை,மகா சிவராத்திரி, நவராத்திரி நாட்களில் இரவில் ஹோமத்துடன், நாககாளியம்மனுக்கு பூஜை நடக்கும்.

காலம்

800 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

முத்துதேவன்பட்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top