Friday Dec 27, 2024

மணக்கரை கூணான்டார்சுவாமி சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :

மணக்கரை கூணான்டார்சுவாமி சிவன்கோயில்,

மணக்கரை, கூத்தாநல்லூர் வட்டம்,

திருவாரூர் மாவட்டம் – 610206.

இறைவன்:

கூணான்டார்சுவாமி

அறிமுகம்:

திருவாரூர் திருத்துறைபூண்டி சாலையில் உள்ள மாவூரில் இருந்து வடபாதிமங்கலம் சாலையில் திரும்பி ஊட்டியாணி வரை 5 கிமீ சென்று அதன் பின்னர் தெற்கில் புள்ளமங்கலம் வழி 3 கிமீ சென்றால் வெண்ணாற்றின் கரையோர கிராமமாக உள்ளது. வெண்ணாறு இவ்வூரை உள்ளடக்கி வடபுறத்தில் இருந்து தென்புறமாக திரும்பி மாலையிட்டாற்போல் செல்கிறது. இன்றைக்கு 800 ஆண்டுகளின் முன்னம் 1223- 3ம் இராஜராஜசோழன் காலத்தில், இத் திருக்கோயிலுக்கு வழங்கிய கொடைகள் குறித்த கல்வெட்டு ஒன்று அர்த்த மண்டபத்தின் வடபுற குமுதத்தில் உள்ளது. இந்நிலம்‌ தலைகுலமுடையானிடமிருந்து 1500 காசுகளுக்கு திருகாமத்துக்‌ காணியாக விலைக்கு வாங்கப்பட்டதாக” கூறப்பட்டுள்ளது.

ஊரின் பெயர் அன்று குறுப்பனாங்குடி என்றிருந்தது இப்போது மணக்கரை எனப்படுகிறது. சாம்ராஜ்யங்கள் மாறும்போது புதிய நிபந்தங்கள் கொடுக்கப்பட்டு அன்றைய மன்னர்கள் பெயரில் மாற்றப்படுவது வழக்கம். அருள்மிகு கூணான்டார் சுவாமி திருக்கோயில், மணக்கரை கிராமத்தின் மத்தியில் பெரியதொரு குளத்தின், மேல்கரையில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் சிவனாண்டார், கூன்ஆண்டார், தேன்ஆண்டார் ஆகிய சிவ ஸ்தலங்களின் தலைமை கோவிலாக செயல்பட்டு வந்துள்ளது. சிவனாண்டார் கோயில் அருகாமையில் உள்ளது, தேன் ஆண்டார் கோயில் பற்றி தகவல் இல்லை. கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரத்துடன் கோயில் இரண்டு ஏக்கர் பரப்பில் பெரிய வளாகமாக அமைந்துள்ளது.

அழகிய சோழநாட்டு கருங்கல் கட்டுமானத்தில் கருவறை மிளிர்கிறது, பிரஸ்தரம் வரை கருங்கல்லும், அதற்குமேல் செங்கல் கொண்டு துவிதள விமானமும் அமைக்கப்பட்டு உள்ளது. பஞ்ச கோஷ்டங்கள் உள்ளன, அதில் தக்ஷ்ணமூர்த்தி தென்புறத்திலும், அருகில் விநாயகர் வைக்கவேண்டிய மாடத்தில் ஒரு பெண் தெய்வத்தின் சிலை வைக்கப்பட்டு உள்ளது. மேற்கில் லட்சுமி நாராயணர் சிலையும், வடபுறம் துர்க்கையும் உள்ளனர். கருவறையில் இறைவன் கூணான்டார்சுவாமி கிழக்கு நோக்கி உள்ளார். சதுர ஆவுடையார் கொண்டு சிறிய உருண்டை வடிவ பாணன் கொண்டு விளங்குவதால் கூன் ஆண்டவர் என அழைக்கப்பட்டிருக்கலாம். இறைவன் முன்னம் கருவறையுடன் இணைந்த இடைநாழி அதன் முன்னர் நாயக்கர் கால பாணியில் கூம்பு வடிவ மண்டபங்கள் நீண்டு உள்ளன. அதில் தெற்கு நோக்கிய நடராஜர் சன்னதி உள்ளது. இங்குள்ள நடராஜர் திருமேனி அழகானது மார்கழியில் மட்டும் கொண்டுவருவார்கள் என நினைக்கிறேன்.

இந்த கூம்பு வடிவ முக மண்டபத்தின் வாயிலில் இருபுறமும் மாடங்களுக்குள் அடங்கிய இரு துவார பாலகர்கள் உளள்னர். இறைவன் முன்னர் சற்று நீண்ட இடைவெளியில் நந்தி தனி மண்டபத்தில் உள்ளார். நந்தியும் சற்று தலையை வலதுபுறம் திரும்பிய நிலையில், அதன் கழுத்தில் தொங்கும் சதை மடிப்புகள் கூட அழகாக வடிக்கப்பட்டு உள்ளன. தனி ஆலயமாக சோமகுலநாயகி தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளார்கள். அம்பிகையும் நம்மை அமைதியான தோற்றத்தில் ஆட்கொண்டருள்கிறார். திருக்கோயில் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் விநாயகர் மற்றும் சுப்ரமணியர் தனி சிற்றாலயம் கொண்டு விளங்குகின்றனர். அதில் வள்ளி தெய்வானை சமேத முருகனின் திருமேனி அப்படி ஒரு அழகு. சில நூறாண்டு பழமையாக இருக்கலாம். வடகிழக்கில் ஒரு கிணறும், அருகில் நவக்கிரக மண்டபம் உள்ளது ஆனால் நவகிரகங்களை காணவில்லை.

சமீபத்தில் குடமுழுக்கு செய்யப்பட்ட தேதி – 11/09/2011 குருக்கள் வீடு அருகில் உள்ளதால் இக்கோயிலில் காலை மாலை பூசைகள் முறையாக நடக்கின்றன. மார்கழி மாதம் ஆருத்திரா தரிசனம் முக்கிய விழாவாக நடைபெறுகிறது. அக்காலத்தில் தெப்ப உற்சவம் தீர்த்தவாரி உற்சவங்கள் நடைபெற்று வந்த திருக்குளத்தில் இன்றும் அவையெல்லாம் நிகழ்த்த வேண்டும், அதற்கு இறையருள் துணை செய்யவேண்டும்.

காலம்

10000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மணக்கரை

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top